Tuesday, December 26, 2006

பெரியபுராணம் - அமர்நீதிநாயனார் புராணம்

திருத்தொண்டர் புராணம்
என்று வழங்குகின்ற
பெரியபுராணம்
யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
கத்தியரூபமாக செய்தது


முதலாவதுதில்லைவாழந்தணர் சருக்கம்
அமர்நீதிநாயனார் புராணம்

பழையாறை வணிகாமர் நீதி யார்பாற்
பரவுசிறு முனிவடிவாய்ப் பயிலு நல்லூர்க்
குழைகாதர் வந்தொருகோ வணத்தை வைத்துக்
கொடுத்ததனை யெடுந்தொளித்துக குளித்து வந்து
தொழிலாரு மதுவேண்டி வெகுண்டு நீர்த்
துலையிலிடுங் கோவணநேர் தூக்கு மென்ன
வெழிலாரும் பொன்மனைவி யிளஞ்சே யேற்றி
யேறினார்வா னுலகுதொழ வேறி னாரே

சோழநாட்டிலே, பழையாறை என்னும் ஊரிலே, வைசியர் குலத்திலே, பெருஞ்செல்வமுடையவரும் சிவனடியார்களைத் திருவமுது, செய்வித்து அவரவர் குறிப்பறிந்து கந்தை கீள்கோவணம் என்பவைகளைக் கொடுப்பவருமாகிய அமர்நீதிநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் திருநல்லூர் என்னுஞ் சிவஸ்தலத்திலே மகோற்சவதரிசனஞ் செய்ய வருஞ் சிவனடியார்கள் திருவமுது செய்யும் பொருட்டு ஒரு திருமடம் கட்டுவித்துக்கொண்டு, தம்முடைய சுற்றத்தார்களோடும் அவ்விடத்திற் போய்ச் சேர்ந்து, மகோற்சவ தரிசனஞ்செய்து, தம்முடைய மடத்திலே சிவனடியார்களைத் திருவமுது செய்வித்துகொண்டு, மன மகிழ்ச்சியோடும் இருந்தார்.

இருக்கும் நாட்களிலே, ஒருநாள், சிவபெருமான் பிராமண வருணத்துப் பிரமசாரி வடிவங்கொண்டு, இரண்டு கெளபீனங்களையும் விபூதிப்பையையும் கட்டியிருக்கின்ற ஒரு தண்டைக் கையிலே பிடித்துக்கொண்டு அந்தத் திருமடத்திற்கு எழுந்தருளி வந்தார். அதுகண்ட அமர்நீதிநாயனார் மனமகிழ்ச்சியோடும் முகமலர்ச்சியோடும் அவரை எதிர்கொண்டு வணங்கி, "சுவாமீ! தேவரீர் இங்கே எழுந்தருளிவருவதற்கு அடியேன் பூர்வத்தில் யாது தவஞ்செய்தேனோ" என்று இன்சொற் சொல்ல; பிரமசாரியானவர் அவரை நோக்கி, "நீர் அடியார்களைத் திருவமுது செய்வித்து அவர்களுக்கு வஸ்திரங்களும் கந்தைகளும் கீள் கெளபீனங்களும் கொடுக்கின்றீர் என்பதைக் கேள்வியுற்று, உம்மைக் காணுதற்கு விரும்பி வந்தோம்" என்றார். அதுகேட்ட அமர்நீதிநாயனார் "இந்தத் திருமடத்திலே பிராமணர்கள் போசனம் பண்ணும்பொருட்டுப் பிராமணர்கள் பாகம் பண்ணுவதும் உண்டு. தேவரீரும் இங்கே திருவமுது செய்தருளல் வேண்டும்" என்று பிரார்த்தித்தார். பிரமசாரியானவர் அதற்கு உடன்பட்டு, நாம் காவேரியிலே ஸ்நானம் பண்ணிக்கொண்டு வருவோம். 'ஒருபோது மழைவரினும் தரித்துக்கொள்ளும் பொருட்டு நீர் இந்த உலர்ந்த கெளபீனத்தை வைத்திருந்து தாரும்" என்று சொல்லி, தண்டிலே கட்டப்பட்டிருக்கின்ற இரண்டு கெளபீனங்களில் ஒன்றை அவிழ்த்து, "இந்தக் கெளபீனத்தின் மகிமையை உமக்கு நான் சொல்லவேண்டுவதில்லை. நான் ஸ்நானம்பண்ணிக் கொண்டு வரும்வரைக்கும் நீர் இதை வைத்திருந்து தாரும்" என்று அவர்கையிலே கொடுத்து விட்டு, காவேரியிலே ஸ்நானம்பண்ணுதற்குப் போக; அமர்நீதிநாயனார் அந்தக் கெளபீனத்தை ஒரு தகுந்த இடத்திலே சேமித்து வைத்தார்.

ஸ்நானம்பண்ணப் போன பிரமசாரியானவர் அமர்நீதிநாயனார் சேமித்து வைத்த கெளபீனத்தை அது வைக்கப்பட்ட ஸ்தானத்தினின்றும் நீக்கும்படி செய்து, ஸ்நானஞ்செய்து கொண்டு, மழை பொழிய நனைந்து திருமடத்தை அடைந்தார். அமர்நீதிநாயனார் அது கண்டு எதிர்கொண்டு, "சமையலாயிற்று", என்று சொல்லி வணங்க; பிரமசாரியார், இனி அந்நாயனாருடைய அன்பாகிய ஜலத்திலே முழுக வேண்டி, அவரை நோக்கி, "ஈரம் மாற்றவேண்டும்; தண்டிலே கட்டப்பட்டிருக்கிற கெளபீனமோ ஈரமாயிருக்கின்றது. உம்மிடத்திலே தந்த கெளபீனத்தைக் கொண்டு வாரும்" என்றார். அமர்நீதி நாயனார் சீக்கிரம் உள்ளே போய்ப் பார்த்து. கெளபீனத்தைக் காணாதவராகி, திகைத்து மற்றையிடங்களிலுந் தேடிக் காணாமையால் மிகுந்த துக்கங்கொண்டு, வேறொரு கெளபீனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டு, பிரமசாரியார் முன் சென்று, "சுவாமீ! தேவரீர் தந்த கெளபீனத்தை வைத்த இடத்திலும் பிறவிடங்களிலும் தேடிக் கண்டிலேன். அது போனவிதம் இன்னதென்று அறியேன். வேறொரு நல்ல கெளபீனம் கொண்டு வந்தேன். இது கிழிக்கப்பட்ட கோவணமன்று, நெய்யப்பட்ட கோவணமே. தேவரீர் நனைந்த கெளபீனத்தைக் களைந்து இந்தக் கெளபீனத்தைச் சாத்தி, அடியேன் செய்த குற்றத்தைப் பொறுத்தருளும்" என்று பிராத்தித்தார். அதைக் கேட்ட பிரமசாரியார் மிகக்கோபித்து, "உம்முடைய நிலைமை நன்றாயிருக்கின்றது. நெடுநாட்கழிந்ததுமன்று; இன்றைக்கே தான் உம்மிடத்தில் வைத்த கெளபீனத்தைக் கவர்ந்து கொண்டு, அதற்குப் பிரதியாக வேறொரு கெளபீனத்தை ஏற்றுக் கொள்ளுமென்று நீர் சொலவது என்னை! சிவனடியார்களுக்கு நல்ல கெளபீனம் கொடுப்பேன் என்று நீர் ஊரிலே பரவச்செய்தது என்னுடைய கெளபீனத்தைக் கவர்தற்கோ! நீர் செய்கின்ற இவ்வாணிகம் நன்றாயிருக்கின்றது" என்று சொல்ல; அமர்நீதிநாயனார் பயந்து முகம் வாடி நடுநடுங்கி, "சுவாமீ! அடியேன் இக்குற்றத்தை அறிந்து செய்தேனல்லேன். இதைப் பொறுத்தருளும், தேவரீருக்குச் செய்யவேண்டிய பணிவிடைகளெல்லாம் செய்கின்றேன். இந்தக்கோவணமன்றி வெகுபொன்களையும் பட்டாடைகளையும் இரத்தினங்களையும் தருகிறேன்; ஏற்றுக்கொள்ளும்" என்றார்.

அதற்குப் பிரமசாரியார் கோபந்தணிந்தவர்போலத்தோன்றி, "பொன்களும் பட்டாடைகளும் இரத்தினங்களும் எனக்கு ஏன்? நான் தரிப்பதற்கு உபயோகியாகிய கெளபீனத்துக்கு ஒத்த நிறையுள்ள கெளபீனம் தந்தாற் போதும்" என்று சொல்ல; அமர்நீதிநாயனார் மனமகிழ்ந்து, "எதனுடைய நிறைக்குச் சமமாகிய கெளபீனத்தைத் தரல் வேண்டும்" என்று கேட்டார்.

பிரமசாரியார் "நீர் இழந்த கெளபீனத்தின் நிறைக்கு ஒத்த நிறையையுடைய கெளபீனம் இது" என்று சொல்லி, தமது தண்டிலே கட்டப்பட்டிருந்த கெளபீனத்தை அவிழ்த்து, "இதற்கு ஒத்த நிறையுள்ளதாகக் கெளபீனத்தை நிறுத்துத் தாரும்" என்றார். அமர்நீதிநாயனார் "மிகநன்று" என்று சொல்லி, ஒரு தராசைக் கொண்டுவந்து நாட்ட; பிரமசாரியார் அந்தக் கெளபீனத்தை ஒரு தட்டிலே வைத்தார். அமர்நீதிநாயனார் தம்முடைய கையிலிருந்த நெய்யப்பட்ட கெளபீனத்தை மற்றத்தட்டிலே வைத்தார். அது ஒத்தநிறையிலே நில்லாமல் மேலெழுந்தது.

அதைக்கண்டு, அடியார்களுக்குக் கொடுக்கும்படி தாம் வைத்திருந்த கோவணங்களெல்லாவற்றையும் கொண்டுவந்து ஒவ்வொன்றாக இட இட; பின்னும் தூக்கிகொண்டு எழும்பியது. அதைப் பார்த்து, ஆச்சரியம் அடைந்து, பலவஸ்திரங்களையும் பட்டுக்களையும் கொண்டுவந்து இட இட; பின்னும் உயர்ந்தது. அது கண்டு அநேக வஸ்திரப்பொதிகளைக் கொண்டுவந்து இட்டார். இட்டும், அத்தட்டு மேலே எழும்ப; கெளபீனத்தட்டுக் கீழே தாழ்ந்தது.

அமர்நீதிநாயனார் அதைக் கண்டு மிக அஞ்சி பிரமசாரியாரை வணங்கி, "எண்ணிறந்த வஸ்திரப்பொதிகளையும் நூற்கட்டுகளையும் குவிக்கவும், தட்டு உயர்கின்றது. தமியேனுடைய மற்றத்திரவியங்களையும் இத்தட்டிலே இடுதற்கு அனுமதி தந்தருளும்" என்றார். அதற்குப் பிரமசாரியார் "இனி நாம் வேறென்ன சொல்லுவோம்! மற்றத்திரவியங்களையும் இட்டுப் பாரும். எப்படியும் நம்முடைய கோவணத்துக்கு ஒத்த நிறையில் நிற்கவேண்டும்'. என்றார். அமர்நீதிநாயனார் நவரத்தினங்களையும் பொன் வெள்ளி முதலிய உலோகங்களையும் சுமைசுமையாக எடுத்து வந்து இட இட; தட்டு எழுந்தபடியே மேலே நின்றது. அமர்நீதிநாயனார் அதைக்கண்டு பிரமசாரியாரை வணங்கி, "என்னுடைய" திரவியங்களில் ஒன்றும் சேஷியாமல் இந்தத் தட்டிலே இட்டேன். நானும் என் மனைவியும் புத்திரனும் மாத்திரம் சேஷித்து நிற்கின்றோம். தேவரீருக்குப் பிரீதியாகில் இனி, அடியேங்களும் இத்தட்டில் ஏறுதற்கு அனுமதி தந்தருளும்" என்றார். பிரமசாரியாரும் அதற்கு உடன்பட்டார்.

அது கண்டு, அமர்நீதிநாயனார் மனமகிழ்ந்து, பிரமசாரியாரை வணங்கி, தம்முடைய மனைவியாரோடும் புத்திரரோடும் தராசை வலஞ்செய்து "சிவனடியார்களுக்குச் செய்யுந் திருத்தொண்டிலே அடியேங்கள் தவறாமல் இருந்தோமாகில், அடியேங்கள் ஏறினமாத்திரத்தே இந்தத்தட்டு மற்றத்தட்டுக்கு ஒத்து நிற்கக்கடவது" என்று சொல்லி, திருநல்லூரில் வீற்றிருக்கின்ற பரமசிவனை வணங்கி ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை ஓதிக்கொண்டு மகிழ்ச்சியோடு தட்டிலே ஏறினார். ஏறினவுடனே, பரமசிவனுடைய திருவரையிலே சாத்தப்படும் கெளபீனமும் பத்தியிலே சிறிதுங் குறைவில்லாத அமர்நீதிநாயனாருடைய அடிமைத்திறமும் பெருமையில் ஒத்திருந்தபடியால், துலாக் கோலின் இரண்டு தட்டுக்களும் ஒத்து நின்றன. அவ்வற்புதத்தைக் கண்டவர்களெல்லாரும் அமர்நீதிநாயனாரை வணங்கி ஸ்தோத்திரஞ் செய்தார்கள். தேவர்கள் ஆகாயத்தினின்றும் கற்பகவிருக்ஷங்களின் புஷ்பங்களை மழைப்போலப் பொழிந்தார்கள். திருகைலாசபதி தாங்கொண்டு வந்த பிரமசாரி வடிவத்தை ஒழித்து, ஆகாயத்திலே பார்வதிதேவியாரோடு இடபாரூடராய்த் தோன்றி;

தம்மைத் தரிசித்து அந்தத் தராசுத் தட்டிலே தானே நின்றுகொண்டு ஸ்தோத்திரஞ் செய்கின்ற அமர்நீதிநாயனார் அவர் மனைவியார் புத்திரர் என்னு மூவர் மேலும் திருவருணோக்கஞ்செய்து, "நீங்கள் மூவிரும் நம்முடைய அருளைப் பெற்று, நம்முடைய சந்நிதானத்திலே நம்மை வணங்கிக்கொண்டிருங்கள்" என்று அருளிச்செய்து மறைந்தருளினார். அமர்நீதிநாயனாரும், அவர் மனைவியாரும், புத்திரரும், அக்கடவுளுடைய திருவருளினால் அந்தத்தராசுதானே தேவவிமானமாகி மேலே செல்ல, அவரோடு சிவலோகத்தை அடைந்தார்கள்.

திருச்சிற்றம்பலம்
தில்லைவாழந்தணர் சருக்கம் முற்றுப்பெற்றது.
பின்னிணைப்பு:
அமர்நீதி நாயனார் புராண சூசனம்
சிவனடியாருக்கு அன்னம் வஸ்திரம் கெளபீனம் கொடுத்தல்

சிவஸ்தலத்திலே மடங்கட்டுவித்து, புண்ணிய காலங்களிலே சிரத்தையோடும் கற்பாத்திரமாகிய சிவனடியார்களை அமுது செய்வித்தலும், அவர்களுக்கு வஸ்திரம் கெளபீனம் முதலியன கொடுத்தலும், பெரும்புண்ணியமாம். அன்னம் வஸ்திரம் கெளபீனம் முதலியன தானஞ் செய்தல் புண்ணியம் என்பதற்குப் பிரமாணம் சிவதருமோத்திரம்.
"திருப்பதி வணங்க வென்று சென்றுறுஞ் சிவநேசர்க்கு - மருத்தியாற் கங்கையாதி யாடிட நாடினார்க்கு - மருத்துக வன்னபான மவரவர்க்குபயோகங்கள் - பொருத்துக வூனைப் போக்கிச் சிவபுரம் புகுவர்தாமே." என்றும்;
"பிரம சாரியைப்பேரற மோங்கிடுங் - கிரக சாரியை யூட்டிய கேண்மையர் - விரவியேசிவ லோகம் விரும்பிய - பரம போக மனைத்தும் பயில்வரே." என்றும்;
"ஊட்டினார்களுதவிய தேதெனுங் - காட்டு ளாடி கழறங் கருத்தினு - ணாட்டி னாரைத் தமைநலி யும்வினை - யோட்டியே சிவலோக முறைவரே" என்றும்;
"மாதவர்க்குறவற்களையீந்தவர் - சீத வாரித வாடையுஞ் சேர்த்தினர் - கோதி ல甶வச னாதியுங்கோல்வளை - மாதொர் பாகன் புரத்தினுள் வாழ்ந்தபின்." என்றும்;
சிவபுண்ணியத் தெளிவு: "நாற்ற மாமல ரோனெழி னாரணன் - போற்று சங்கர னன்பர்க்குப் பொங்கிழை - யாற்று கோவண மீந்தவ ராயிரந் - தேற்று கோடி யுகஞ்சிவ லோகரே." என்றும் வரும்.
இப்புண்ணியத்தைப் புண்ணியஸ்தானத்திலே, புண்ணிய காலத்திலே சிரத்தையோடும் செய்தல் உத்தமோத்தமம் என்பதற்குப் பிரமாணம் சிவதருமோத்தரம்;
"சிறந்தநற் றேசந் தன்னிற் றேடருங் காலங்கூட - மறந்திடா விதியினாலே வாய்த்தவாதரவுங் கூர - வறந்தனை யறிந்த வாய்மைப் பாத்திரமாவா னங்கைச் -செறிந்திடச் செய்த வற்ப முலகினும் பெருகுந் திண்ணம்." என்றும்;
"ஓங்கிய வதனைச் செய்த வுத்தமர் சிவலோ கத்துட் - டாங்கியே போக பேதம் பிரளய சமயந் தன்னி - னீங்கரும் பொருளைக் கண்டு நிறையுற வொருமை நீடத் - தூங்குவ ரின்பந் தோன்றத் துகண்மலஞ் சோருமன்றே" என்றும் வரும்.

இவ்வமர்நீதிநாயனார் இந்தச் சிவபுண்ணியத்தின் மிகச் சிறந்தவராகி, சிவனிடத்தே இடையறாத மெய்யன்புடையராயினார். சிவனிடத்து அன்பில்லாமற் செய்யப்படும் புண்ணியம் உயிர் இல்லாத உடல் போலப் பயன்படாதாம், இவ்வன்பு பல பிறப்புக்களிலே பயன் குறியாது செய்யப்பட்ட தபோபலத்தினாலே சிவன் அருள் செய்யக் கிடைக்கும். இவ்வன்பு உள்ளவழியே சிவனது திருவருள் உண்டாம். அது உண்டாய வழி, முத்தி உண்டாம் இதற்குப் பிரமாணம், வாயுசங்கிதை;
"ஆங்கவ னருளாற் பத்திநன்குண்டாம் பத்தியா லவனருளுண்டாம் - வீங்கிய பத்தி பற்பல பிறப்பில் வேதங்க ளுரைத்திடும் படியே - தீங்கறு கரும மியற்றிய பலத்தாற் சிவனருள் செய்திட வருமா - லோங்கிய பத்தி யாற்சிவ தரும மொழிவறப் புரிந்திடப் படுமால்." என்றும்,
"புரிதலா லிறைவ னல்லருள் புரிவாள் புரிந்திடப் போக்கற நின்ற - விருவினை கழியுங் கழிந்திட முத்தி யெய்தலா மிறைவன்வார் கழலி - லொருவழி சிறிது பத்திசெய்வோரு மொருமூன்று பிறப்பின்மேற் பிறப்பின் - மருவிடா ரங்கத் தொடுமனுச் செபித்தன் மாசறு பத்தியாமென்பர்." என்றும் வரும்.
இவ்வமர்நீதி நாயனார் மெய்யன்பிற் குறைபடாதவர் என்பது, பிரமசாரி வடிவங் கொண்டு வந்த பரமசிவனது கெளபீனம் இட்டதட்டுக்கு இவர் தம்மிடத்து உள்ள கெளபீனங்கள் வஸ்திரங்கள் பட்டுக்கள் பொன் வெள்ளி முதலிய உலோகங்கள் நவரத்தினங்கள் முதலிய அனைத்தையும் இட்டதட்டு ஒவ்வாது மேலெழுந்து, பின்பு தாமும் தம்முடைய மனைவியும் புத்திரனும், நாம் அன்பினோடு சிவனது திருநீற்று மெய்யடிமை பிழைத்திலோமாயின் இத்தட்டு மற்றதனோடு நேர்நிற்க என்று சொல்லி ஏறியவுடனே, அதனோடு ஒத்து நின்றமையாலே தெளியப்படும். அன்பின் திறம் கண்ணப்ப நாயனார் புராணத்துச் சூசனத்தில் விரித்து உரைக்கப்படும் ஆதலால் இங்கே விரித்திலம்.

இக்கட்டுரையை தட்டச்சி எனக்கு அனுப்பி வைத்த திரு கே. திருஞான சம்பந்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
ஆறுமுக நாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.

Saturday, September 23, 2006

நாவலர் பாலபாடம் - செல்வம்

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
செல்வம்


செல்வமாவது இரத்தினம், பொன், வெள்ளி, நெல் முதலியன. தருமத்துக்கும் இன்பத்துக்கும் துணைக்காரணம் செல்வம். இது பற்றியன்றோ மாணிக்கவாசக சுவாமிகள் "முனிவரும் மன்னரு முன்னுவ பொன்னான் முடியும்" என்றும் "வறியாரிருமை யறியார்" என்றும் திருக்கோவையாரில் அருளிச் செய்தார்.

அழியாப்பொருளாகிய கல்வியையும் கல்வித் தேர்ச்சிக்கு உரிய புத்தகங்களையும் கொள்ளுதற்கும், பசி முதலியவைகளினால் வருந்தாது கவலையற்றிருந்து கல்வி கற்றற்கும், கற்ற கல்வியை அழகுசெய்து தமக்கும் பிறர்க்கும் பயன்படுத்தற்கும் கருவி செல்வமே. கல்வியுடையவரும் வறியவராயின், பசி நோயினாலும் தீராக் கவலைகளினாலும் வறியவராயின், பசி நோயினாலும் தீராக் கவலைகளினாலும் வருந்தி, தாம் முன் கற்ற கல்வியையும் மறந்துவிடுவர். வறியவர் மெய்நூற்பொருளைத் தெளிய அறிந்து போதித்தாராயினும், "நாம் இவர் சொல்லை விரும்பிக் கேட்போமாயின் கண்ணோட்டத்தினால் இவர் குறையை முடித்தல் வேண்டும்" என்று பயந்து, யாவருங் கேளா தொழிவர். ஆதலின் அவர் வாய்ச்சொல் பயனில் சொல்லாய் முடியும்.

செல்வமில்லாதவர், வறுமைத் துன்பமொன்றினான் மாத்திரமா, அத்துன்பம் மூலமாகச் செல்வர் வீட்டுவாயிலை நோக்கிச் செல்லல் துன்பமும், அவரைக் காணல் துன்பமும், கண்டாலும் அவர் மறுத்தபோது உண்டாகுந் துன்பமும், மறாதவிடத்தும் அவர் கொடுத்ததை வாங்குதல் துன்பமும் அதனைக் கொண்டுவந்து போசனத்துக்கு வேண்டுமவைகளைக் கூட்டுதல் துன்பமும் முதலிய பல துன்பங்களாலும் நாடோறும் வருந்துவர்.

எல்லா நன்மையும் உடையவராயினும், பொருளில்லாதவரை அவருடைய தாய் தந்தை மனைவி மைந்தர் முதலாயினவரும் அவமதிப்பர். ஒரு நன்மையும் இல்லாதவராயினும், பொருளுடையவரை அவர் பகைவரும் நன்கு மதிப்பர். வறியவரிடத்தே தாம் கொள்வதில்லாமை யன்றிக் கொடுப்பதுண்டாதலும் உடைமையால், அது நோக்கிச் சுற்றத்தார் யாவரும் கைவிடுவர்.

கல்வியும், தருமமும், இன்பமும், கீர்த்தியும், மனிதருள்ளே பெருமையும், உறவும், நினைத்தது முடித்தலும், வென்றியுமாகிய எல்லாம் செல்வமுடையவருக்கே உண்டு. செல்வமில்லாதவர் உலகத்திலே நடைப்பிணமாவார். ஆதலினால், யாவரும் செல்வத்தை இடையறா முயற்சி யோடு வருந்திச் சம்பாதித்தல் வேண்டும்.

பொருள் சம்பாதிக்கு நெறிகளாவன வித்தை கற்பித்தல், உயிர்க்கு உறுதி பயக்கும் நூல்களையும் உரைகளையுஞ் செய்து வெளிப்படுத்தல், வேளாண்மை, வாணிகம், இராசசேவை, சிற்பம் முதலியவைகளாம். ஞான நூலை வேதனத்தின் பொருட்டுக் கற்பிக்கலாகாது; கற்பித்தவர் நரகத்தில் வீழ்ந்து வருந்துவர்.

பொருள் சம்பாதிக்குமிடத்து, தரும நெறியாலே சம்பாதித்தல் வேண்டும். தருமநெறியால் வந்த பொருளே மேற்சொல்லிய பயன்களெல்லாவற்றையுங் கொடுக்கும். களவு, பொய்ச்சான்று சொல்லல், பொய்வழக்குப் பேசல், பொய்ப்பாத்திரம் பிறப்பித்தல், விசுவாசகாதம், பரிதானம் வாங்கல், சுங்கங்கொடாமை முதலிய பாவ நெறிகளாலே பொருள் சம்பாதிக்கலாகாது. பாவ நெறியால் வந்த பொருள் முன்செய்த புண்ணியத்தையுங் கெடுத்து, இம்மையிலே தீராத வசையையும், சந்ததி நாசத்தையும், இராச தண்டத்தையும், மறுமையிலே நரகத்துன்பத்தையும், பிறவித் துன்பத்தையும் விளைவிக்கும்.

காலந்தோறும் சம்பாதிக்கபபடும் பொருளை நான்கு பாகமாகப் பகுத்து, அவைகளுள், இரண்டு பாகத்தைத் தமது அநுபவத்துக்கு ஆக்கி, ஒரு பாகத்தை ஆஸ்தியின் பொருட்டுச் சேர்த்து, எஞ்சி நின்ற ஒரு பாகத்தைக் கொண்டே தருமஞ்செய்தல் வேண்டும். ஆஸ்தியின் பொருட்டுச் சேர்க்காது செலவிட்டவர் பின்பு வியாதியினாலேனும் கிழப் பருவத்தினாலேனும் பொருள் சம்பாதிக்கும் திறமை இல்லாத பொழுது, பெண்டிர் பிள்ளைகளோடு வருத்தமடைவர். அக்காலத்திலே பெண்டிர் பிள்ளைகளும் அவரை உபசரியாது கைவிடுவர்.

முதலிற் செலவு சுருங்கினால், பொருள் ஒரு காலத்தும் நீங்காது. முதலிற் செலவு சுருங்கக் கூடாதாயின், முதலுக் கொக்கவாயினும் செலவழித்தல் வேண்டும். எவனுக்கு முதலிற் செலவு மிகுமோ, அவன் வாழ்க்கை உள்ளது போலத் தோன்றி மெய்மையால் இல்லையாகிப் பின்பு அத்தோற்றமும் இல்லாமற் கெட்டுவிடும். வரவு செலவு கணக்கெல்லாம் அப்பொழுது அப்பொழுது சிறிதுந் தவறாமல் எழுதிக் கொள்ளல் வேண்டும். கணக்கெழுதாமல் யாதொன்றுஞ் செய்யலாகாது. மாசந்தோறும் வரவு செலவு இருப்புக் கணக்குப் பார்வையிட்டு முடித்தல் வேண்டும்.

சம்பாதிக்கப்பட்ட பொருளிலே, அநுபவத்தின் பொருட்டும் தருமத்தின் பொருட்டும் செலவிட்டதொழிய, எஞ்சி நின்றதைக் கொண்டு, தக்க பிரயோசனத்தைத் தருதற்குரிய விளைநிலம் தோட்ட முதலியவை வேண்டும். அல்லது முதற் பொருளுக்கும் வட்டிக்குங் குறைவு படாத ஈட்டையும் தகுதியாகிய சான்றினையுமுடைய பத்திரத்தையும் பெற்றுக்கொண்டு, வட்டிக்குக் கொடுத்தல் வேண்டும். கடனுடையவன் தம்மிடத்து வைத்த அசைக்கப்படு பொருளாகிய ஈட்டை, அவனுக்குக் கொடுக்குமளவும், கெடுதியும் குறைவும் விகாரமும் பயனின்மையும் உருமாற்றமும் அடையாமற் காத்தல் வேண்டும். அந்த ஈட்டைத் தாம் அநுபவித்தால் வட்டியில்லை. அநியாய வட்டியும் வட்டிக்கு வட்டியும் வாங்குதல் பெருங் கொடும்பாவம். பிராமணன் ஒரு காலத்தினும் வட்டி வாங்குதல் கூடாது. ஆபத்துக் காலத்தில் மாத்திரம் வாங்கலாம்.

தந்தை வழியாகவேனும், தாய் வழியாகவேனும் தாயினுடைய தந்தை முதலானவர்களின் வழியாகவேனும் வந்த பொருள் தாயம் எனப்படும். வித்தைக் கற்பித்தல், வேளாண்மை, வாணிகம், சிற்பம், சேவை முதலிய தொழில்களாலும் யாசனத்தாலும் அடையப்பட்ட பொருள் உடைமை எனப்படும். இவ்வுடைமைப் பொருளைத் தமதிச்சைப்படி தான முதலானவைகளாகச் செய்யலாம். பெண்ணின் பொருட்டுத் தந்தை முதலானவர்களாலே கொடுக்கப்பட்ட பொருள் சீதனம் எனப்படும். சீதனப் பொருளைக் கணவனேனும் தந்தையேனும் உடன் பிறந்தாரேனும் கொள்ளுதற்கும் கொடுத்தற்கும் உரியரல்லர்.

இத்தேசங்களிலே, பலவகைத் தொழில்கள் செய்து சீவனஞ் செய்யச் சத்தியுடையவர்களுள், அவை செய்யாது சோம்பேறிகளாய் இருந்து கொண்டு, அநேகர் நாணமின்றிப் பலரிடத்தும் சென்று யாசித்தும், அநேகர் தாயப் பொருளையே கொண்டும், அநேகர் தம்மனைவியர்களுடைய சீதனப் பொருளையே கொண்டும், அநேகர் தாவர சங்கமங்களாகிய தாயத்தையும் சீதனத்தையும் ஈடு வைத்தும், விக்கிரயஞ் செய்தும் சீவனஞ் செய்கின்றார்கள். தாவரம் - அசைக்கப்படாத பொருள். சங்கமம் - அசைக்கப்படுபொருள். அறிவும் ஆண்மையும் மானமும் உடையவர்கள் இப்படிச் செய்வார்களோ, செய்யார்கள். கூழேயாயினும் தமது தொழில் முயற்சியாலே கிடைத்தது அமிர்தமேயாகும். பருப்பு நெய் பாயசம் வடை தயிர் முதலியவற்றோடு கூடிய அன்னமேயாயினும், யாசனத்தினாலாவது, பிறருடைய தொழில் முயற்சியினாலாவது, கிடைத்தாயின், அது வி"மேயாகும். தொழில் முயற்சிகள் சுவதேசத்திலே பலிக்காவிடின், இதர தேசங்களிலாயினும் சென்று, தாமே வருந்திச் சம்பாதித்துச் சீவனஞ் செய்தலே அறிவும் ஆண்மையும் மானமும் உடையவருக்கு அழகு. இத்தேசங்களில் அநேகர் பணம் வைத்துக் கொண்டும் யாசித்துச் சீவனஞ் செய்கின்றார்கள். இவர்களுக்குப் பிக்ஷை கொடுப்பவர்கள், உண்மையை ஆராய்ந்தார்களாயின், தங்களைப் பார்க்கினும், இவர்களே செல்வமுடையவர்கள் என்று அறிவார்கள். இவர்கள் நாட்டுவேடர் எனப்படுவர்கள். பொருள் வைத்துக் கொண்டு யாசித்துப் புசித்தவர்கள் நரகத் துன்பத்தை அநுபவித்து, மறுபிறப்பிலே மாடாய்ப் பிறந்து, அன்னம் போட்டவருக்கு உழைப்பார்கள்.

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

(5) வென்றி - வெற்றி.

(11) தாயம் - முதுசொம், முதியோர் சொத்து (ஸ்வம் என்பது என்னும் வடசொல் 'சொம்' எனத் திரிந்தது).

(12) விக்கிரயஞ் செய்தல் - விற்றல்; சுவதேசம் - தன்னுடைய தேசம்; நாட்டு வேடர் - (பிறர் பொருளை வஞ்சித்துக் கவர்தலால்) வேடர்க்குச் சமானராய் நாட்டில் வசிப்போர்.

ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.

Sunday, August 27, 2006

நாவலர் பாலபாடம் - கல்வி

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
கல்வி

னிதர்களாலே தேடற்பாலனவாகிய பொருள்கள் கல்விபொருள் செல்வப்பொருள் என இரண்டாம். கல்வியாவது கற்றற்குரிய நூல்களைக் கற்றல். கல்வியெனினும் வித்தையெனினும் பொருந்தும். கற்றற்குரிய நூல்களாவன, அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்களை அறிவிக்கும் நூல்களும், அந்நூல்களை அறிதற்குக் கருவிகளாகிய நிகண்டு, இலக்கணம், கணக்கு முதலிய நூல்களுமாம். அறமெனினும் தருமமெனினும் பொருந்தும். வீடெனினும், முத்தியெனினும், மோட்சமெனினும் பொருந்தும்.

செல்வப்பொருள் பங்காளிகள், கள்வர், வலியவர், அரசர் என்னும் இவர்களாலே கொள்ளப்படும், கல்விப் பொருளோ ஒருவராலும் கொள்ளப்படமாட்டாது. செல்வப்பொருள் வெள்ளத்தாலாயினும் அக்கினியாலாயினும் அழியும்; கல்விப் பொருளோ ஒன்றாலும் அழியமாட்டாது. செல்வப்பொருள் பிறருக்குக் கொடுக்குந்தோறும் குறைந்து கொண்டே வரும்; கல்விப்பொருளோ பிறருக்குக் கொடுக்குந்தோறும், பெருகிக் கொண்டே வரும்.

செல்வப்பொருள், சம்பாதித்தல், காப்பாற்றல், இழத்தல் என்னும் இவைகளாலே துன்பஞ்செய்து, பலரையும் பகையாக்கும். கல்விப் பொருளுடையவர், இம்மையிலே சொற்சுவை பொருட்சுவைகளை அநுபவித்தலாலும், புகழும் பொருளும் பூசையும் பெறுதலாலும், பின்னே தருமத்தையும் முத்தியையும் அடைதலாலும் இடையறாத இன்பத்தை அநுபவிப்பர். இப்பெரியவரைச் சேர்ந்து அறியாதவைகளையெல்லாம் அறிந்தோம் என்று உலகத்தார் பலரும் அவரிடத்து அன்புடையவராவர். ஆகலினாலே, செல்வப் பொருளினும் கல்விப் பொருளே சிறப்புடையது.

உயர்குலமும் அழகும் செல்வாக்கும் உடையவராயினும், கல்வியில்லாதவர் முருக்கம்பூவுக்குச் சமமாவர். இராசாக்களுக்கு அவர் தேசத்தின் மாத்திரம் சிறப்புண்டாம். கற்றறிந்தவருக்கு அவர் சென்ற சென்ற தேசங்களினெல்லாம் சிறப்புண்டாம். ஆதலின் இராசாக்களினும் கற்றறிந்தவரே சிறப்புடையர். ஆதலினால், யாவரும் கல்வியைச் சிறிதும் அவமதியாது வருந்திக் கற்றல் வேண்டும்.

அழுக்குப்படியாத சீலையிலே சாயம் நன்றாகப் பிடிக்கும்; அழுக்குப் படிந்த சீலையிலே சாயம் நன்றாகப் பிடிக்க மாட்டாது. சிறு பிராயத்திலே கற்ற கல்வி புத்தியிலே நன்றாகப் பதியும். புத்தி சமுசாரத்திலே விழுந்து வருத்தத்தை அடைந்து கொண்டிருக்கின்ற முதிர்ந்த பிராயத்திலே கற்றாலும், கல்வி நன்றாகப் புத்தியிலே பதியமாட்டாது. ஆதலினாலன்றோ ஒளவையார் "இளமையிற் கல்" என்று அருளிச் செய்தார்.

கல்வியை நல்லாசிரியரிடத்தே சந்தேகமும் விபரீதமும் அறக் கற்றல் வேண்டும். சந்தேகமாவது இதுவோ அதுவோ என ஒன்றிலே துணிவு பிறவாது நிற்றல். விபரீதமாவது, ஒன்றை மற்றொன்றாகத் துணிதல். வியாதி வறுமைகள் இல்லாமையும், பொருள், இளமை முதலியவைகள் உண்மையும், கல்வி கற்றற்குச் சிறந்த கருவிகள். மிகச் சிறந்த கருவி ஆசிரியருடைய உள்ளத்திலே அருள் உண்டாகும்படி நடத்தல். ஆதலினாலே, கல்வி கற்கும் மாணாக்கர் ஆசிரியரை விதிப்படி சிரத்தையோடு வழிபட்டே கற்றல் வேண்டும். வழிபாடாவது, இன்சொற் சொல்லல், வணங்குதல், உற்றவிடத்துதவுதல் முதலாயின.

கல்வியிலே தேர்ச்சியடைய வேண்டுமாயின் இடைவிடாது கற்றல் வேண்டும். ஒரு நாள் ஊக்கமாகவும், மற்றொரு நாள் சோம்பலாகவும் இராமல், எப்பொழுதும் தங்கள் தங்கள் சத்திக்கு ஏற்பக் கல்வி பயிலல் வேண்டும். சோர்வு அடையாமல் நாடோறும் சிரமமாகச் சிறிதாயினும் நன்றாகக் கற்கின்றவர் எப்படியும் அறிவுள்ளவராவர். தாம் அதிக சமர்த்தர் என்று நினைத்து ஒவ்வொரு வேளையில் மாத்திரம் கற்கின்றவர் அதிகமாகத் தேர்ச்சி அடையமாட்டார். மணற்கேணியைத் தோண்டுந்தோறும் ஊற்று நீர் சுரந்து பெருகிக் கொண்டே வருதல்போல, கல்வியைக் கற்குந்தோறும் அறிவு வளர்ந்து கொண்டே வரும். ஆதலினால், கல்வியைச் சிறிது கற்றமாத்திரத்தால் அமையாது மேன்மேலும் கற்றல் வேண்டும்.

தாங்கேட்ட பாடங்களை நாடோறும் போற்றலும், தாங்கேட்ட பொருள்களைப் பலதரமுஞ் சிந்தித்தலும், ஆசிரியரை அடுத்து அவைகளைக் குறைவு தீரக் கேட்டலும். ஒருசாலை மாணாக்கர் பலருடனும் பலதரமும் பழகுதலும், தாம் ஐயுற்ற பொருளை அவரிடத்து வினாவுதலும், அவர் வினாவியவைகளுக்கு உத்தரங் கொடுத்தலாலும், தாம் கேட்டறிந்ததைப் பிறருக்கு அறிவித்தலும் ஆகிய இவைகளெல்லாம் கல்வி பயிலும் மாணாக்கருக்குக் கடன்களாம்.

நூல்களிலே சிலநாட் பழகினால், விவேகிகளாயினும், சிலவற்றில் வல்லராதலும் அரிது. பலநாட் பழகினால், மந்தர்களாயினும், பலவற்றிலும் வல்லவராவர். நூற் பொருளை விரைவினாலே பார்த்தால், விவேகிகளாயினும், ஒன்றுந் தெரியாது. விரையாது அமைவுடனே பார்த்தால், மந்தர்களாயினும், கருகாது தெரியும்.

பெரும்பாலும் எல்லாருக்கும் கற்பதிற் கருத்திறங்கும், கற்றதிற் கருத்து இறங்காது. அது நன்மையன்று. கருத்தைக் கற்பதிலே மட்டுப்படுத்தி, கற்றதிலே சிந்தாமல் இறக்கல் வேண்டும். வருந்திக் கற்ற நூலை மறக்க விட்டு வேறு நூலைக் கற்றல் கையிலே கிடைத்த பொருளை எறிந்துவிட்டு, வேறு பொருளை அரிப்பரித்துத் தேடல் போலும். பசி முதலிய வருத்தத்தாலாவது, அன்ன முதலியவற்றின்கண் அவாவினாவாவது, யாதாயினும் வேறொரு நிமித்தத்தாலாவது, கருத்து மயங்கினால், அப்பொழுது கல்வியிற் பழகுதலொழிந்து அம்மயக்கந் தீர்ந்த பின்பு பழகல் வேண்டும்.

கல்வியுடையவர் தாங் கற்றறிந்தபடி நல்வழியிலே ஒழுகுதலும், நன் மாணாக்கர்களுக்குக் கல்வி கற்பித்தலும், எல்லாருக்கும் உறுதியைப் போதித்தலுமாகிய இம்மூன்றையும் எந்நாளும் தமக்குக் கடனாகக் கொள்ளல் வேண்டும். இவ்வியல்புடையவரே கல்வியாலாகிய பயனை அடைந்தவராவர். இம்மூன்றிமில்லாவிடத்துக் கல்வியினாற் பயனில்லை.

சரீரசுகத்துக்கு ஏதுவாகிய அன்னவஸ்திர முதலிய வற்றையும் ஆன்ம சுகத்துக்கு ஏதுவாகிய ஞானத்தையும் கொடுப்பது வித்தையேயாதலின், எல்லாத் தானங்களினும் வித்தியாதானமே சிறந்தது. ஒருவருக்கு அன்ன வஸ்திரங் கொடுத்தால், அவை அவருக்கு மாத்திரமே பயன்படும். பயன்படுவதும் சிறிதுபொழுது மாத்திரமே. ஒரு விளக்கேற்றுதல், அவ்வொருவிளக்கிலே பலவிளக்கும், அப்பல விளக்கினுள்ளும் ஒவ்வொரு விளக்கிலே பற்பல விளக்குமாக, எண்ணில்லாத விளக்கு ஏற்றப்படுதற்கு ஏதுவாதல்போல, ஒருவருக்குக் கல்வி கற்பித்தல், அவ்வொருவரிடத்திலே பலரும், அப்பலருள்ளும் ஒவ்வொருவரிடத்திலே பலரும், அப்பலருள்ளும் ஒவ்வொருவரிடத்திலே பற்பலருமாக, எண்ணில்லாதவர் கல்வி கற்றுக்கொள்ளுதற்கு, ஏதுவாகும். அவர் கற்ற கல்வியோ அப்பிறப்பினன்றி மற்றைப் பிறப்புக்களிலும் சென்று சென்று உதவும். ஆதலின் வித்தியாதானத்துக்குச் சமமாகிய தருமம் யாதொன்றுமில்லை. தாங்கற்ற கல்வியை நன்மாணாக்கர்களுக்குக் கருணையோடு கற்பியாதவர் காட்டிலே நச்சு மாமரமாவர்.

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

(1) உறுதிப்பொருள்கள் - அடையத்தக்க பொருள்கள்; புருஷார்த்தங்கள் எனவும் பொருள்படும். உறுதி - இறப்படுவது, உறுதல் - அடைதல், பெறுதல்.

ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.

Friday, July 28, 2006

நாவலர் பால பாடம் - தானம்

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
தானம்


தானமாவது தருமநெறியால் வந்த பொருளைச் சற்பாத்திரமாயுள்ளவருக்குச் சிரத்தையோடு கொடுத்தல். பாவத்தால் வந்த பிறன் பொருளைக் கொடுத்தால், தருமம் பொருளுடையார் மேலும், பாவம் பொருள் கொடுத்தார் மேலும், நிற்கும். சிரத்தையெனினும், பிரீதியெனினும், ஆதரவெனிலும், பத்தியெனினும், விசுவாசமெனினும், அன்பெனினும், பற்றெனினும் பொருந்தும்.

பதிசாத்திரத்தை ஓதி அதன் பொருளை அறிந்து பாவங்களை விலக்கித் தருமங்களை அநுட்டித்துக் கடவுளை மெய்யன்போடு வழிபடுவோரும். தம்மைப்போலப் பிறரும் பரகதி பெற்று உய்யவேண்டுமென்று விரும்பி அவருக்கு நன்னெறியைப் போதிப்பவருமாயுள்ளவர் சற்பாத்திரமாவர். இந்த நன்னெறியிலே ஒழுகும் பொருட்டுச் சிரத்தையோடு முயற்சி செய்பவரும் சற்பாத்திரமாவர், குருடர், முடவர், சிறு குழந்தைகள், தரித்திரர், வியாதியாளர், வயோதிகர் என்னும் இவர்களும் தானபாத்திரமாவர். அன்னதானம் முதலியவற்றை இவர்களுக்குப் பண்ணலே தருமம்.

பதிசாத்திரத்தில் விருப்பமில்லாதோனும், நித்திய கருமத்தை விடுத்தோனும், ஈசுரநிந்தை செய்வோனும், குருநிந்தை செய்வோனும், தேவத்திரவியங் கவர்வோனும், கொலைசெய்வோனும், புலாலுண்போனும், கள்ளுண்போனும், கள்வனும், பிறருடைய மனைவியைப் புணர்வோனும், வேசையைப் புணர்வோனும், தாசியைப் புணர்வோனும், கன்னியரைக் கெடுப்போனும், இருதுமதியைத் தீண்டுவோனும், பொய்ச்சான்று சொல்வோனும், பொய் வழக்குப் பேசுவோனும், பிதாமாதாவைப் பேணாதோனும், சூதாடுவோனும், மித்திரத் துரோகியும், கோள்மூட்டுவோனும், செய்ந்நன்றி மறப்போனும், புறங் கூறுவோனும், சாத்திரத்தில் இல்லாத பொருளைப் புதிதாகப் பாடிய பாட்டினால் ஒப்பிப்போனும், வட்டிக்குக் கொடுப்போனும், தேவபூசையை விற்றுத் திரவியந் தேடுவோனும், பொன்னாசை மிகுந்து தரும வேடங்களைக் காட்டிச் சனங்களை வஞ்சிப்போனும். பொருள் வைத்துக்கொண்டு தரித்திரன்போல நடித்து யாசிப்போனும். தொழில் செய்து சீவனம் பண்ணச் சத்தியிருந்தும் அது செய்யாத சோம்பேறியும், தீச்சிந்தை நிறைந்து பொய்யுபசாரஞ் செய்து பொய் மரியாதை காட்டித் திரிவோனுமாகிய இவர்களெல்லாம் அசற்பாத்திரமாவார்கள். இவர்களுக்குத் தானம் பண்ணல் பாவம். இவர்களுக்கு இன்சொற் சொல்லலும் பாவம். கற்றோணியாலே கடலைக் கடக்க முயன்றவன் அத்தோணியோடும் அழிவதுபோலக் கல்வியறிவொழுக்கம் இல்லாத பாவிக்குத் தானங் கொடுத்தவன் அப்பாவியோடும் அழிந்து போவான்.

சற்பாத்திரமாயுள்ள பெரியோர் தம்வீட்டுக்கு வந்த பொழுது, விரைவினோடு எழுந்திருத்தல், ஓடிச்செல்லல், கண்டவுடனே 'தேவரீர் எழுந்தருளப் பெற்றேனே' என்று கொண்டாடி எதிர்கொள்ளல், ஆசனத்திருத்துதல், பாதத்தை அருச்சித்தல், 'இன்றன்றோ அடியேனுடை கிருகம் சுத்தியாயிற்று' என்று அவரை உயர்த்திப் புகழ்தல், அவர் போகும்போது பதினாறடியிற் குறையாமற் சென்று வழிவிடுதல் என்னும் இவை யேழும் தானஞ் செய்வோர் செயல்களாம். இவையில்லாமற் செய்யும் தானம் பயன்படாது.

பாத்திரங்களெல்லாவற்றினும் பரம சற்பாத்திரம் மெய்ஞ்ஞானி. அவர் ஒருவரிடத்தே சென்று 'எனக்கு இந்தப் பொருளைத் தா' என்று கேளார். அவர் எழுந்தருளியிருக்கும் இடத்திற்சென்று 'அடியேனுடைய பொருளை ஏற்றருளல் வேண்டும்' என்று பிரார்த்தித்துக் கொடுத்தல் வேண்டும். ஞானியானவர் தமக்குத் தாதாத் தரும்பொருளை அதன் மேல் ஆசையினால் வாங்கார்; தாதாப் பரகதியடைதல் வேண்டும் என்று நினைந்து வாங்குவார். அஞ்ஞானியானவன் தாதாக் கதியடைதல் வேண்டும் என்று விரும்பாது, தன்னுடைய போசனார்த்தத்தையே விரும்பி தானத்தை ஏற்பன்; ஆதலால், அஞ்ஞானி கையிலே கொடுத்தவர் தம்பொருளை அவமே போட்டு இழந்தவராவர்.

தன்னிடத்து வந்த யாசகருக்குக் கொடுத்தற்குப் பொருள் அரிதாயின், அவர் மனத்தை முகமலர்ச்சியினாலும் இன்சொல்லினாலும் குளிர்விக்கலாமே. அவையும் அரியனவோ, அல்லவே தன்னிடத்து வந்து இரந்த தரித்திரனை 'இவன் அற்பன்' என்று தள்ளிவிட்டுச் 'செல்வத்தையுடைய பெரியவன் எங்கே இருக்கின்றான்?' என்று கருதுவோன் தாதாவாகான். இவன் கொடுக்குங் கொடையெல்லாம் அவனிடத்தே தனக்கு ஒரூதியங் கருதிய செட்டாம்.

கொடை, வணக்கம், உறவு, கிருபை, பொறை என்னும் ஐந்துமுடையவனே தாதா. இவையில்லாதவன் அதாதா. அருளும் ஆதரவுமுடையவனாகிய தாதாவின் கையிலே ஏற்றவன் அந்தத் தாதாவினோடும் புண்ணிய லோகத்தை அடைவன்; அருளும் ஆதரவுமில்லாதவனாகிய அதாதாவின் ஏற்றவன் அந்த அதாதாவினோடும் நரகத்தை அடைவன்.

யாவரும் உச்சிக் காலத்திலே பசித்து வந்த ஏழைகளுக்கு இல்லை என்னாமல் முகமலர்ச்சியோடும் இன் சொல்லோடும் தம்மால் இயன்றமட்டும் அன்ன பானீயங் கொடுத்துப் புசித்தல் வேண்டும். தாம் புசிக்கும்போது ஒரு பிடியன்னமாயினுங் கொடுத்தல் ஒருவருக்கும் அரியதன்று. இது யாவருக்கும் எளிதாகும். திருமூல நாயனாருடைய அருமைத் திருவாக்கைக் கேளுங்கள்.

"யாவருக்கு மாமிறை வற்கொரு பச்சிலை

யாவர்க்கு மாம்பசு விற்கொரு வாயுறை

யாவர்க்கு மாமுண்ணும் போதொரு கைப்பிடி

யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே." (திருமந்திரம்)

பகற்காலத்தில் வந்த அதிதிக்குப் போசனங் கொடாத பாவத்தினும், இராக் காலத்தில் வந்த அதிதிக்குப் போசனங்கொடாத பாவம் எட்டு மடங்கதிகம். தயிர், பால், நெய் முதலிய உயர்ந்த பதார்த்தங்களுள் எதை அதிதிக்குப் பரிமாற வில்லையோ அதைத் தாமும் புசிக்கலாகாது. இரவிலே போசன காலத்தில் வந்தாலும், பின்பு வந்தாலும், சமயந் தப்பி போயிற்று என்று, வந்த அதிதியை அன்னங்கொடாமல் அனுப்பலாகாது. அதிதிக்கு அன்னங் கொடுக்கச் சத்தியில்லை யாயினும், படுக்கை இளைப்பாறுமிடம் தாகதீர்த்தம் பிரிய வசனம் என்னும் இவைகளாலாயினும் உபசரித்தல் வேண்டும். அதிதி புறத்திருப்பத் தாம் புசித்தவரும், பந்தி வஞ்சனை செய்தவரும் கண்டாமலை நோயினால் வருந்துவர். சூரியாஸ்தமன காலத்திலே தம் வீட்டில் வந்து சேர்ந்தவருக்கு இடம் படுக்கை முதலியவை கொடாதவர் நரகத் துன்பத்தை அனுபவித்து, மறுபிறப்பிலே தாம் கைப்பிடித்த மனைவியரை இழந்து துக்கமுற்றுத் திரிவர்.

அதிதியானவன் வேற்றூரினின்றும் வழிப்போக்கனாய் அன்ன முதலிய உதவி பெறும்பொருட்டு வருபவன். அவன் ஒரு நாளிருந்தாற்றான் அதிதி யெனப்படுவன். ஊரிலிருப்பவனையும் வேறொரு நிமித்தத்தினால் வருகிறவனையும் அன்னத்தின் பொருட்டு ஊர்தோறும் திரிகின்றவனையும் அதிதியென்று கொள்ளலாகாது.

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

(1) சற்பாத்திரம் - நல்லறிவொழுக்கங்களுடையவர்.

(2) பதிசாத்திரம் - கடவுளால் அருளிச் செய்யப்பட்ட நூல்; அவை வேத சிவாகமங்கள். இனிக் கடவுளை அறிந்து உய்தற் கேதுவாகிய நூல்களாகிய சித்தாந்த சாத்திரங்கள் போவனவுங் கொள்ளலாம். தானபாத்திரம் - தானப் பொருளைப் பெறுதற்குத் தகுதியுடையவர்.

(6) செட்டாம் - வியாபாரமாகும்.

ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.


Friday, May 26, 2006

நாவலர் பாலபாடம் - பெரியோரைப் பேணல்

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
பெரியோரைப் பேணல்


பிதா, மாதா, பாட்டன், பாட்டி, மாமன், மாமி, தமையன், தமக்கை, தமையன் மனைவி, உபாத்தியாயர், குரு முதலாகிய பெரியோர்களை அச்சத்தோடும் அன்போடும் வழிபடல் வேண்டும். அவர்கள் குற்றஞ் செய்தார்களாயினும், அதனைச் சிறிதும் பாராட்டாது பொறுத்துக் கொள்ளல் வேண்டும். இராசா யாது குற்றஞ் செய்யினும் அவனோடு சிறிதும் எதிர்க்காது அவனுக்கு அடங்கி நடத்தல் போலவே பிதா மாதா முதலாயினோருக்கும் அடங்கி நடத்தல் வேண்டும்.

பிதா மாதா முதலாயினோர் முட்டுப்படாவண்ணம் இயன்றமட்டும் அன்னவஸ்திர முதலியவை கொடுத்து, அவர்களை எந்நாளும் பாதுகாத்தல் வேண்டும். அவர்களுக்கு வியாதி வந்தால், உடனே மனம் பதைபதைத்துச் சிறந்த வைத்தியரைக் கொண்டு மருந்து செய்வித்தல் வேண்டும். அவர்கள் ஏவிய ஏவல்களைக் கூச்சமின்றிச் செய்தல் வேண்டும். பிள்ளைகள் தங்கள் கல்விக்கும் நல்லொழுக்கத்துக்கும் இடையூறாகப் பிதா மாதாக்கள் சொல்லுஞ் சொற்களை மறுத்தல் பாவமாகாது. "தந்தை தாய் பேண்" என்னும் நீதிமொழியைச் சிந்தியாது, மூடர்கள் அநேகர் தங்களை மிக வருந்திப் பெற்றுவளர்த்த பிதா மாதாக்கள் பசித்திருப்பத் தாமும் தம்முடைய பெண்டிர் பிள்ளைகளும் வயிறு நிறையப் புசித்துக்கொண்டு, தம்மையும் பொருளாக எண்ணி, தமக்கு வரும் பழிபாவங்கட்கு அஞ்சாது திரிகின்றார்கள். பிதா மாதாக்களையும் சுற்றத்தாரையும் வஞ்சித்து அன்னியர்களுக்கு உதவி செய்கின்றார்கள்.

பிதா மாதா முதலாயினோர் இறக்கும்பொழுது அவரைப் பிரியாது உடனிருத்தல் வேண்டும். அவர் மனம் கலங்கும்படி அவரெதிரே அழலாகாது. அவர் மனம் கடவுளுடைய திருவடியிலே அழுந்தும்படி, அறிவொழுக்கமுடையவரைக் கொண்டு அருட்பாக்களை ஓதுவிக்கவும் நல்லறிவைப் போதிப்பிக்கவும் வேண்டும். அவர் இறந்த பின்பு உத்தரக்கிரியைகளை உலோபமின்றித் தம் பொருளளவுக்கு ஏற்ப, விதிப்படி சிரத்தையோடு செய்து முடித்தல் வேண்டும். வருடந்தோறும் அவர் இறந்த திதியிலும் புரட்டாசி மாசத்திலும் சிராத்தம் தவறாமற் செய்தல் வேண்டும். அநேகர் தங்கள் பிதா மாதாக்கள் சீவந்தர்களாய் இருக்கும்பொழுது அவர்களை அன்னவஸ்திர முதலியவை கொடுத்துப் பேணாது அவர்களுக்குத் துன்பத்தையே விளைவித்து, அவர்கள் இறந்தபின்பு உத்தரக்கிரியைகளை உலகத்தார் மெச்சும் பொருட்டு வெகு திரவியஞ் செலவிட்டுச் செய்கின்றார்கள். ஐயையோ இது எவ்வளவோரறியாமை! இச்செய்கையால் வரும்பயன் யாது? உத்தரக்கிரியைச் சிறிது பொருள் செலவிட்டும் செய்யலாம், அதற்குச் சிரத்தையே முக்கியம். பிதா மாதாக்கள் சீவந்தர்களாய் இருக்கும்பொழுது அவர்களை முட்டுப்படாவண்ணம் அன்னவஸ்திரங் கொடுத்துப் பாதுகாத்தலிலே இயன்றமட்டும் பொருள் செலவிடுதலே ஆவசியகம்.

பிதா மாதா முதலிய பெரியோர்களைக் கடுஞ்சொற் சொல்லிக் கோபித்து உறுக்கிய பாவிகள், நரகத்திலே தங்கள் முகத்தை அட்டைகள் குடைந்து இரத்தங்குடிக்க, அதனாற் பதைத்து விழுவார்கள். பின்பு அவர்கள் சரீரம் நடுங்கி அலறும்படி இயமதூதர்கள் சுடுகின்ற காரநீரையும் உருக்கிய தாமிர நீரையும் அவர் கண்மீது வார்ப்பார்கள். அப்பெரியோர்களுக்கு ஏவல் செய்யக் கூசின பாவிகளுடைய முகத்தை இயமதூதர்கள் குடாரியினாலே கொத்துவார்கள்; அப்பெரியோர்களைக் கோபத்தினாலே கண் சிவந்து ஏறிட்டுப் பார்த்தவர்களுடைய கண்களிலே இயமதூதர்கள் அக்கினியிற் காய்ச்சிய ஊசிகளை உறுத்திக் காரநீரை வார்ப்பார்கள்.

பிதா மாதா முதலாயினோரை நிந்தித்தவர்களையும், அவர்களைப் பேணாது தள்ளிவிட்டவர்களும், பைத்தியத்தினாலும், நாக்குப் புற்றினாலும், நேத்திர ரோகத்தினாலும், காலிற்புண்ணினாலும், சர்வாங்க வாயு ரோகத்தினாலும், பெருவியாதியினாலும் வருந்துவர்கள். பிதா மாதா முதலாயினோரைப் பேணாதவர்களும் உபாத்தியாயருக்குக் கொடுக்கற்பாலதாகிய வேதனத்தைக் கொடாதவர்களும், குருவுக்குக் கொடுக்கற்பாலதாகிய காணிக்கையைக் கொடாதவர்களும், தரித்திரர்களாய்ப் பசியினால் வருந்திப் பெண்டிரும் பிள்ளைகளும் கதற இரக்கத்தகாத இடங்களெல்லாம் பிச்சையிரந்து உழல்வார்கள்.

பிதா மாதாக்களுக்குச் சிராத்தஞ் செய்யாதவர்களும், புரட்டாதி மாசத்திலே மகாளய சிராத்தஞ் செய்யாதவர்களும், சிரோரோகங்களினால் வருந்துவார்கள். புலவர்களாயினும், ஞானிகளாயினும், மூடர்களாயினும், பெண்களாயினும், பிரமசாரிகளாயினும், இறந்த தினச் சிராத்தத்தைச் செய்யாதொழிந்தால், கோடி சனனத்திலே சண்டாளராவார்கள்.

எவன் தன்னுடைய தாய் தந்தை முதலிய பந்துக்கள் வறுமையினால் வருந்தும்போது இம்மையிலே புகழின் பொருட்டு அன்னியர்களுக்குத் தானங்கொடுக்கின்றானோ, அந்தத் தானம் தருமமன்று. அது முன்பு தேன்போல இனிதாயிருப்பினும், பின்பு விஷம் போலத் துன்பப்படுத்தும். பார்க்கும்போது புகழுக்கு ஏது போலத் தோன்றினும் பின்பு நரகத் துன்பத்துக்கே ஏதுவாகும் என்பது கருத்து. எவன் தான் ஆவசியகமாகப் பாதுகாக்க வேண்டிய மனைவி பிள்ளை முதலாயினோரைத் துன்பப்படுத்திப் பரலோகத்தின் பொருட்டுத் தானஞ் செய்கின்றானோ, அந்தத் தானமும் அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் துன்பத்தையே விளைவிக்கும்.

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

பேணல் - பாதுகாத்தல், வழிபடல், விரும்பி (அன்பு செய்து) நடத்தல்.

(1) பாட்டன் - பிதாவின் தகப்பனும், மாதாவின் தகப்பனும்; பாட்டி - தகப்பனுடைய தாயும், தாயினுடைய தாயும்; பாராட்டாது - பொருட்படுத்தாமல்.

(2) கூச்சம் - கூசுதல், வெட்கம்; பொருளாக - மதிப்புடையவராக; வஞ்சித்து - வஞ்சனை செய்து; இதனை 'உணவுப் பந்தியில் வஞ்சனை செய்து படைத்தல்' என்புழிப் போலக் கொள்க.

(3) அருட்பாக்கள் - கடவுளின் திருவருளைப் பெற்றவர் அத்திருவருள் ஞானத்தாற் பாடிய பாடல்கள். அவை தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் போன்ற நூற்பாடல்கள், உத்தரக்கிரியை - ஒருவரது மரணத்தின்பின் அவரைக் குறித்துச்செய்யுங் கருமங்கள்; அவை பிரேத தகனம், அந்தியேட்டி, சிரார்த்தம் போல்வன. உலோபம் இன்றி - குறையில்லாமல்; அர்த்தலோபம், மந்திரலோபம், கிரியாலோபம் முதலிய குறைகள் உண்டாகாபடி என்றவாறு. சிரத்தை - அன்பு; இறந்த திதி, பிரதமை, துவிதியை முதலிய பதினைந்தனுள் இறந்த தினத்துக்குரிய திதி. வருடந்தோறும் இறந்த திதியிற் செய்வது 'வருஷ சிராத்தம்' எனவும், புரட்டாசி மாசத்துக் கிருஷ்ணபக்ஷத்திற் செய்வது 'மகாளய சிராத்தம்' எனவும் சொல்லப்படும். சீவந்தர்களாய் - சீவிப்பவர்களய், உயிருடன் வாழ்பவராய்; பேணாது - பாதுகாவாது; ஆவசியகம் - அவசியத்தன்மை வாய்ந்தது. கட்டாயஞ் செய்ய வேண்டியது; அவசியத்தோடு கூடியது. (ஆவசியகம் - வடசொல்).

(4) உறுக்கிய - அதட்டின; கார நீர் - கந்தகத் திராவகம் கறியுப்புத் திராவகம் போன்ற காரமுள்ள நீர்ப் பதார்த்தம்; இவை பட்டதேகம் வெந்து புண்கொள்ளும்; உருக்கிய தாமிரநீர் - செம்பு என்ற உலோகத்தைக் கம்மியரின் உலைக்களத் தீயில் உருக்கித் திரவமாக்கிய நிலையுடையது. குடாரி கோடரி எனவும், கோடாலி எனவும் வழங்கும் ஆயுதம். ஏறிட்டுப் பார்த்தவர் - மாறுபட்டு உற்றுப் பார்த்தவர்.

(5) வேதனம் - சம்பளம்; காணிக்கை - தட்சிணை.

(6) சனனம் - பிறப்பு; சண்டாளர் - நீசர்.

(7) பந்துக்கள் - உறவினர்; (பந்து: வடசொல்). பரலோகம் - மேலுலகபதவி, புண்ணியலோகபதவி; பரம் - மேன்மை; லோகம் - உலகம்; உலக இன்பம்.

ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.

Saturday, May 06, 2006

ஓரே மதம், அது அன்பு மதம்-பாபா

ஒரே மதம், அது அன்பு மதம் - பாபா

கவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா எந்த ஒரு புதிய மதத்தையும் நிறுவவோ, போதிக்கவோ முயற்சி செய்யவில்லை. அவருடைய பணியின் முக்கிய நோக்கங்கள்:
  • தனிநபருக்கு உதவுதல். இந்த உதவி மூன்று வகைப்பட்டது.
1. அவனிடம் இயல்பாகவே உள்ள தெய்வீகத்தன்மையை அவனே உணர உதவுதல். இறைவனுடன் இரண்டறக் கலப்பது என்ற இறுதி இலட்சியம் நோக்கிச் செல்ல உதவுதல்.
2. தெய்வீகம் என்பது அன்பு, கடமையில் காட்டப்படும் கச்சிதம் ஆகியவற்றில் அட்ங்கும் என்பதால் இவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிக்க உதவுதல்.

3. இதன் மூலமே வாழ்க்கையில் மகிழ்ச்சி, அழகு ஆகியவற்றை அநுபவிக்கச் செய்தல்.

  • எல்லாவிதமான மனித உறவுகளும் பின்வரும் அடிப்படைகளில் இயங்க வேண்டும் என்பதை உணர்த்துதல்: சத்யம், தர்மம், பிரேமை, சாந்தி, அஹிம்சை.
  • மதம் என்பதன் மெய்யான அடிப்படையினை உணர்த்துவதன் மூலம் எல்லா மதத்தினருக்கும் தங்கள் தங்கள் மதக் கோட்பாடுகளை மேலும் தீவிரமாகவும் மனப்பூர்வமாகவும் பின்பற்ற உதவுதல்.
  • இந்த இலட்சியங்களையெல்லாம் அடைய பின்வரும் கோட்பாடுகளை அநுசரிக்கும்படி கூறுகிறார் பாபா:

1. ஒரே மதம் அது அன்பு மதம்
ஒரே ஜாதி அது மனித ஜாதி
ஒரே மொழி அது இதய மொழி
ஒரே கடவுள் அவர் சர்வ வியாபி.

2. எப்போதும் கடவுளை நினைத்து உலகின் சகல ஜீவராசிகளும் ஜடப்பொருள்களும் கூட அவனது பல்வேறு வடிவங்களுள் ஒன்றே என்று உணருதல்.

3. எல்லா மதங்களின் இடையேயும் உள்ள ஒற்றுமைகளை அடிக்கோடிட்டுக் காட்டி, எல்லா மதங்களும் அன்பின் அடிப்படையில் உருவானவை என்பதைப் புரிந்து கொள்வது.

4. கடமையாற்றுவது என்பது இறைவனுக்குச் செய்யும் சேவை என்பதை உணர்ந்து செயல்படுவது.

5. வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்னைகள் அனைத்திலும் தெய்வீக அன்பு, கருணை, சகிப்புத் தன்மை, உதவுகிற இயல்பு ஆகியவற்றைக் கொணர்ந்து இவை மூலம் அந்தப் பிரச்சினைகளைச் சந்தித்து வெற்றி காணல்.

6. எல்லாக் காரியங்களையும் தார்மீக அடிப்படையிலும், பாபத்துக்கு அஞ்சும் அடிப்படையிலும் எடைபோட்டுச் செய்தல்.

7. வாழ்க்கையை நடத்தக் கடமையாற்றுவது தவிர ஆன்மீக, கல்வி அல்லது சேவா மார்க்கத்திலும் மனத்தைச் செலுத்தி இதன் மூலம் தனி நபர்களுக்கோ சமுதாயத்துகோ உதவ முயற்சி மேற்கொள்ளுதல். இதனைத் திட்டமிட்டும் எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமலும் செய்தல். நம்மை யாரும் பாராட்ட வேண்டும் என்று கூட எதிர்பாராமல் இறைவனின் அன்பையும் அருளையும் பெறமட்டுமே செயலாற்றுதல்.

நன்றி: கல்கி (26.1.1992)

இன்று (06 மே 2006) ஸ்ரீ சத்யசாயி பாபாவின் தாயார் ஈஸ்வராம்மா அவர்களின் பிறந்ததினம் உலகெங்கும் பாபா பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி இந்தக்கட்டுரை பக்திப்பூக்களில் பதியப்படுகிறது.

மேலும் வாசிக்க: மனிதாபிமானமே இவர் மதம்

Friday, May 05, 2006

நாவலர் பாலபாடம் - செய்ந்நன்றி அறிதல்

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
செய்ந்நன்றியறிதல்

செய்ந்நன்றியறிதலாவது தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை. காரணமின்றிச் செய்த உதவிக்கும், காலத்தினாற்செய்த உதவிக்கும், பயன் தூக்காது செய்த உதவிக்கும், பூமியையும் சுவர்க்கத்தையும் கைம்மாறாகக் கொடுத்தாலும் அவைக்கு இவை ஈடாகா. காரணமின்றிச் செய்த உதவியாவது தனக்கு முன்னே ஓருதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவி. காலத்தினாற் செய்த உதவியாவது ஒருவனுக்கு இறுதி வந்தபொழுது ஒருவன் செய்த உதவி, பயன் றூக்காது செய்த உதவியாவது இவருக்கு இது செய்தால் இன்ன பிரயோசனங் கிடைக்கும் என்று ஆராயாது செய்த உதவி.

இந்த மூன்றுமல்லாத உதவியும், அறிவொழுக்க முடையவருக்குச் செய்தபோது, அவருடைய தகுதி எவ்வளவு பெரியதோ அவ்வளவு பெரியதாகும். ஆதலினால், அறிவொழுக்கமுடையவர், தமக்குப் பிறர்செய்த உதவி தினையளவினதாயினும், அதனை அவ்வளவினதாக நினையாது பனையளவினதாக நினைப்பர்.

யாவராயினும் தமக்கு நன்றி செய்தவருடைய சிநேகத்தை விடலாகாது. ஒருவன்றானே முன்பு ஒருநன்றி செய்து, பின்பு தீமை செய்வானாயின், அவன் செய்த அவ்விரண்டினுள்ளும் தீமையை அப்பொழுதே மறந்து, நன்றியை எப்பொழுதும் மறவாமற்கொள்வதே மிக மேலாகிய தருமம். தமக்கு ஒரு நன்றி செய்தவர் பின்பு நூறு தீமைகளைச் செய்தாராயினும், மேலோர், அந்நன்றி ஒன்றையுமே உள்ளத்தில் வைத்துத் தீமை யாவையும் பொறுப்பர். தமக்கு நூறு நன்றி செய்தவர் பின்பு ஒரு தீமை செய்தாராயினும், கீழோர் அந்நன்றி நூற்றையும் மறந்துவிட்டு, அத்தீமையன்றின் பொருட்டு அவர்மேல் வைரஞ் சாதிப்பர்.

மகாபாதகங்களைச் செய்தவருக்கும் பிராயச் சித்தத்தினால் உய்வு உண்டாகும்; ஒருவர் செய்த நன்றியை மறந்தவருக்கு உய்வு இல்லை. செய்ந்நன்றி மறந்தவர் அளவில்லாத காலம் நரகங்களிலே கிடந்து துன்புற்று, பின்பு பூமியிலே பிறந்து, வரதரோகம், சூலை, மசூரிகை, குட்டம் முதலிய வியாதிகளினால் வருந்துவர்.

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

(1) காலத்தினாற் செய்த உதவி - மரண ஆபத்து நேர்ந்த பொழுது செய்த உதவி (ஆல் உருபு 7-ஆம் வேற்றுமைப் பொருட்கண் வந்த வேற்றுமை மயக்கம்). பயன் தூக்காது - பயனை ஆராயாமல் (எதிர்பாராமல்). இறுதி - மரணம், ஈண்டு மரணத்தை விளைவிக்கும் ஆபத்தையுணர்த்து.

(3) வைரம் - விரோதம், நீடித்தபகை.

(4) மகா பாதகங்கள் - பெரிய பாவங்கள்; உய்வு - பாவஞ் சூழாதபடி தப்பிக் கொள்ளல்; மசூரிகை - வைசூரி (அம்மை நோய்).

ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.


Saturday, April 29, 2006

நாவலர் பாலபாடம் - சூது

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
சூது

சூதாவது, கவறு சதுரங்கம் முதலியவற்றால் ஆடுதல். சூது, தருமமும் பொருளும் இன்பமுமாகிய மூன்றுக்கும் இடையூறாய் உள்ளது. சூதாட்டத்தில் வென்று பெரும் பொருள், இரையென்று மீன் விழுங்கிய தூண்டின் முள்ளைப் போலச் சூதாடுவோர் நீங்காமைக்கு இட்ட ஒரு தளையாகி மற்றைத்தொழில்களை யெல்லாங் கெடுத்துப் பின்பு துன்பத்தைத் தரும். ஆதலால், ஒருவன் தனக்குச் சூதாடுதலில் வெல்ல வல்லமை யிருந்தாலும் சூதாடலாகாது. சூதாடுவோர் ஒன்றை முன்பெற்று இன்னும் வெல்லுவோமென்னும் கருத்தால் ஆடி நூற்றை இழப்பர். அவர் பொருள் அப்படியே அழிந்து வருதலால், அப்பொருளினால் அடையதக்க தருமமும் இன்பமும் அவருக்கு இல்லை. செல்வத்தைக் கெடுத்து வறுமையைக்கொடுத்தற்றொழிலிலே தவறாமையால் சூதை மூதேவியென்பர் அறிவுடையோர்.

சூதாடலை, விரும்பினவர் வெல்லினும் தோற்பினும் ஒருபொழுதும் அச்சூதைவிடாது தங்காலத்தையும் கருத்தையும் அதிலே தானே போக்குவர். ஆதலால் ஒளியும் கல்வியும் செல்வமும் போசனமும் உடையுமாகிய ஐந்தும் அவரை அடையாவாம். சூதானது தோல்வியினாலே பொருளைக் கெடுத்துக் களவை விளைவித்து, வெற்றி பெறுவதற்காகப் பொய்யை மேற்கொள்ளப்பண்ணிய பகையை விளைவித்தலால், அருளைக் கெடுத்து, இம்மை மறுமை இரண்டினுந் துன்பத்தையே அடைவிக்கும். ஆதலினாலே, சூதானது தரித்திரத்துக்குத் தூது, பொய்க்குச் சகோதரம், களவு சண்டை முதலிய கீழ்த் தொழில்களுக்கு மாதா, சத்தியத்துக்குச் சத்துரு என்பர் அறிவுடையோர்.

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

(1) கவறு - சூதாடு கருவி; (சொக்கட்டான், தாயம், முதலியன ஆடும் காய்கள்). தளையாகி - கயிறு முதலியவற்றாற் கட்டப்பட்ட தடைபேஒன்று, மனத்தைக் கவர்ந்து பிணிப்பதாகி என்றபடி.

(2) ஒளி - தேக காந்தி, தேஜஸ், வசீகரமான தோற்றம். 'தூது, சகோதரம்' முதலியனவற்றுக்குத் 'தூதுபோன்றது. சகோதரம் போன்றது' என்றிங்ஙனம் கருத்தாகும்.

ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.

Sunday, April 16, 2006

நாவலர் பாலபாடம் - கோபம்

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
கோபம்

கோபத்தைச் செய்தற்குக் காரணம் ஒருவனிடத்து உண்டாயினும், அதனைச் செய்யலாகாது. கோபந்தோன்றுமாயின், மனக்கலக்கம் உண்டாகும். அது உண்டாகவே அறிவு கெடும். அது கெடவே, உயிர்கள்மேல் அருள் இல்லையாகும். அது இல்லையாகவே, அவைகளுக்குத் துன்பஞ் செய்தல் நேரிடும். ஆகையால், கோபத்தை எந்நாளும் அடக்கல் வேண்டும்.

யாவனொருவன் தம்மை இழிவாகச் சொல்லிய பொழுது தம்மிடத்து அவ்விழிவு உள்ளதாயின், " இது நமக்கு உள்ளதே" என்று தம்மைத் தாமே நொந்து திருத்தமடைதல் வேண்டும். அப்படிச் செய்யாது கோபித்தாராயின், தமது கோபம் அநீதி என்பது தமக்கே தெரியுமாதலால், தம் மனமே தம்மைக் கண்டிக்கும். தம்மிடத்து அவ்விழிவு இல்லையாயின், 'இவன் சொல்லியது பொய்; பொய்யோ நிலைபெறாது' என்று அதனைப் பொறுத்தல் வேண்டும். நாயானது தன்வாயினாற் கடித்த பொழுது மீட்டுத் தம் வாயினால் அதனைக் கடிப்பவர் இல்லை. கீழ்மக்கள் தம் வாயினால் வைதபொழுது மேன் மக்கள் மீட்டுத் தம்வாயினால் வைதபொழுது மேன் மக்கள் மீட்டுத் தம்வாயினால் அவரை வைவரோ? வையார். தமக்குப் பிறர் தீங்கு செய்தபொழுது தாம் அதனைப் பொறுப்பதேயன்றி 'இவர் நமக்குச் செய்த தீங்கினாலே எரிவாய் நரகத்தில் வீழ்வாரே' என்று இரங்குவதும் அறிவுடையவருக்குக் கடன். தன்னை வெட்டிய குடாரத்துக்கும் தனது நறுமணத்தையே கொடுக்குஞ் சந்தனமரம் போலத் தமக்குத் தீமை செய்தவருக்கும் நன்மையே செய்வது அறிவுடையோருக்கு அழகு.

வலியார்மேற் செய்யுங்கோபம் அவருக்குத் தீங்கு செய்யாமையால், அதனைத் தடுத்தவிடத்துந் தருமமில்லை. மெலியார்மேற் செய்யுங்கோபம் அவருக்குத் தீங்கு செய்தலால், அதனைத் தடுப்பதே தருமம். வலியார்மேற் செய்யுங்கோபம் இம்மையில் அவராலே துன்பமொன்றையே அடைவித்தலாலும், மெலியோர்மேற் செய்யுங்கோபம் இம்மையிலே பழியையும் மறுமையிலே பாவத்தையும் அடைவித்தலாலும், இதுவே மிகக் கொடியதாகும். ஆகவே, கோபம் ஓரிடத்தும் ஆகாதென்பதே துணிவு.

ஒருவனுக்கு அருளினால் உண்டாகும் முகமலர்ச்சியையும் மனமகிழ்ச்சியையும் கொன்று கொண்டெழுகின்ற கோபத்தின் மேற்பட்ட பகை வேறில்லை. ஆதலினாலே, தன்னைத்தான் துன்பமடையாமற் காக்க நினைத்தானாயின், தான் மனத்திலே கோபம் வாராமற் காக்கக்கடவன். காவானாயின், அக்கோபம் அவனையே இருமையினும் கடுந்துன்பங்களை அடைவிக்கும்.

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

(2) யாவனொருவன் - எவனாவது ஒருவன். 'அதனைக் கடிப்பவர் இல்லை' என்பதன்பின் 'அது போல' என்று உவமானபதம் வருவித்துரைக்க; குடாரம் - கோடரி (கோடாலி).

(4) இருமை - இருபிறவி; என்றது இப்பிறவியும் மறு பிறவியுமாகிய இரண்டினை.

Sunday, April 09, 2006

நான்காம் பாலபாடம் - அழுக்காறு

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
அழுக்காறு

ழுக்காறாவது பிறருடைய கல்வி செல்வம் முதலியவற்றைக் கண்டு பொறாமையடைதல். பொறாமை யுடையவன் தன்னுடைய துன்பத்துக்குத் தானே காரணனாகின்றான். அக்கினியினாலே பதர் எரிவதுபோலப் பொறாமையினாலே மனம் எரிகின்றது. ஆதலினாலே பொறாமையுடையவனுக்குக் கேடு விளைத்தற்கு வேறு பகைவர் வேண்டாம். அப்பொறாமை ஒன்றே போதும்.

பொறாமையுடையவனுடைய மனசிலே ஒருபோதும் இன்பமும் அமைவும் உண்டாகா. பொறாமையாகிய துர்க்குணம் மனிதனுக்கு இயல்பாகும். அது தோன்றும் பொழுதே அறிவாகிய கருவியினால் அதைக் களைந்துவிடல் வேண்டும்; களைந்துவிட்டால், அவன் மனசிலே துன்பம் நீங்க இன்பம் விளையும். பொறாமையுடையவனிடத்தே சீதேவி நீங்க, மூதேவி குடிபுகுவள். பொறாமையானது தன்னையுடையவனுக்கு இம்மையிலே செல்வத்தையும் புகழையும் கெடுத்து, எல்லாப் பாவங்களையும் விளைவித்து, அவனை மறுமையிலே நரகத்திற் செலுத்திவிடும்.

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

அழுக்காறு: 'அழுக்கறு' என்னும் பகுதியடியாகப் பிறந்த சொல்; அழுக்கறு - பொறாமைப்படு.

(1) பதர் - அரிசியாகிய உள்ளீடு அற்ற நெல்; சப்பட்டை எனவும் வழங்கும்.

(2) அமைவு - நிறைவு, திருப்தி, அமைதி, மன ஆறுதல்; துர்க்குணம் - தீயகுணம்; கருவி - ஆயுதம்; சீதேவி - இலக்குமி. செல்வம் என்பது தாற்பரியப் பொருள்.

ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.

Saturday, April 01, 2006

நான்காம் பாலபாடம் - பொய்

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
பொய்

பொய்யாவது உள்ளதை இல்லதாகவும் இல்லதை உள்ளதாகவும் சொல்லல். பொய் மிக இழிவுள்ளது. ஒரு பொய் சொன்னவன், அதைப் தாபிக்கப்புகின், ஒன்பது பொய் சொல்லல் வேண்டும். 'நான் சொன்ன பொய்யைப் பொறுத்துக் கொள்ளல் வேண்டும்' என்பானாயின், ஒன்றுடனொழியும். பொய் சொல்லத் துணிகின்றவன் களவு முதலிய தீமைகளைச் செய்தற்கு அஞ்சான். பொய் சொல்லலாகிய பாவமொன்றை ஒழிப்பின், அதுவே வழியாக மற்றைப் பாவங்களெல்லாம் தாமே ஒழிந்துவிடும். பொய்யன் மெய்யைச் சொல்லுகிற பொழுதும் பிறர் அதனை நம்பார். ஆதலால், விளையாட்டுக்காயினும் பொய் சொல்லலாகாது.

மெய் சொல்லுகிறவனுக்கு அதனால் ஒரு கேடு வந்ததாயினும், அவனுள்ளத்திலே மகிழ்ச்சி உண்டாகும். அவன் பகைவர்களும் அவனை நன்கு மதிப்பர்கள். பிறராலே நன்கு மதிக்கப்படவும் தன்காரியம் சித்திபெறவும் விரும்புகின்றவன் எப்பொழுதும் தன்மானத்தோடு பொருந்த மெய்யே பேசல் வேண்டும். ஒருவன் தன் மனம் அறிந்ததொன்றைப் பிறர் அறிந்திலர் என்று பொய் சொல்லாதிருக்கக்கடவன். பொய் சொன்னானாயின், அவன் மனமே அப்பாவத்துக்குச் சாக்ஷியாய் நின்று அவனைச் சுடும்.

உண்மை சொல்பவன் இம்மையிற் பொருளையும் மறுமையிற் புண்ணிய லோகத்தையும் அடைவன். சத்தியமே, மேலாகிய தானமும் தவமும் தருமமுமாம். எவனுடைய புத்தி சத்தியத்தில் நிற்குமோ அவன் இகத்திலே தெய்வத் தன்மையை அடைவன். சத்தியத்தின் மிக்க தருமமும் அசத்தியத்தின் மிக்க பாவமும் இல்லை.

பொய்ச்சான்று சொன்னவரும், பொய்வழக்குப் பேசின வரும், வழக்கிலே நடுவுநிலைமையின் வழுவித் தீர்ப்புச் செய்தவரும், ஏழுபிறப்பில் ஈட்டிய எல்லாப் புண்ணியங்களையும் கெடுத்தவராவர். பிரமவதையும் சிசுவதையும் தந்தைவதையும் செய்தவராவர். மிகக் கொடிய ரெளரவம் முதலிய நரகங்களை அடைவர். அவரை இயமதூதர்கள் வாயிலே அடித்து, அவருடைய நாக்கையும் அறுத்து, பல துக்கங்களையும் உறுவிப்பார்கள். பின்னும் ஊர்ப்பன்றி, கழுதை, நாய், நீர்க்காக்கை, புழு என்னும் பிறப்புக்களிற் பிறந்து, பின்பு மனிதப் பிறப்பிலே பிறவிக்குருடரும், செவிடரும், குட்டநோயினரும், வாய்ப்புண்ணினரும், ஊமைகளுமாய்ப் பிறப்பர். மிக்க பசிதாகமுடையவராகித் தம் பகைவர் வீட்டிலே தம் மனைவியரோடும் பிச்சையிரந்து உழல்வர்.

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

(2) அறிந்திலர் என்று பொய் சொல்லாதிருக்க - அறியவில்லையே என்று கருதிப் பொய் சொல்லுதலைச் செய்யாதிருக்க; 'என்று' என்ற வினையெச்சம் 'சொல்லாதிருக்க' என்னும் எதிர்மறை வினையுட் சொல்லுதல் என்னும் பகுதியோடு முடிந்தது. சுடும் - வருந்தும்.

(3) இகத்திலே - இவ்வுலகத்திலே.

(4) பொய்ச்சான்று - பொய்ச்சாட்சி; வழுவி - தவறி; பிரமவதை - பிராமணரைக் கொல்லுங் கொலை; சிசுவதை - குழந்தையைக் கொல்லுதல். (வதை - கொலை).

ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.


Friday, March 24, 2006

நான்காம் பாலபாடம் - வியபிசாரம்

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
வியபிசாரம்


வியபிசாரமாவது காம மயக்கத்தினாலே தன் மனையாளல்லாத மற்றைப் பெண்களை விரும்புதல். மற்றைப் பெண்கள் என்பது கன்னியரையும் பிறன் மனைவியரையும் பொதுப் பெண்களையும் குறிக்கும். பிறன் மனையாளை விரும்புவோரிடத்தே தருமமும் புகழும் சிநேகமும் பெருமையுமாகிய நான்கும் அடையாவாம். அவரிடத்தே குடி புகுவன பாவமும் பழியும் பகையும் அச்சமுமாகிய நான்குமாம். ஒருவன் தன் மனையாளைப் பிறன் விரும்புதலை அறியும் பொழுது தன் மனம் படுந்துயரத்தைச் சிந்திப்பானாயின், தான் பிறன் மனையாளை விரும்புவானா! விரும்பானே.

பிறன் மனையாளை விரும்பாத ஆண்மையே பேராண்மை. பிறராலே 'இவன் பரதாரசகோதரன்' எனப்படுதலே பெரும்புகழ். இப்பேராண்மையை, பெரும்புகழை உடைய மகாவீரனை அவன் பகைவரும் அவன் இருக்கும் திக்கு நோக்கி வணங்குவர். இவ்வாண்மையும் புகழும் இல்லாதவரை, அவருக்குக் கீழ்ப்பட்டோராகிய மனைவியர் பிள்ளைகள் வேலைக்காரர் முதலாயினோரும், நன்கு மதியார். அச்சத்தாலும் பொருளாசையாலும், அவரெதிரே நன்குமதிப்பார் போல நடிப்பினும், தமது உள்ளத்தினும் அவரெதிரல்லாத புறத்தினும் அவமதிப்பே செய்வர். வியபிசாரஞ் செய்வோர் தாமாத்திரமன்றித் தங்கீழுள்ளாரும் வியபிசாரஞ் செய்து கெடுதற்குக் காரணராவர். ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் அவரின் மூத்தோரிடத்துஞ் செல்லும். ஒழுக்கமில்லாதார் வாய்ச்சொல் அவரின் இளையோரிடத்துஞ் செல்லாது. ஆதலினால், ஒழுக்கமில்லாதவர் பிறரைத் திருத்துதற்கும் வல்லராகார்.

தூர்த்தர்களோடு பழகுதலும், பெண்களுடைய கீதத்தைக் கேட்டலும், பெண்களுடைய நடனத்தைப் பார்த்தலும், சிற்றின்பப் பாடல்களைப் படித்தலும் கேட்டலும், பார்க்கத்தகாத படங்களையும் பிரதிமைகளையும் பார்த்தலும், பொதுப் பெண்களுடைய தெருவுக்குப் போதலும், பெண்கள் கூட்டத்திலே தனித்துப் போதலும், பெண்களோடு சூது சதுரங்கம் முதலியவை ஆடுதலும் வியபிசாரத்துக்கு ஏதுக்களாம். உயிர்க்கு உறுதி பயக்கும் நூல்களைப் படித்தல் படிப்பித்தல் கேட்டல்களிலும், கடவுளுக்குத் திருத்தொண்டுகள் செய்தலிலும், தரும வழியாகப் பொருள் சம்பாதித்தலிலுமே காலத்தைப் போக்கல்வேண்டும். வயசினாலும் நல்லறிவினாலும் நல்லொழுக்கத்தினாலும் முதிர்ந்த பெரியோரோடு கூடல் வேண்டும். சிறிது நேரமாயினும் சோம்பலாய் இருக்கலாகாது. சோம்பேறிக்கு அச்சோம்பல் வழியாகவே, தீச்சிந்தை நுழையும். அத்தீச்சிந்தை வியபிசாரத்துக்கு ஏதுவாகும்.

வியபிசாரமே கொலைகளுக்கெல்லாம் காரணம். வியபிசாரமே களவுகளுக்கெல்லாம் காரணம். வியபிசாரமே அறிவை மயக்கும் பொருள்களாகிய கள்ளு, அவின், கஞ்சா முதலியவைகளை உண்டற்குக் காரணம். வியபிசாரமே பொய் சொல்லற்குக் காரணம். வியபிசாரமே சண்டைக்குக் காரணம். வியபிசாரமே குடும்ப கலகத்திற்குக் காரணம். வியபிசாரமே வியாதிகளெல்லாவற்றிற்குங் காரணம். வியபிசாரமே திரவிய நாசத்திற்குக் காரணம். வியபிசாரமே சந்ததி நாசத்திற்குக் காரணம்.

பிறன் மனையாளைக் கூடினவர் நரகத்திலே அக்கினி மயமாகிய இருப்புப் பாவையைத் தழுவி வருந்துவர். இயமதூதர்கள் அவரை இருப்புக் குடத்தினுள்ளே புகுத்தி அதன் வாயை அடைத்து, அக்கினிமேல் வைத்து எரிப்பார்கள். அவர் சரீரத்தை உரலிலிட்டு இடிப்பார்கள்; அக்கினி மயமாகிய சிலையிலே சிதறும்படி அறைவார்கள். இருட்கிணற்றிலே விழுத்துவர்கள்; அங்கே இரத்தவெள்ளம் பெருகும்படி கிருமிகள் அவருடம்பைக் குடையும். பின்னும் அவர் அக்கினி நரகத்திலே வீழ்த்தப்பட்டு 'என் செய்தோம் என் செய்தோம்' என்று நினைந்து நினைந்து அழுங்குவர்.

பிறன் மனையாளை இச்சித்துத் தீண்டினவரை, நரகத்திலே இயமதூதர்கள் அக்கினியிற் காய்ச்சிய ஊசிகளினாலே குத்துவர்கள்; அவருடம்பிலே தாமிரத்தை உருக்கி வார்ப்பார்கள்; அவரை மற்ற நகரங்களினும் விழுத்தி வருந்துவர். பிறன் மனையாளை இச்சித்துப் பார்த்தவருக்குக் கண்களிலே அக்கினியிற் காய்ச்சிய ஊசிகளினாலே குத்தி, முற்கூறிய மற்றைத் துயரங்களையுஞ் செய்வார்கள்.

வியபிசாரஞ் செய்தவர் பிரமேகம், கிரந்தி, பகந்தரம், கல்லடைப்பு, நீரிழிவு முதலிய வியாதிகளினால் வருந்துவர். பிறன் மனையாளை இச்சித்துப் பார்த்தவர் நேத்திர ரோகங்களினால் வருந்துவர்.

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

(1) கன்னியர் - விவாகம் செய்யாத பெண்கள்; பொதுப் பெண்கள் - வேசையர்; தாசிப்பெண்கள்.

(2) ஆண்மை - வீரம்; பரதார சகோதரன் - பிறருடைய மனைவியரைத் தன் சகோதரமாக நினைத்து நடப்பவன்; (வடசொல்; பர - அந்நிய; தாரம் - மனைவி).

(3) தூர்த்தர்- காமுகர்; பிரதிமை - மண், கல், உலோகம் முதலியவற்றாற் செய்யப்பட்ட ஆண், பெண் வடிவங்கள்; தீச்சிந்தை - தீய எண்ணம்.

(4) சந்ததி நாசம் - புத்திரோற்பத்தியின்மை, கருத்தரியாமை. இப்பந்தி முழுதும் சொற்பொருட் பின்வருநிலை என்னும் அணி அமைந்து உரைச் செய்யுளாகத் திகழ்கின்றமை காண்க. வியபிசாரம் ஈண்டுக் கூறிய தீமைகளுள் ஒவ்வொன்றையேனும் சிலவற்றையேனும் பலவற்றையேனும் தன்னையுடையோர்க்கு விளைத்தலின் இவ்வாறு பிரித்துக் கூறினார்.

(5) பிரமேகம் - மர்ம ஸ்தானத்துளே இரணமுண்டாகி ஒருவகை விண்ணீரொழுகும் நோய்; கிரந்தி - தேகத்தில் துர்நீர் கட்டுப்பட்டு நின்று புடைத்தெழுந்து புண்ணுண்டாகும் நோய்; பகரந்தம் - உயிர்நிலைகளாகிய மர்ம ஸ்தானங்களில் பெருங்கட்டிகள் உண்டாகி உடைந்து புண்ணாகும் நோய்; கல்லடைப்பு - மூத்திரத்திலுள்ள உப்பு இறுகிக் கல்லின் தன்மையடைந்து சலங்கழியாமல் தடைப்படுவதால் வரும் வேதனை நோய்; நேத்திர ரோக - கண்ணில் உண்டாகும் (பலவகை) நோய்.

ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.

Friday, March 17, 2006

நான்காம் பாலபாடம் - களவு

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
களவு

ளவாவது பிறருடைமையாய் இருக்கும் பொருளை அவரை வஞ்சித்துக் கொள்ளுதல். களவினால் வரும் பொருள் வளர்வது போலத் தோன்றி, தான் போம் பொழுது பாவத்தையும் பழியையுமே நிறுத்திவிட்டு, முன்னுள்ள பொருளையும் தருமத்தையும் உடன்கொண்டு போய்விடும். களவுசெய்பவர், அப்பொழுது, 'யாவராயினும், காண்பாரே அடிப்பாரோ, கை கால்களைக் குறைப்பாரோ' என்றும், பின்பும் 'இராசா அறிந்து தண்டிப்பானோ' என்றும், பயந்து பயந்து மனந்திடுக்குறுதலினால், எந்நாளும் மனத்துயரமே உடையவராவர். அறியாமையினாலே களவு அப்பொழுது இனிது போலத் தோன்றினும், பின்பு தொலையாத துயரத்தையே கொடுக்கும்.

களவு செய்தவர் இம்மையிலே அரசனாலே தண்டிக்கப்பட்டு எல்லாராலும் இகழப்படுவர். அவரை அவர் பகைவர் மாத்திரமா, உறவினரும் சிறிதாயினும் நம்பாது அவமதிப்பார். களவினாலாகிய இகழ்ச்சியைப் பார்க்கினும் மிக்க இகழ்ச்சி பிறிதில்லை. ஒருகாற் களவு செய்தவரென்று அறியப்பட்டவர் சென்ற சென்ற இடங்களிலெல்லாம், பிறராலே செய்யப்பட்ட களவும் அவராற் செய்யப்பட்டதாகவே நினைக்கப்படும்.

களவென்னுங் பெருங்குற்றத்தைச் சிறுபருவத்திற்றானே கடிதல் வேண்டும். கடியாதொழிந்தால், அது மேன்மேலும் வளர்ந்து பெருந்துன்பக்கடலில் வீழ்த்தி விடும். ஆதலாற் சிறுவர்களிடத்தே அற்பக்களவு காணப்படினும், உடனே தாய் தந்தையர்கள் அவர்களைத் தண்டித்துத் திருத்தல் வேண்டும். அப்படி செய்யாது விட்டால், அப்பிள்ளைகளுக்குப் பின் விளையும் பெருந்துன்பத்துக்குத் தாய் தந்தையர்களே காரணராவார்கள்.

களவு செய்தவரையும், களவுக்கு உபாயஞ் சொன்னவரையும், களவு செய்தவருக்கு இடங்கொடுத்தவரையும், நரகத்திலே இயமதூதர்கள், அவயங்களெங்கும் இருப்பு முளைகளை அறைந்து, வருத்துவார்கள். பாசத்தினாலே அவயவங்களெல்லாவற்றையுங் கூட்டிக்கட்டி, அக்கினி நரகத்திலே, குப்புறப்போடுவார்கள். அவர்கள் நெடுங்காலம் நரகத் துன்பம் அனுபவித்த பின்பு, பூமியிலே பிறந்து, குட்டம், காசம், வாதம், மூலரோகம் முதலிய நோய்களினாலே வருந்துவார்கள்.

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

(3) கடிதல் - நீங்குதல்; துன்பக்கடல் - கடல் போன்ற மிகுந்த துன்பம்; அற்பக் களவு - சிறிய களவு.

ஆறுமுகநாவலர் பற்றி அறிய
இங்கே சொடுக்குங்கள்.

Friday, March 10, 2006

நான்காம் பாலபாடம் - கள்ளுண்ணல்

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
கள்ளுண்ணல்

ள்ளு, அவின், கஞ்சா முதலியவை அறிவை மயக்கும் பொருள்கள். அவைகளை உண்பவர் அறிவையும் நல்லொழுக்கத்தையும் இழந்து, தீயொழுக்கத்தையே அடைவர். கள்ளுண்பவர் தமக்குச் சினேகர் செய்த நன்மையையும் தாங்கற்ற நூற் பொருளையுஞ் சிந்தியார். தம்மைத் தொடர்ந்த பழி பாவங்களையும் அவைகளாலே தமக்கு விளைந்த துன்பத்தையும் அறியார். இவ்வியல் புடையவர் தம்முயிர்க்கு உறுதி செய்துகொள்வது எப்படி! கள்ளுண்பவருக்குக் களிப்பும் மயக்கமுமே இயற்கையாதலால், அவரிடத்துச் சண்டையும், கொலையும், களவும், பொய்யும், வியபிசாரமுமே குடிபுகும்.

கள்ளுண்டவருக்கு மனமொழி மெய்கள் தம் வசப்படாமையால் நாணம் அழியும்; அழியவே, அறிவுடையோர் அவரைக் காணுதற்கும் அஞ்சித் தூரத்தே நீங்குவர். யாது செய்யினும் பொறுக்கும் மாதாவும், கள்ளுண்டு களித்தலைப் பொறுக்க மாட்டாள். ஆனபின், குற்றம் யாதும் பொறாத அறிவுடையோரெதிரே கள்ளுண்டு களித்தல் யாதாய் முடியும்? விலைப்பொருளைக் கொடுத்துக் கள்ளினாலே அறிவு மயக்கத்தைக் கொள்ளுவோர் எவ்வளவு அறிவீனர்! கள்ளுண்டவர் அநேகர் தம் செல்வமெல்லாம் இழந்து, வறியவராகித் தெருத்தோறும் அலைந்து திரிந்து, பின்னரும் பொருள் யாசித்துக் கள்ளுண்டு மயங்கி விழுந்து கிடந்து, பலராலும் பழிக்கப்படுதலைக் கண்டுங் கண்டும், கள்ளுண்டல் எவ்வளவோரறியாமை!

கள்ளுண்டவரும், கள்ளுண்ணாதவரைக் கள்ளுண்பித்தவரும், கள் விற்றவரும், கள்ளுண்டவரோடு பழகினவரும், அளவில்லாத காலம் நரகத்திலே கிடந்து வருந்துவர்கள். இயமதூதர்கள் அவர்களுடைய நாக்கை வாளினாலே சேதித்து, உலோகங்கள் உருக்கிய நீரை அவர்கள் வாயிலே வார்ப்பார்கள். அவர்கள் நரகத் துன்பத்தை அநுபவித்த பின்பு பூமியிலே மலப்புழுவாய்ப் பிறந்து மலத்தை உண்டு இறந்து, மனிதராய்ப் பிறந்து, சொத்தைப் பற்குத்து நோயினாலும், பைத்தியத்தினாலும், வயிற்று நோயினாலும் வருந்துவார்கள்.

அநேகர் வாம மதத்திலே (வாம மதம் - சாக்தர்கள் மதம்) புகுந்து, பிறரையும் தம் வசப்படுத்திக் கெடுத்து, அவரோடு கள்ளுண்டு களிக்கின்றார்கள். வாம மதத்தை அநுட்டித்தவர்கள் பிசாச பதத்தை அடைவார்கள் என்பது நூற்றுணிவு.

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

1. களிப்பு - வெறி.

3. சேதித்து - வெட்டி.

4. வாம மதம் - 'சடமும் சித்துமாகிய எல்லாம் சத்தியின் பரிணாமமே. வாமநூலில் விதித்த முறையை ஒழுகிச் சத்தியில் இலயித்தலே முத்தி' என்ற கொள்கையுடைய சமயம்; அசுத்த சாக்த மதம். பிசாச பதம் - பேயாகப் பிறந்து பசியால் துன்பமுறும் பதவி.

ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.


Saturday, March 04, 2006

நான்காம் பால பாடம் - கொலை

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
கொலை


கொலையாவது உயிர்களை அவைகளுக்கு இடமாகிய உடம்பினின்றும் பிரியச் செய்தல். உயிர்களுக்கு இதஞ் செய்தலே புண்ணியமும் அகிதஞ் செய்தலே பாவமுமாம். கொலையைப் பார்க்கினும் அகிதம் வேறில்லாமையால், கொலையே பாவங்களெல்லாவற்றிற்குந் தலையாயுள்ளது.கொல்லாமையைப் பார்க்கினும் இதம் வேறில்லாமையால், கொல்லாமையே புண்ணியங்களெலாவற்றிற்குந் தலையாயுள்ளது.

கொலையில்லாத ஞானமே ஞானம், கொலையில்லாத தவமே தவம், கொலையில்லாத தருமமே தருமம். கொலையில்லாத செல்வமே செல்வம். ஆதலினாலே, சோர்வினாலும் கொலைப்பாவம் சிறிதும் விளையாவண்ணம் எப்பொழுதும் அருளோடு கூடிச் சாவதானமாக இருத்தல் வேண்டும். கொலை செய்ய ஏவினவரும், கொலை செய்யக் கண்டும் அதனைத் தடுக்காதவரும், ஒருவன் செய்த கொலையை மறைத்து அவனை இராசாவுடைய தண்டத்துக்குத் தப்புவித்தவரும், கொலை செய்தவரோடு பழகினவரும் கொலைப் பாவிகளே யாவர்.

கொலைப் பாவிகள் எண்ணில்லாத காலம் நரகத் துன்பத்தை அனுபவித்து, பின்பு பூமியிலே பிறந்து, ஈளை, காசம், குட்டம், பெருவியாதி, நெருப்புச்சுரம், கைப்பிளவை முதலிய நோய்களினால் வருந்தி உழல்வார்கள்.

பிறவுயிரைக் கொல்லுதல் போலத் தன்னுயிரைக் கொல்லுதலும் பெருங்கொடும் பாவம். கடவுளை வழிபட்டு உயிர்க்கு உறுதி செய்துகொள்ளும் பொருட்டுக் கிடைத்த கருவி சரீரம். ஆதலால் எவ்வகைப்பட்ட வியாதிகளினாலே வருத்தமுற்றாலும், சரீரத்தைப் பாதுகாத்துக் கொண்டே இருத்தல் வேண்டும். கோபத்தினாலும் வியாதி முதலிய பீடைகளினாலும் தம்முயிரை வலிய விட்டவர் கும்பீபாகம் முதலிய நரகங்களிலே அறுபதினாயிரம் வருடங்கிடந்து வருந்தி, பின்பு சக்கிரவாளகிரிக்குப் புறத்தில் உள்ள இருட்பூமியில் எண்ணில்லாத காலங் கிடப்பார்.

ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.

Saturday, February 25, 2006

நான்காம் பால பாடம் - அருள்

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
அருள்

ருளாவது இவை தொடர்புடையவை என்றும் இவை தொடர்பில்லாதவை என்றும் நோக்காது இயல்பாகவே எல்லாவுயிர்கள் மேலுஞ் செல்வதாகிய கருணை, அருளெனினும், கருணையெனினும், இரக்கமெனினும் பொருந்தும். உலகவின்பத்துக்குக் காரணம் பொருளே யாதல் போலத் தருமத்துக்குக் காரணம் அருளேயாம். அருளென்னும் குணம் யாவரிடத்திருக்குமோ, அவரிடத்தே பழி பாவங்களெல்லாம் சிறிதும் அணுகாது நீங்கிவிடும். வாய்மையாகிய தகழியிலே பொறுமையாகிய திரியை இட்டு தவமாகிய நெய்யை நிறையப் பெய்து, அருளாகிய விளக்கை ஏற்றினால், அஞ்ஞானமாகிய பேரிருள் ஓட்டெடுப்ப, பதியாகிய மெய்ப்பொருள் வெளிப்படும். மரணபரியந்தம் தன்னுயிரை வருந்திப் பாதுகாத்தல் போலப் பிறவுயிர்களையும் வருந்திப் பாதுகாப்பவன் யாவன், அவனே உயிர்களுக்கெல்லாம் இதஞ்செய்பவனாகி, தான் எந்நாளும் இன்பமே வடிவமாக இருப்பன்.

உயிர்களெல்லாம் கடவுளுக்குத் திருமேனிகள்; அவ்வுயிர்களுக்கு நிலைக்களமாகிய உடம்புகளெல்லாம் கடவுளுக்கு ஆலயங்கள். ஆதலால் கடவுளிடத்து மெய்யன்புடையவர்கள் அக்கடவுளோடு உயிர்களுக்கு உளதாகிய தொடர்பு பற்றி அவ்வுயிர்களிடத்தும் அன்புடையவர்களேயாவர்கள். உயிர்களிடத்து அன்பில்லாத பொழுது கடவுளிடத்து அன்புடையவர்கள் போல் ஒழுகுதல் நாடகமாத்திரையேயன்றி உண்மையன்றென்பது தெள்ளிதின் துணியப்படும். பிறவுயிர்களிடத்து இரக்கமில்லாதவர் தம்முயிருக்கு உறுதி செய்து கொள்ளமாட்டார். ஆதலால், அவர் பிறவுயிர்களிடத்து மாத்திரமா தம்முயிரிடத்தும் இரக்கமில்லாதவரே யாவர். அவர் தமக்குத்தாமே வஞ்சகர்.

ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.

Thursday, February 16, 2006

நான்காம் பாலபாடம் - கடவுள் வழிபாடு


ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
கடவுள் வழிபாடு

ருணாநிதியாகிய கடவுள், புறத்திலே திருக்கோயிலுள்ளிருக்கும் இலிங்கம் முதலிய திருமேனியும், தமது மெய்யடியாருடைய திருவேடமும் ஆதாரமாகக் கொண்டு நின்றும், அகத்திலே உயிர் இடமாகக் கொண்டு நின்றும், இங்குள்ளவர் செய்யும் வழிபாட்டைக் கொண்டருளுவர். ஆதலால், அவரை வழிபடும் இடங்கள் இவைகளேயாம்.

கடவுள் அங்கிங்கெளாதபடி எங்கும் வியாபகமாய் நிற்பினும், இவ்விடங்களில் மாத்திரம் தயிரில் நெய்போல விளங்கி நிற்பர். மற்றையிடங்களெல்லாவற்றினும் பாலில் நெய் போல விளங்காது நிற்பர்.

கடவுளுக்குச் செய்யும் வழிபாடுகளாவன, அவரை மனசினாலே தியானித்தலும், வாக்கினாலே துதித்தலும், கைகளினாலே பூசித்தலும், கால்களினாலே வலம் வருதலும், தலையினாலே வணங்குதலும், செவிகளினாலே அவருடைய புகழைக் கேட்டலும், கண்களினாலே அவருடைய திருமேனியைத் தரிசித்தலுமாம்.

அன்பில்லாத வழிபாடு உயிரில்லாத உடம்பு போலும். அன்பாவது தன்னால் விரும்பப்பட்டவரிடத்தே தோன்றும் உள்ள நெகிழ்ச்சி. கடவுளிடத்தே அன்புடைமைக்கு அடையாளங்களாவன: அவருடைய உண்மையை நினைக்குந் தோறும் கேட்குந்தோறும் காணுந்தோறும் தன்வசமழிதலும், மயிர்க்கால்தோறுந் திவலை உண்டாகப் புளகங்கொள்ளலும், ஆனந்த அருவி பொழிதலும், விம்மலும், நாத் தழுதழுத்தலும், உரைதடுமாறலும், அவரால் விரும்பப்படுபவைகளைச் செய்தலும், வெறுக்கப்படுபவைகளைச் செய்யாதொழிதலும், அவருடைய மெய்யடியார்களைக் காணும் பொழுது கூசாது வணங்குதலும், பிறவுமாம்.

கடவுளால் விரும்பப் படுபவைகளாவன இரக்கம், வாய்மை, பொறை, அடக்கம், கொடை, தாய், தந்தை முதலிய பெரியோரை வழிபடுதல் முதலிய நன்மைகளாம். கடவுளால் வெறுக்கப்படுபவைகளாவன கொலை, புலால் உணல், களவு, கள்ளுணல், வியபிசாரம், பொய், செய்ந்நன்றி மறத்தல் முதலிய தீமைகளாம்.

ஆன்மாக்களாகிய நாம், பிறர்வயமுடையவர்களும், சிற்றறிவு சிறுதொழிலுடையவர்களுமாய், இருத்தலினாலே, நன்மை தீமைகளை உள்ளபடி அறியவும், தீமைகளை ஒழித்து நன்மைகளையே செய்யவும் வல்லே மல்லேம். ஆதலால், தம்வயமுடையவரும் முற்றறிவு உடையவரும் ஆகிய கடவுளை வணங்கி, அவருடைய திருவருள் வசப்பட்டு ஒழுகுவோமேயானால், நாம் தீமைகளினின்று நீங்கி நன்மைகளைச் செய்து தம்மை வழிபட்டு உய்யும்படி அவர் நமக்கு அருள் செய்வார்.

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

1. மெய்யடியார் - உண்மையான சிவனடியார். திருவேடம் - விபூதி, உருத்திராக்ஷம் முதலிய சிவ சின்னங்களணிந்த வடிவம். அகத்திலே - உடம்பினுள்ளே.

4. உண்மையை - இயல்பாக உள்ள பெருங்கருணைச் செயல்களை. திவலை - நீர்த்துளி, ஆனந்த அருவி - ஆனந்தக்கண்ணீர். (அருவி உவமை யாகுபெயர்). கூசாது - வெட்கப்படாமல்.

5. வாய்மை - உண்மை பேசல். அடக்கம் - மன மொழி மெய்கள் தீயவழியிற் செல்லாது அடங்குதல்.

6. முற்றறிவு - எல்லாவற்றையும் அறியும் அறிவு. முற்றுத் தொழில் - எல்லாவற்றையும் செய்யும் வல்லமை. திருவருள் வசப்பட்டு ஒழுகல் - அநுக்கிரகத்தின் துணையை வேண்டி (தற்போதமின்றி) நடத்தல். அருள் செய்வார் - இரங்கி நன்மை செய்வார்.

ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.

Wednesday, February 15, 2006

நான்காம் பாலபாடம் - ஆன்மா

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
ஆன்மா


ன்மாக்கள் நித்தியமாய், வியாபகமாய், சேதனமாய், பாசத் தடையுடையவைகளாய், சரீரந்தோறும் வெவ்வேறாய் வினைகளைச் செய்து வினைப் பயன்களை அனுபவிப்பவைகளாய், சிற்றறிவும் சிறுதொழிலும் உடையவைகளாய், தங்களுக்கு ஒரு தலைவனை உடையவைகளாய் இருக்கும்.

ஆன்மாக்கள் நல்வினை தீவினையென்னும் இருவினைக்கு ஈடாக, நால்வகைத் தோற்றத்தையும், எழுவகைப் பிறப்பையும், எண்பத்துநான்கு நூறாயிர யோனி பேதத்தையும் உடையவைகளாய் பிறந்திருந் துழலும்.

நால்வகைத் தோற்றங்களாவன: அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் என்பவைகளாம். அவைகளுள் அண்டசம் முட்டையில் தோன்றுவன. சுவேதசம் வேர்வையில் தோன்றுவன. உற்பிச்சம் வித்து வேர் கிழங்கு முதலியவைகளை மேற்பிளந்து தோன்றுவன. சராயுசம் கருப்பையில் தோன்றுவன. எழுவகைப் பிறப்புக்களாவன: தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்பவைகளாம். தாவரங்களென்றது மரம் செடி முதலியவைகளை.

கருப்பையிலே தேவர்களும், மனிதர்களும், நாற்கால் விலங்குகளும் பிறக்கும். முட்டையிலே பறவைகளும், ஊர்வனவும், நீர்வாழ்வனவும் பிறக்கும். வேர்வையிலே கிருமி, கீடம், பேன் முதலிய சில ஊர்வனவும், விட்டில் முதலிய சில பறவைகளும் பிறக்கும். வித்தினும் வேர் கொம்பு கொடி கிழங்குகளினும் தாவரங்கள் பிறக்கும். தாவரமென்றாலும், நிலையியற் பொருளென்றாலும், அசர மென்றாலும் பொருந்தும். தாவரமல்லாத மற்றை ஆறு வகைகளும் சங்கமங்களாம். சங்கமமென்றாலும், இயங்கியற் பொருளென்றாலும், சரமென்றாலும் பொருந்தும்.

தேவர்கள் பதினொரு நூறாயிர யோனிபேதம், மனிதர்கள் ஒன்பது நூறாயிர யோனிபேதம். நாற்கால்விலங்கு பத்து நூறாயிரயோனிபேதம். பறவை பத்து நூறாயிர யோனிபேதம். நீர்வாழ்வன பத்து நூறாயிர யோனிபேதம். ஊர்வன பதினைந்து நூறாயிர யோனிபேதம். தாவரம் பத்தொன்பது நூறாயிர யோனிபேதம். ஆகத்தொகை எண்பத்து நான்கு நூறாயிர யோனிபேதம்.

ஆன்மாக்கள், தாம் எடுத்த சரீரத்துக்கு ஏற்ப, மெய், நாக்கு, மூக்கு, கண், செவி என்னும் ஐம்பொறிகளினாலும், சித்தத்தினாலும் அறியும் அறிவின் வகையினாலே, ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நாலறிவுயிர், ஐயறிவுயிர், ஆறறிவுயிர் என அறுவகைப்படும். புல்லும் மரமும் முதலியவை பரிசத்தை அறியும் ஓரறிவுயிர்கள். இப்பியும் சங்கும் முதலியவை அதனோடு இரத(ச)த்தையும்(சுவை) அறியும் ஈரறிவுயிர்கள். கறையானும் எறும்பும் முதலியவை அவ்விரண்டினோடு கந்தத்தையும் அறியும் மூவறிவுயிர்கள். தும்பியும் வண்டும் முதலியவை அம்மூன்றினோடு உருவத்தையும் அறியும் நாலறிவுயிர்கள். விலங்கும் பறவையும் அந்நான்கனோடு சத்தத்தையும் அறியும் ஐயறிவுயிர்கள். தேவர்களும் மனிதர்களும் அவ்வைந்தனோடு சித்தத்தாலறியும் அறிவுமுடைய ஆறறிவுயிர்கள்.

ஆன்மாக்கள், தாம் பூமியிலே செய்த நல்வினை தீவினை யென்னும் இருவகை வினைகளுள்ளும், நல்வினையின் பயனாகிய இன்பத்தைச் சுவர்க்கத்திலும், தீவினையின் பயனாகிய துன்பத்தை நரகத்திலும், அநுபவிக்கும். அப்படி அநுபவித்துத் தொலைத்துத் தொலையாமல் எஞ்சிநின்ற இரு வினைகளினாலே திரும்பவும் பூமியில் வந்து பிறந்து, அவைகளின் பயன்களாகிய இன்பதுன்ப மிரண்டையும் அநுபவிக்கும். இப்படியே, தமக்கு ஒரு நிலைமை இல்லாத கொள்ளிவட்டமும் காற்றாடியும் போல, கடவுளுடைய ஆஞ்ஞையினாலே, கருமத்துக்கு ஈடாக, மேலே உள்ள சுவர்க்கத்திலும், கீழே உள்ள நரகத்திலும், நடுவே உள்ள பூமியிலும் சுழன்று திரியும்.

இப்படிப் பிறந்திறந்துழலும் ஆன்மாக்கள் தாவர யோனி முதலிய கீழுள்ள யோனிகளெலாவற்றினும் பிறந்து பிறந்திளைத்து, புண்ணிய மேலீட்டினாலே மனிதப் பிறப்பிலே வருதல் மிகுந்த அருமையாம். அவ்வருமை, ஆராயுங்காலத்து, கடலைக் கையினாலே நீந்திக் கரையேறுதல் போலும். இத்தன்மையையுடைய மனிதப் பிறப்பை எடுப்பினும், வேதாகமங்கள் வழங்காத மிலேச்ச தேசத்தை விட்டு அவை வழங்கும் புண்ணிய தேசத்திலே பிறப்பது மிகுந்த புண்ணியம்.

இவ்வருமையாகிய மனிதப் பிறப்பை உண்டாக்கியது உயிர்க்குயிராகிய கடவுளை மனம் வாக்குக் காயங்களினாலே வழிபட்டு அழிவில்லாத முத்தியின்பத்தைப் பெற்று உய்வும் பொருட்டேயாம். சரீரம் கருப்பையில் அழியினும் அழியும். பத்துமாதத்திற் பிறந்தவுடனே அழியினும் அழியும். பிறந்த பின் சிலகாலம் வளர்ந்து அழியினும் அழியும். மூன்று வயசுக்குமேற் பதினாறு வயசு வரையிலுள்ள பாலாவத்தையில் அழியினும் அழியும். அதற்கு மேல் நாற்பது வயசு வரையிலுள்ள தருணாவத்தையின் அழியினும் அழியும். அதற்கு மேற்பட்ட விருத்தாவத்தையின் அழியினும் அழியும். எப்படியும் இந்தச் சரீரம் நிலையின்றி அழிவது உண்மையாம். அழியுங் காலமோ தெரியாதே. இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ, யாது வருமோ, அதுவும் தெரியாதே. ஆதலால் இந்த சரீரம் உள்ளபொழுதே இதனது நிலையாமையை அறிந்து பெருங்கருணைக் கடலாகிய கடவுளை வழிபட்டு உய்ய வேண்டும்.

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

1. சேதனம்-அறிவுடைய பொருள். பாசத்தடை-ஆணவம் முதலிய மலங்களாகிய தடை; அவை கடவுளை அற்தற்கும், மோட்ச இன்பத்தை அடைதற்கும் தடையாமென்றறிக. ஒரு தலைவன் என்றது முழு முதற் கடவுளை.

2. ஈடாக-இருவினையின் அளவுக்குத் தக்க பயனாக. தோற்றம்-உடல் கொண்டு தோன்றும் (பிறக்கும்) விதம்; உருக்கொண்டு ஜனிக்கும் விதம். யோனி பேதம்-(உடலினுருவ அமைப்புத் தோற்றத்தின் பாகுபாடுகளாகிய) பிறவியின் பேதங்கள், நூறாயிரம்-இலக்ஷம். உழலும்-சுழன்று திரியும், மாறி மாறி வரும்.

3. அண்டசம் முதலியவை அண்டஜம், ஸ்வேதஜம், உத்பித்ஜம், ஸராயுஜம் என்ற வடசொற்களின் திரிவு; அண்டஜம்: அண்டம்-முட்டையிலிருந்து; ஜம்-பிறப்பது. ஸ்வேதஜம்: ஸ்வேதம்-வேர்வையிலிருந்து; ஜம்-பிறப்பது. உத்பித்ஜம்: உத்+பித்+ஜம்= (வித்து முதலியவற்றை) மேலிடத்தில் + பிளந்துகொண்டு + பிறப்பது. ஸராயுஜம்: சராயு - கருப்பையிலிருந்து பிறப்பது. தாவரம்-ஒரே இடத்தில் நிலையாய் நிற்பவை, சஞ்சரியாதவை; ஸ்தாவரம் என்னும் வடசொல்லின் திரிவு.

4. கிருமி - அணுப் பரிமாண ரூபமுடைய ஜந்து. கீடம்-புழு. நிலையியற் பொருள் - (இடம் விட்டுப் பெயராது) நிற்றலை இயல்பாகவுடைய பொருள். அசரம் (அ+சரம்) சஞ்சரியாதது; (அ-இன்மை அல்லது மறுதலைப் பொருளில் வரும் வடமொழி இடைச்சொல்; சரம்-சஞ்சரிப்பது) இயங்கியற் பொருள் - இயங்குகின்ற இயல்பினையுடைய பொருள்.

6. இரதம் - சுவை; கந்தம் - மணம், நாற்றம். சித்தத்தாலறியும் அறிவு - அனுமானித்துச் சிந்தனா சக்தியால் உணரும் உணர்வு.

7. சுவர்க்கம் - தேவருலகம். நரகம் - நரகர் வாழும் உலகம். எஞ்சிநின்ற - மிச்சமாயுள்ள. ஒரு நிலைமை - ஓரிடத்தில் நிற்குந்தன்மை, ஒரே நிலையான தன்மை. கொள்ளி வட்டம் - வட்டமாகச் சுழற்றப்படும் நெருப்புக் கொள்ளி. ஆஞ்ஞை - கட்டளை, உத்தரவு. கருமம் - நல்வினை தீவினைகள்.

8. அருமை - எளிதல்லாதது. மிலேச்ச தேசம் - மிலேச்சர் வாழும் பிரதேசம் (இடம்); மிலேச்சர் - வேத சிவாகமங்களிலே கூறப்பட்டுள்ள முறைகளுக்கு மாறாக நடப்பவர்; அவர்கள் ஒருங்கு சேர்ந்து வாழும் பிரதேசம் மிலேச்ச தேசம்.

9. உயிர்க்கு உயிராகிய - சீவான்மாக்களுக்கெல்லாம் உயிர் போன்ரவராகிய; சீவான்மாக்களின் அறிவு இச்சை தொழில்களை இயக்குகின்றனவர் என்ரபடி. வாக்கு - மொழி; காயம் - சரீரம், வழிபட்டு - மனத்தால் தியானித்து, வாக்கால் துதித்து, காயத்தினாற் பூசை நமஸ்காரம்முதலியவற்றைச் செய்து என்றபடி. முத்தியின்பம் - மோக்ஷ இன்பம். பாலாவத்தை - (பால+அவத்தை) பால்யப் பருவம்; இது கௌமாரப் பருவம் எனவும்படும். தருணாவத்தை - (தருண+அவத்தை) யௌவனப் பருவம். விருதாவத்தை - (விருத்த + அவத்தை) முதுமைப் பருவம். உண்மையாமே உண்மையாகுமே. யாது வருமோ - என்ன நிலைமை சம்பவிக்குமோ, இன்பம் வருமோ துன்பம் வருமோ என்றபடி. நிலையாமை - நிலைத்திராத தன்மை, அழியுந்தன்மை. பெருங்கருணைக் கடல் - கடல் போல் மிகுந்த அருள் நிறைந்தவர்.

ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.

Tuesday, February 14, 2006

நான்காம் பாலபாடம் - கடவுள்

ஆறுமுக நாவலர் பாலபாடம்
நான்காம் புத்தகம்
கடவுள்


லகமாவது சித்தும் அசித்துமென இருவகைப்படும் பிரபஞ்சமாம். சித்து அறிவுடைய பொருள். அசித்து அறிவில்லாத பொருள். அசித்தொன்றாலும், சடமொன்றாலும், பொருந்தும். உலகம் தோன்றி நின்று அழியுங் காரியமாய் உள்ளது. ஆதலினால், உலகத்தைப் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று தொழில்களையுஞ் செய்தற்கு ஒரு கடவுள் இருக்கின்றார் என்பது, நன்றாக நிச்சயிக்கப்படும்.

கடவுள் என்றும் உள்ளவர், அவருக்குப் பிறப்பும் இறப்பும் இல்லை. அவர் எங்கும் நிறைந்தவர், அவர் இல்லாத இடம் இல்லை. அவர் எல்லாம் அறிபவர், அவர் அறியாதது ஒன்றுமில்லை. அவருடைய அறிவு இயற்கையறிவு, ஒருவர் அறிவிக்க அறிபவரல்லர். அவர் எல்லாம் வல்லவர், அவரால் இயலாத கருமம் ஒன்றுமில்லை. அவர் அளவிடப்படாத ஆனந்த முடையவர், தம்முடைய அநுபவத்தின் பொருட்டு வேறொன்றையும் வேண்டுபவரல்லர். அவர் தம் வயமுடையவர், பிறர் வயமுடையவரல்லர். அவர் உயர்வும் ஒப்பும் இல்லாதவர்; அவரின் மேலானவரும் இல்லை; அவருக்குச் சமமானவரும் இல்லை. அவர் சகலலோகத்துக்கும் ஒரே நாயகர். அவர் செய்யுந் தொழில்களுள் ஒன்றாயினும் அவருடைய பிரயோசனத்தைக் குறித்த தன்று. எல்லாம் ஆன்மாக்களுடைய பிரயோசனத்தைக் குறித்தவைகள். அவர் ஆன்மாக்களிடத்துள்ள கைமாறில்லாத அளவுகடந்த திருவருளே திருமேனியாக உடையவர்.

கடவுள் ஆன்மாக்கள் பொருட்டு வேதம் ஆகமம் என்னும் முதனூல்களை அருளிச் செய்தார். அவைகளிலே விதிக்கப் பட்டவைகளெல்லாம் புண்ணியங்கள். விலக்கப்பட்டவைகளெல்லாம் பாவங்கள். அவர் புண்ணியத்தைச் செய்த ஆன்மாக்களுக்கு இன்பத்தையும், பாவத்தைச் செய்த ஆன்மாக்களுக்குத் துன்பத்தையும் கொடுப்பார். துன்பத்தைக் கொடுத்தலினால் அவரை வன்கண்ணரென்று கொள்ளலாகாது. தீமை செய்த பிள்ளைகளைப் பிதா மாதாக்கள் தண்டித்தலும், சில வியாதியாளர்களுக்கு வைத்தியர்கள் சத்திரமிட்டறுத்தலும், இருப்புக்கோல் காய்ச்சிச் சுடுதலும், கண்ணிற் படலத்தை உரித்தலும் அவர்களிடத்துள்ள இரக்கத்தினாலன்றி வன்கண்மை யினாவல்லவே. அது போலக் கடவுள் பாவஞ் செய்த ஆன்மாக்களைத் தண்டித்தல், அப்பாவத்தை ஒழித்து மேலே பாவஞ் செய்யாவண்ணம் தடுத்து அவர்களை நல்லவழியிலே செலுத்தி உய்வித்தற்கு ஏதுவாதலினால், அதுவும் கருணையேயாம்.


குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

1. சித்து, அசித்து, சடம்: இவை வட சொற்கள்; ஜடம் என்பது சடம் எனத் திரிந்தது. சித்துப் பொருள்கள்: உயிர்கள். அசித்துப் பொருள்கள்: தனு கரண புவன போகங்கள். தனு-உடல். கரணம்-மனமும் ஐம்பொறிகளும் முதலாயின. புவனம்-ஆதாரமாகிய மண்ணுலகம் முதலாயின. போகம்-அநுபவப் பொருள்கள். முதலாம் பந்தியின் இறுதி வாக்கியங்களின் கருத்து: 'கடவுள் ஒருவர் இருக்கின்றார் என்பது கண் முதலிய புறவிந்திரியங்களால் அறியப்பட்டாலும், அனுமானப் பிரமாணத்தால் நிச்சயிக்கப்படும்' என்றபடி.

2. இயற்கையறிவு-செயற்கையாலன்றித் தாமாகவே அறியும் அறிவு. தம்வயம்-சுதந்திரம், தம்மிச்சைப்படி நடக்குந்தன்மை. பிறர்வயம்-பரதந்திரம், பிறர் எண்ணப்படி நடக்குந்தன்மை. சகல லோகம்-எல்லா வுலகம். நாயகர்-தலைவர். ஆன்மாக்கள்-உயிர்கள்; ஆத்மா என்னும் வட சொல் ஆன்மா எனத் திரிந்தது. கைம்மாறு-பதிலுதவி; கை-செயல்; மாறு-பதில்; பதிலான செயல் என்றபடி. திரு + அருள் = திருவருள்: கருணை என்று பொருள். திருமேனி-திரு-கடவுளுடைய உருவம் உறுப்பு முதலியவற்றிற்கும் அவருடைய தொடர்புடைய கோயில் குளம் முதலிய பிறபொருள்களுக்கும் உயர்வைக் குறித்து வழங்கும் அடைமொழி; திருவுருவம் (விக்கிரகம்), திருவடி, திருக்கோயில், திருக்குளம் என்பவற்றிற் போல, மேனி-உருவம், சரீரம். இப்பந்தியில் உடன்பாடும் எதிர் மறையுமா யமைந்த இணை வாக்கியங்களுக்கு பின்னவை முன்னவற்றை இனிது விளக்குதற் பொருட்டு (ஸ்பஷ்டார்த்தம்) வந்தவை என்றறிக.

3. முதல் + நூல் = முதனூல்; முதலிற் செய்யப்பட்ட நூல், ஒன்றன் வழித்தாகச் செய்யப்படாத நூல். அருளிச் செய்தார்- இயற்றினார், உபதேசித்தார், சொன்னார்; (ஈண்டு உயர்வுபற்றி ஒரு வினையை மற்றொரு வினையின் வாசகத்தாற் கூறிய இலக்கணச் சொல்). விதிக்கப்பட்டவை - செய்யதக்கன என்று கூறப்பட்டவை, விலக்கப்பட்டவை - செய்யத்தகாதவை என்று என்று கூறப்பட்டவை. வன்கண்ணர்-இரக்கமில்லாதவர்; (வன்கண்மை: பகுதி). சத்திரமிட்டு அறுத்தல்-கட்டி முதலிய நோய்களுக்குக் கத்தி முதலிய கருவி கொண்டு கீறி வைத்தியஞ் செய்தல். அண்டவாதம், வலி முதலிய நோய்களுக்கு இரும்புக்கோல் காய்ச்சிச் சூடு போடுவதுண்டு. கண்ணிற் படலம்- கருவிழியின் மேற் படர்ந்திருக்கும் ஒருவகைச் சவ்வு. உரித்தல்-கருவிகளால் வெட்டி நீக்குதல். உய்வித்தல்-நன்மை அடைவித்தல், மேல் நிலையை அடைவித்தல். ஏது-காரணம்; ஹேது என்னும் வட சொல்லின் திரிவு. இப்பந்தியின் இறுதிப் பகுதியில் வந்துள்ள 'உவமையணி' அறிந்து மகிழ்தற்குரியது.

ஆறுமுக நாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்