Sunday, January 21, 2007

பெரியபுராணம் - இயற்பகைநாயனார் புராணம்

திருச்சிற்றம்பலம்
திருத்தொண்டர் புராணம் என்று வழங்குகின்ற
பெரியபுராணம்

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
கத்தியரூபமாக செய்தது


முதலாவதுதில்லைவாழந்தணர் சருக்கம்

இயற்பகைநாயனார் புராணம்


எழிலாருங் காவிரிப்பூம் பட்டி னத்து
ளியல்வணிக ரியற்பகையா ரிருவர் தேட
வழலாய பிரான்றூர்த்த மறையோ னாகி
யாயிழையைத் தரவேண்டி யணைய வையன்
கழலாரப் பணிந்துமனைக் கற்பின் மேன்மைக்
காதலியைக் கொடுத்தமர் செய் கருத்தால் வந்த
பிழையாருஞ் சுற்றமெலாந் துணித்து மீளப்
பிஞ்ஞகனா ரழைத்தருளப் பெற்று ளாரே.

சோழமண்டலத்திலே, காவேரிநதி சமுத்திரத்தோடு கலத்தலால் காவேரிசங்கமம் எனப்பெயர்கொண்ட விசேட தீர்த்தம் பொருந்திய காவிரிப்பூம்பட்டினத்திலே, வைசியர் குலத்திலே, குருலிங்க சங்கமபத்திகளிற் சிறந்தவரும் ஒளதாரியம் உள்ளவரும் ஆகிய இயற்பகையாரென்பவர் ஒருவர் இருந்தார்.

அவர் இல்லறத்தில் இருந்து, விபூதி உருத்திராக்ஷம் தரித்த சிவபத்தர்களுக்கு அவர்கள் விரும்பிய எல்லாவற்றையும் மகிழ்ச்சியோடு கொடுத்துக்கொண்டு வருங்காலத்தில்;

ஒருநாள், திருக்கைலாசபதியானவர், அவ்வியற்பகையார் அடியார்கள் விரும்பியவை யாவையேனும் அவற்றை மறாது கொடுத்தலைச் சகலருக்கும் புலப்படுத்தும்பொருட்டு, ஒரு பிராமணவடிவங் கொண்டு, விபூதி திருமேனியிலே பிரகாசிக்க, தூர்த்த வேடமுந் தோன்ற, அவர் வீட்டிற்கு எழுந்தருளினார். இயற்பகை நாயனார் அன்பினோடு அவரை எதிர்கொண்டு நமஸ்கரித்து, அழைத்துக்கொண்டு போய் விதிப்படி அருச்சித்து, "சுவாமீ! தேவரீர் இங்கே எழுந்தருளியது பூர்வசன்மத்தில் அடியேன் செய்த தவத்தினாற் போலும்" என்றார்.

அது கேட்ட ஐயர் இயற்பகைநாயனாரை நோக்கி, "சிவனடியார்கள் விரும்பிக் கேட்பன யாவையெனினும் நீர் அவைகளை மாறாமல் மகிழ்ச்சியோடு கொடுத்தலை நான் கேள்வியுற்று, உம்மிடத்திலுள்ள ஒரு பொருளை விரும்பி இன்றைக்கு இங்கே வந்தேன். நீர்தருதற்கு இசைவீராயில், அந்தப்பொருள் இன்னது என்று சொல்லுவேன்" என்றார்.

அதற்கு இயற்பகைநாயனார் "எப்படிப்பட்ட பொருளாயினும் என்னிடத்தில் இருக்குமாயின், அந்தப்பொருள் நமது கடவுளாகிய பரமசிவனுடைய அடியார்களுக்கு உரிய பொருளேயாம். இதைக் குறித்துத் தேவரீர் சந்தேகிக்க வேண்டுவதில்லை. திருவுள்ளம் விரும்பியதை இன்னது என்று சொல்லியருளும்" என்று சொல்ல; ஐயர் " உம்முடைய மனைவியை விரும்பிவந்தேன்" என்றார், அப்பொழுது இயற்பகைநாயனார் முன்னிலும் பார்க்க மிக மகிழ்ந்து வணங்கி நின்று, "சுவாமீ! தேவரீர் அடியேனிடத்தில் உள்ள பொருளையே விரும்பிக் கேட்டது அடியேனுடைய பாக்கியம்" என்று சொல்லி, சீக்கிரம் உள்ளே போய், கற்பிலே சிறந்த தம்முடைய மனைவியாரை நோக்கி, "நான் இன்றைக்கு உன்னை இந்தச் சிவனடியாருக்கு கொடுத்துவிட்டேன்" என்றார்.

உடனே மனைவியார் மனங்கலங்கிப் பின்னே தெளிந்து, "பிராணநாயகரே! நீர் கட்டளையிட்டது எதுவோ அதையே நான் செய்வேன். அதையன்றிச் செய்தற்கு உரிய காரியம் எனக்கு வேறொன்று உண்டோ? இல்லை" என்று சொல்லி, அவரை வணங்க; அவர் தமது மனைவியாரை, அங்கு வந்த சிவனடியாருக்கு மனைவியார் கைபற்றி, வணங்கினார்.

மனைவியார் போய், அவ்வையாருடைய பாதங்களிலே விழுந்து நமஸ்கரித்து எழுந்து நின்றார். அதுகண்ட இயற்பகைநாயனார் மனமகிழ்ந்து அவ்வையாரை வணங்கி "இன்னும் அடியேன் செய்யவேண்டிய பணியாது" என்று வினாவ, ஐயர் "இந்தப்பெண்ணை நான் தனியே கொண்டு போகையால், உங்கண்மேலே பற்றுள்ள பந்துக்களையும் ஊரவர்களையும் கடக்குவரைக்கும் அவர்களால் எனக்கு ஓரிடையூறும் உண்டாகாதிருக்கும்படி, நீர் துணையாக வரவேண்டும்" என்றார்.

இயற்பகைநாயனார் அதைக் கேட்டு, "இவர் கட்டளையிடுமுன் நானே நினைந்து செய்யவேண்டிய இக்குற்றேவலைச் செய்யாமல், இவர் சொல்லும் வரைக்கும் தாழ்ந்து நின்றது குற்றம்" என்று நினைத்துக் துக்கித்து, ஆயுதசாலையிலே போய், போர்க்கோலங் கொண்டு, வாளும் பரிசையும், ஏந்திக்கொண்டு, ஐயரிடத்திற்கு வந்து, அவரை வணங்கி, அவரையும் மனைவியாரையும் முன்போம்படி செய்து தாம் பின்னே போனார்.

அப்பொழுது இயற்பகைநாயனாருடைய சுற்றத்தவர்களும் அவர் மனைவியாருடைய சுற்றத்தவர்களும் "இயற்பகை பைத்தியத்தினாலே தன் மனைவியைக் கொடுத்தானாயினும், அவளை ஒருவன் கொண்டுபோவது நீதியா" என்று, தங்கள் மரபுக்கு வரும் பெரும்பழியை நீக்கிக் கொள்ளும்பொருட்டு அவர்களைத் தொடரக் கருதி, வேல் வில் வாள் முதலிய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, சண்ட மாருதம் போலத் தீவிரமாக நடந்து, நகருக்குப் புறத்திலே போய், ஐயருக்கு இருபக்கத்திலும் நெருங்கி, ஆராவாரித்து, "ஓ துட்டனே! எங்களுக்குப் பழி வராதபடி எங்கள் குலப்பெண்ணை விட்டுப்போ" என்று சொல்லி, அவரை வளைத்துக் கொண்டார்கள். ஐயர் அதைக் கண்டு, அஞ்சினவர்போல இயற்பகைநாயனாருடைய மனைவியாரைப் பார்க்க; அம்மனைவியார் "சுவாமி! நீர் பயப்படவேண்டாம். இயற்பகைநாயனார் அவர்களை வெல்லுவார்" என்றார்.

இயற்பகை நாயனார் அதைக் கேட்டு, "அடியேன் அவர்கள் எல்லாரையும் இப்போது கொன்று போடுகின்றேன், தேவரீர் அஞ்சவேண்டாம்" என்று சொல்லி, அங்கு வந்த சுற்றத்தவர்களைப் பார்த்து, "நீங்கள் என்வாளுக்கு இரையாவீர்கள். ஒருவரும் எனக்கு எதிர் நில்லாமல் ஓடிப் பிழையுங்கள்" என்று கூற; அவர்கள் "ஏடா இயற்பகை! நீ என்னகாரியஞ்செய்தாய்! ஊரவர்கள் பேசும் பழிமொழிக்கும் நம்முடைய சத்துருக்கள் நகைக்கும் நகைப்புக்கும் நீ சற்றாயினும் வெட்கப்படவில்லை, மனைவியைப் பிராமணனுக்குக் கொடுத்தோ நீ சாமர்த்தியம் பேசுவது, நாமெல்லாம் ஒருங்கே மடிவதன்றி இந்தப் பெண்ணைப் பிராமணனுக்குக் கொடுக்க விடோம்" என்றார்கள்.

உடனே இயற்பகைநாயனார் அதிக கோபங்கொண்டு, உங்கள் சரீரங்களைத் துண்டம் துண்டமாக்கி உங்களுயிரைச் சுவர்க்கத்துக்கேற்றி ஐயரைத் தடையின்றிப் போகவிடுவேன்" என்று சொல்லி எதிர்க்க; அவர்கள் அந்நாயனாரோடு யுத்தஞ்செய்யத் தொடங்காமல், அவர் மனைவியாரைக் கொண்டுசெல்கின்ற ஐயருக்கு முற்பட்டு, அதிக கோபத்தோடும் அவரைத் தடுத்தார்கள். அதுகண்ட நாயனார் கோபங்கொண்டு, வாளினாலே, இடசாரி வலசாரியாக மாறி மாறிச் சுற்றி வந்து அவர்களுடைய தோள்களையும் கால்களையும் தலைகளையும் துணித்து, விழுத்தி, பின் ஒவ்வொருவராய் வந்து எதிர்த்தவர்களையும் கொன்று, மேல் எதிர்ப்பவர் ஒருவருமின்றி யுத்தகளத்திலே உலாவினார்.

பின் இந்தச் செயற்கருஞ் செய்கையைச் செய்த நாயனார் ஐயரை நோக்கி, "சுவாமி! தேவரீர் அஞ்சாவண்ணம் இந்தக் காட்டைக் கடக்கும் வரைக்கும் வருகிறேன்" என்று சொல்லி, அவரோடு போனார். திருச்சாய்க்காடு என்னுஞ்சிவஸ்தலத்துக்கு சமீபத்திலே போன பொழுது, ஐயர் இயற்பகைநாயனாரை நோக்கி, "இனி நீர்திரும்பிப் போகலாம்" என்று சொல்ல; நாயனார் அவருடைய திருவடிகளை வணங்கி அஞ்சலிசெய்து ஸ்தோத்திரம் பண்ணிக் கொண்டு திரும்பினார்.

அப்பொழுது ஐயர் "இயற்பகையே! இங்கே வா" என்று சொல்லி ஓலமிட்டார். நாயனார் அந்த ஓசையைக்கேட்டு, "அடியேன் வந்துவிட்டேன் வந்துவிட்டேன். இன்னும் இடையூறு, செய்பவர்கள் உண்டாயில், கொன்று போடுவேன்" என்று சொல்லிக்கொண்டுவர; ஐயர் மறைந்தருளினார். வந்த நாயனார். அவ்வையரைக்காணாமல் மனைவியாரைமாத்திரங் கண்டார். பின்பு ஆகாயத்திலே பார்வதி சமேதராகி இடபவாகனத்தில் எழுந்தருளிவந்த திருக்கைலாசபதியைக் கண்டார். ஆராமையினாலே உடனே விழுந்தார்; எழுந்து ஸ்தோத்திரம்பண்ணினார். சுவாமி அவரை நோக்கி "நம்மேலும் நம்முடைய அடியார்கண் மேலும் நிஷ்களங்கமாகிய அன்பு வைத்த இயற்பகையே! நீ உன் மனைவியோடும் நம்முடனே வா" என்று திருவாய் மலர்ந்து, அந்தர்த்தானமாயினார். இயற்பகைநாயனாரும் மனைவியாரும் சிவலோகத்தை அடைத்து, பேரின்பத்தை அனுபவித்து வாழ்ந்திருந்தார்கள். யுத்தத்திலே இறந்த அவர்கள் பந்துக்களும் வானுலகத்தை அடைந்து இன்பமனுபவித்தார்கள்.

திருச்சிற்றம்பலம்

பின்னிணைப்பு:

இயற்பகைநாயனார் புராண சூசனம்
அடியார் வேண்டியது மறாது கொடுத்தல்


கருணாநிதியாகிய சிவன், தம்மை உணர்ந்து தம்மிடத்து இடையறாத அன்பு செய்யும் மெய்யடியார்களுக்கு, உலகத்துள்ள இனிமையாகிய எப்பொருள்களினும் மிக இனியராய், ஒருகாலும் இடையறாத பேரின்பத்தை ஜனிப்பிப்பார். அது "சுனியினுங் கட்டி பட்ட கரும்பினும் - பனிமலர்க் குழற் பாவைநல் லாரினுந் - தனமுடிகவித்தாளு மரசினு - மினியன் றன்னடைந் தார்க்கிடை மருதனே" என அதனை உணர்ந்த திருநாவுக்கரசு நாயனார் கூறுமாற்றால் அறிக. ஆதலால், மெய்யுணர்வுடையோர்கள், தமக்கு உரிய மனைவி மைந்தர் முதலிய உயிர்ச்சார்புகளினும், வீடுபொன் முதலிய பொருட்சார்புகளினும், இகபரமும் உயிர்க் குயிராகிய சிவனே தமக்கு மிக இனியர் என்று தெளிந்து, அச்சார்புகளோடு கல்ந்திருப்பினும் தாமரையிலையிற் றண்ணீர்போல அவைகளிடத்தே பற்றுச் சிறிதுமின்றி, அச்சிவனிடத்தே இடையறாத மெய்யன்புடையர்களாகி, சிவனடியார்களையும் சிவலிங்கத்தையும் சிவன் எனவே கண்டு, வழிபட்டு வாழ்வார்கள். சிவன் பகுப்பின்றி எங்கும் வியாபித்திருப்பினும், சிவலிங்கத்தினிடத்தும், சிவனடியாரிடத்தும் தயிரின் நெய்போல விளங்கியும், மற்றையிடங்களிற் பாலின் நெய்போல விளங்காமலும் இருப்பார்.


இவ்வியற்பகை நாயனார், முன்சென்ற பிறப்புக்களிலே பயன் குறியாது செய்த அளவிறந்த சிவபுண்ணியங்களினாலே இப்பிறப்பின் கண்ணே யான் எனது அற்றவர் உறவாகிய சிவனே தமக்கு இனியவர் எனத்தெளிந்து, சிவலிங்கத்தையும் சிவனடியார்களையும் சிவன் எனவே கண்டு வழிபடுவாராயினார். ஒரு காமக்கிழத்திமேல் அதிதீவிரமாய் முறுகி வளரும் காமத்தினாலே விழுங்கப்பட்ட மனசை உடைய ஒருவன், தனக்கு உரிய எப்பொருள்களையும் தான் அனுபவித்தலினும், அவள் அனுபவிக்கக் காண்டலே தனக்கு இன்பமாகக் கொள்ளுதல் போல; தமக்குச் சிவன் எனவே தோன்றும் சிவனடியார்கள்மேலே அதிதீவிரமாய் முறுகிவளரும் அன்பினாலே விழுங்கப்பட்ட மனசை உடைய இந்நாயனார், தமக்கு உரிய எப்பொருள்களையும் தான் அனுபவித்தலினும், அவ்வடியார்கள் அனுபவித்தலைக் காண்டலே தமக்கு இன்பமாகக்கொள்ளும் இயல்புடையார். ஆதலாலன்றோ, தம்மிடத்துள்ள பொருள்களுள் அவ்வடியார்கள் கேட்பனயாவையோ அவை எல்லாம் சிறிதாயினும் மறாது, உண்மகிழ்ச்சியோடு கொடுக்கும் பெருந்தகைமையிற் சிறந்து விளங்கினார். இவரிடத்துள்ள இம்மெய்யன்பை, சர்வான்மாக்களும் உணர்ந்து உய்யும்படி, உணர்த்துதற்குத் திருவுளங்கொண்ட கிருபா சமுத்திரமாகிய சிவன், ஆன்மாக்களுக்கு உலகத்துப் பொருள்களுள் மனைவியினும் இனிய பொருள் பிறிது இல்லாமையால், சிவனடியார் வேடங்கொண்டு வந்து, இவரிடத்தே இவர் மனைவியையே கேட்க; இவர் கற்பினிற் சிறந்து விளங்கும் அம்மனைவியையும் மறாது பெருமகிழ்ச்சியோடு கொடுத்தார். இதனால் இவர் "பனிமலர்க்குழற் பாவை நல்லாரினும்" சிவனே தமக்கு இனியர் என்று கொண்டார் என்பது, துணியப்படும். அன்றியும், இவர் உயர்க்குடிப் பிறப்பினாலும் பெருஞ்செல்வத்தினாலும் உலகத்தாராலே நன்குமதிக்கப்படுவோராய் இருந்தும், தாம் பிறருக்கு மனைவியைக் கொடுப்பின் உலகத்தாராலே பழிப்புரை உண்டாகுமென்பது நோக்கிற்றிலர். இதனால் இவர் மனசைச் சிவபத்தியே விழுங்கிற்றென்று துணிக; இவர் "நாடவர் பழித்துரை பூணது வாகக்" கொண்டமையும் தேர்க.

இந்நாயனார், பிறர்மனை நயத்தல் சிவாகமங்களில் விலக்கப்பட்ட பாவம் என்பது நோக்காது தமது மனைவியைத் தரும்படி கேட்டவரை, சிவனடியார் என்று கொண்டமை குற்றமாகாதோ எனின், ஆகாது. காமக்கிழத்தியர் வடிவிற் காணப்படும் ஆடை சாந்து ஆபரணம் முதலாயின, காமுகரை வசீகரித்து, நினைக்குந்தோறும் காணுந்தோறும் இன்பம் ஜனிப்பிக்குமாறுபோல; விபூதி ருத்திராக்ஷ முதலிய சிவவேடமானது, மெய்யன் புடையாரை வசீகரித்து, நினைக்குந்தோறும், காணுந்தோறும் இன்பம் ஜனிப்பிக்கும், "இது, சேலுங் கயலுந் திளைக்குங் கண்ணாரிளங் கொங்கையிற் செங்குங்குமம் - போலும் பொடியணி மார்பிலங்கும்" என்னுந் திருப்பல்லாண்டாலும் அறிக. அவ்வாறே இந்நாயனாரும், விபூதி ருத்திராக்ஷம் முதலிய சிவவேடத்தைக் கண்டவுடனே அதனால் வசீகரிக்கப்பட்டு, இன்பமேலிடப் பெறுதலால் தம்வயத்தரல்லராவர்; ஆகவே, அச்சிவவேடத்தை உடையாரிடத்துக் குணங்குற்றம் ஆராயும் ஆராய்ச்சி இவருக்கு எப்படிக் கூடும் என்க. அதிதீவிரபத்தி உடையாருக்கு அடியார்களிடத்தில் குணங்குற்றம் ஆராய்தல் கூடாமை "உருப்பொ லாதவ ரிழிகுலத்தவர்நல் லொழுக்க மில்லவரென்று நம்மளவில் - விருப்பி லாதவ ரெனினு மெய்ந்நீறு மிக்க சாதன வேடமுங் கண்டாற் - றரிப்பி லாது சென்றெதிருற வணங்கித் தக்க போனக மளித்தவர்க் கெளிதா - விருப瘍பர் தாமவரடியவர்க் கடியா ரென்பர் யானென தெனஞ்செருக் கறுப்பார்." என்னும் திருவாதவூரடிகள் புராணத்தில் சிவன் கூறிய பொருளை உடைய திருவாக்காற் காண்க. சர்வலோகைக நாயகராகிய பரமசிவனாலே "செயற்கருஞ் செய்கை செய்ததீரனே" என்று வியக்கப்பட்ட இந்நாயனாரது அத்தியற்புத பத்தியின் பெருமையைப் பத்தி என்பது சிறிதும் அறிகிலாச் சிறியேனா விரித்துரைக்கவல்லன்.

திருச்சிற்றம்பலம்


இக்கட்டுரையை தட்டச்சி எனக்கு அனுப்பி வைத்த திரு கே. திருஞான சம்பந்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

ஆறுமுக நாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.

Wednesday, January 17, 2007

பெரியபுராணம் - ஆனாயநாயனார் புராணம்

திருத்தொண்டர் புராணம்

என்று வழங்குகின்ற

பெரியபுராணம்

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்

கத்தியரூபமாக செய்தது

இரண்டாவது
இலைமலிந்த சருக்கம்

ஆனாயநாயனார் புராணம்

மங்கலமா மழநாட்டு மங்கலமா நகருண்
மருவுபுக ழாயனார் வளரா மேய்ப்பார்
கொங்கலர்பூந் திருக்கொன்றை மருங்கு சார்ந்து
குழலிசையி லைந்தெழுத்துங் குழைய வைத்துத்
தங்குசரா சரங்களெல்லா முருகா நிற்பத்
தம்பிரா னணைந்துசெவி தாழ்த்த வாழ்ந்து
பொங்கியவான் கருணைபுரிந் தென்று மூதப்
போதுகவென் றருளவுடன் போயி னாரே.


ழநாட்டிலே, மங்கலவூரிலே, ஆயர்குலத்திலே, சிவ பத்தியிற் சிறந்த ஆனாயர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் தம்முடைய ஏவலாளராகிய மற்றை யிடையர்களோடும் பசுநிரைகளைக் காட்டுக்குக் கொண்டுபோய் மேய்த்துக் கொண்டும், காந்தருவ வேதத்திலே சொல்லியபடி செய்யப்பட்ட வேய்ங்குழலினாலே ஸ்ரீபஞ்சாக்ஷரத்தைச் சத்தசுரம் பொருந்த வாசித்து ஆன்மாக்களுக்குத் தம்முடைய இசையமுதத்தைச் செவித் துவாரத்தினாலே புகட்டிகொண்டும் வருவார்.

கார்காலத்திலே ஒருநாள், இடையர்கள் பசுநிரைகளைச் சூழ்ந்துகொண்டு செல்ல, அவ்வானாயநாயனார் கையிலே கோலும் வேய்ங்குழலுங் கொண்டு நிரைகாக்கும்படி காட்டுக்குச் சென்றபொழுது; அவ்விடத்திலே மாலையைப்போல நீண்ட பூங்கொத்துக்களைத் தாங்கிக்கொண்டு புறத்திலே தாழ்கின்ற சடையினையுடைய பரமசிவனைப்போல நிற்கின்ற ஒரு கொன்றைமரத்துக்குச் சமீபத்திலேபோய் அதைப் பார்த்துக்கொண்டு நின்று, அன்பினாலே உருகி இளகிய மனசையுடையவராகி, வேய்ங்குழலினாலே இசை நூலிலே விதித்தபடி ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை வாசித்தார். அவர் பஞ்சாக்ஷரத்தை அமைத்து வாசிக்கின்ற அதிமதுரமாகிய இசை வெள்ளமானது எவ்வகைப்பட்ட உயிர்களின் செவியிலும் தேவ கருவின் பூந்தேனைத் தேவாமிர்தத்தோடு கலந்து வார்த்தாற்போலப் புகுந்தது. புற்களை மேய்ந்த பசுக்கூட்டங்கள் அசைவிடாமல் அவரை அடைந்து, உருக்கத்தினாலே மெய்ம்மறந்து நின்றன; பால் குடித்துக் கொண்டு நின்ற கன்றுகளெல்லாம் குடித்தலை மறந்துவிட்டு, இசை கேட்டுக் கொண்டு நின்றன; எருதுகளும் மான் முதலாகிய காட்டுமிருகங்களும் மயிர் சிலிர்த்துக்கொண்டு அவர் சமீபத்தில் வந்தன; ஆடுகின்ற மயிற்கூட்டங்கள் ஆடுதலொழிந்து அவர் பக்கத்தை அடைந்தன; மற்றைப் பலவகைப் பட்சிகளும் தங்கள் செவித்துவாரத்தினாலே புகுந்த கீதம் நிறைந்த அகத்தோடும் அவரருகிலே வந்து நின்றன; மாடு, மேய்த்துக்கொண்டு நின்ற இடையர்களெல்லாரும் தங்கள் தொழிலை மறந்து கானத்தைக் கேட்டுக்கொண்டு நின்றார்கள்; விஞ்சையர்களும் சாரணர்களும் கின்னரர்களும் தேவர்களும் மெய்ம்மறந்து விமானங்களிலேறிக் கொண்டு வந்தார்கள்; வருத்துகின்ற உயிர்களும் வருத்தப்படுகின்ற உயிர்களும் அவ்விசையைக் கேட்டு அதன்வசமான படியால், பாம்புகள் மயங்கிப் பயமின்றி மயில்களின் மேலே விழும்; சிங்கமும் யானையும் ஒருங்கே கூடிவரும்; மான்கள் புலிகளின் பக்கத்திலே செல்லும்; மரக்கொம்புகள் தாமும் சலியாதிருந்தன.

இப்படியே சரம் அசரம் என்னும் ஆன்மவர்க்கங்களெல்லாம் ஆனாயநாயனாருடைய வேய்ங்குழல் வாசனையைக் கேட்டு, இசைமயமாயின, அவ்விசையைப் பொய்யன்புக்கு அகப்படாத பரமசிவன் கேட்டு, பார்வதிதேவியாரோடும் இடபாரூடராய் ஆகாயமார்க்கத்தில் எழுந்தருளி வந்து நின்று,

அவ்வானாயநாயனார் மீது திருவருணோக்கஞ்செய்து, "மெய்யன்பனே; நம்முடைய அடியார்கள் உன்னுடைய வேய்ங்குழலிசையைக் கேட்கும்பொருட்டு, நீ இப்பொழுது இவ்விடத்தில் நின்றபடியே நம்மிடத்துக்கு வருவாய்" என்று திருவாய்மலர்ந்தருளி, அவ்வானாயநாயனார் வேய்ங்குழல் வாசித்துக் கொண்டு பக்கத்திலே செல்லத் திருக்கைலாசத்தை அடைந்தருளினார்.

இலைமலிந்த சருக்கம் முற்றுப்பெற்றது.

பின்னிணைப்பு:

அனாயநாயனார் புராண சூசனம்

ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை வேய்ங்குழலினால் வாசித்தல்

அநாதி தொடங்கித் தம்மை வருத்தும் பிறவி நோயினின்றும் நீங்கி உய்ய விரும்புவோர்க்கு, அந்நோயை நீக்க வல்ல பரம வைத்தியராகிய சிவனை, உணர்த்தும் மந்திரம் ஸ்ரீபஞ்சாக்ஷரமேயாம். ஆதலால், இப்பஞ்சாக்ஷரத்தை, சிவன்மாட்டு இடையறாது வளரும் மெய்யன்பினால் மனம் கசிந்து ஓதுவோர் முத்தி பெறுவர். "காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி - யோது வார்தமை நன்னெறிக் குய்ப்பது - வேத நான்கினு மெய்ப்பொருளாவது - நாத னாம நமச்சிவாயவே" என்றார் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்.

சிவநாமத்தை வாளா ஓதலினும், இசை நூற்பயிற்சியின் மிக வல்லராகி, ஏழிசைகளின் முறை வழுவாது முப்பத்திரண்டு இராகங்களுள் அவ்வக்காலத்துக்கு ஏற்ற இராகத்தினோடும் வேய்ங்குழலால் வாசித்தல், தமக்கும் அதனைக் கேட்கும் பிறர்க்கும் சிவன்மாட்டு அன்பை வளரச் செய்யும். இதனாலன்றோ, சிவநாமம் கீதத்தோடு கூடுமாயின், சிவன் மிகப் பிரீதியுற்று எல்லையில்லாத திருவருளைச் சுரப்பர் என்க.

அது "விளக்கினார் பெற்ற வின்பமெழுக்கினாற் பதிற்றி - யாகுந் - துளக்கினன் மலர் தொடுத்தாற் றூயவிண் ணேற லாகும் - விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞான மாகு - மளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகடா மருளு மாறே" "இறவாமே வரம் பெற்றே னென்று மிக்க விராவணனை யிருபதுதோ ணெரியவூன்றி - யுறவாகி யின்னிசைகேட் டிரங்கி மீண்டேயுற்ற பிணி தவிர்த்தருள வல்லான் றன்னை - மறவாதார் மனத்தென்று மன்னினானை மாமதிய மலர்க்கொன்றை வன்னிமத்த - நறவார்செஞ் சடையானை நள்ளாற் றானை நானடியே னினைக்கப் பெற்றுய்ந்த வாறே" என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரங்களானும் உணர்க.

சிவநாமங்கள் எல்லாவற்றினும் சிறந்த ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை வேய்ங்குழலினால் வாசித்துப் பெரும் பயன் பெற்றமையாற் சிறப்புற்றவர் இவ்வானாயநாயனார். சிவனது திருவடிகளையே யன்றிப் பிறிதொன்றையும் சிறிதும் பற்றாத இந்நாயனார், அத்திருவடிகளில் எல்லை இல்லாத அன்பை வளர்த்தற்குக் கருவி கீதத்தின் மிக்கது பிறிது இன்று என்னுங் கருத்தால் அன்றோ, ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை வேய்ங்குழலால் வாசித்தலே தொழிலாகக் கொண்டனர். அது இங்கே "தம்பெரு மானடி யன்புறு கானத்தின் - மேவு துளைக்கரு விக்குழல் வாசனை மேல் கொண்டார்" என்பதனால் உணர்த்தப்பட்டது.

இவர் "உருகி - யொன்றியசிந்தையிலன்பை யுடையவர்" ஆகி, வாசித்த இவ்வேய்ங்குழல் வாசனையானது எவ்வுயிர்களையும் இசைமயமாக்கி, கசிந்து உருகச் செய்த பெருவியப்பை இங்கே ஆசிரியர் சேக்கிழார் நாயனார் விரித்துரைத்த அருமைத் திருவாக்குக்களே எம்போலிகளுடைய கன்னெஞ்சையும் கசியச் செய்யுமாயின்; அவ்வாசனையின் பெருமையை யாமா கூறவல்லம்? இந்நாயனார் தமக்கு மாத்திரமன்றி எவ்வுயிர்க்கும் பயன்படுவதாய், நினைப்பினும் கேட்பினும் இனிமை பயக்கும் இத்திருத்தொண்டைச் சிவன்மாட்டு இடையறாது முறுகி வளரும் மெய்யன்போடு செய்தமையால் அன்றோ. "பொய்யன்புக் கெட்டாத பொற்பொதுவி னடம்புரியும்" சிவன் இவருக்கு வெளிப்பட்டு, "எப்பொழுதுஞ் - செந்நின்ற மனப்பெரியோர் திருக்குழல்வா சனைகேட்க - விந்நின்ற நிலையேநம் பாலணைவாய்" என்று திருவாய்மலர்ந் தருளினார்.


இக்கட்டுரையை தட்டச்சி எனக்கு அனுப்பி வைத்த திரு கே. திருஞான சம்பந்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

ஆறுமுக நாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.

Saturday, January 06, 2007

பெரியபுராணம் - அரிவாட்டாயநாயனார் புராணம்


திருத்தொண்டர் புராணம்

என்று வழங்குகின்ற

பெரியபுராணம்

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
கத்தியரூபமாக செய்தது

இரண்டாவது இலைமலிந்த சருக்கம்

அரிவாட்டாயநாயனார் புராணம்

தாவில்கண மங்கலத்துள் வேளான் டொன்மைத்

தாயனார் நாயனார் தமக்கே செந்நெற்

றூவரிசி யெனவிளைவ தவையே யாகத்

துறந்துணவு வடுவரிசி துளங்கு கீரை

யாவினினைந் துடன் கொணர்வார் கமரிற் சிந்த

வழிந்தரிவாள் கொண்டூட்டி யரியா முன்னே

மாவடுவி னொலியுமரன் கரமுந் தோன்றி

வாள்விலக்கி யமரர்தொழ வைத்த வன்றே.

சோழமண்டலத்திலே, கணமங்கலம் என்கின்ற ஊரிலே; வேளாளர்குலத்திலே, சிவபத்தியிற் சிறந்தவரும், இல்லறத்தை ஒழுங்காக நடத்துகின்றவரும், மிகுந்த செல்வமுள்ளவருமாகிய தாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரமசிவனுக்குச் செந்நெல்லரிசியும் செங்கீரையும் மாவடுவும் தினந்தோறுங் கொண்டுபோய், திருவமுது செய்வித்து வருவார்.

இப்படி நிகழுங்காலத்திலே, கடவுளுடைய திருவருளினால் அவருக்கு வறுமை உண்டாயிற்று. உண்டாகியும், அவர் கூலிக்கு நெல் அறுப்பவராகி, தாங்கூலியாகப் பெற்ற செந்நெலெல்லாம் சுவாமிக்குத் திருவமுது செய்வித்து, கார் நெல்லைக்கொண்டு; தாஞ்சீவனம் செய்து வந்தார்.

செய்யுநாளிலே, பரமசிவன் அவ்வூரிலிருக்கின்ற வயல்களிலுள்ள நெல்லெல்லாம் செந்நெல்லாகும்படி அருள்செய்ய; தாயனார் மனமகிழ்ந்து, நாள்தோறும் வயல்களுக்குப் போய் நெல்லறுத்து, கூலி வாங்கி, "இப்படிக் கிடைத்தது அடியேன் செய்த புண்ணியத்தால்" என்று சுவாமிக்கு மிகத் திருவமுது செய்விப்பாராயினார்.

இப்படி நடக்கின்றபடியால், நாடோறும் உணவில்லாமை பற்றி, மனைவியார் வீட்டின் பின்புறத்திலுள்ள தோட்டத்திற்குப் போய், இலைக்கறி கொய்து சமைத்து வைக்க; தாயனார் அதையுண்டு முன்போலத் தாஞ்செய்யும் திருப்பணியைச் செய்தார். செய்யுநாளிலே, தோட்டத்திலுள்ள இலைக்கறியெல்லாம் அற்றுப்போக, மனைவியார் தண்ணீர் வார்க்க, அதனைப் பானம்பண்ணி, திருப்பணியைச் செய்து வந்தார்.

இப்படிச் செய்துவருநாளிலே ஒரு நாள், முன்போலச் சுவாமிக்குத் திருவமுது செய்விக்கும் பொருட்டுச் செந்நெலரிசியும் செங்கீரையும் மாவடுவும் கூடையில் வைத்துச் சுமந்துகொண்டு போக; மனைவியார் பஞ்சகவ்வியங்கொண்டு அவருக்குப் பின்னால் நடந்தார். முன் செல்கின்ற தாயனார் பசியினாலே கால் தள்ளாடித் தவறி விழ, மனைவியார் பஞ்சகவ்வியக் கலயத்தை மூடியிருந்த கையினால் அவரை அணைத்தார். அணைத்தும், எல்லாம் கமரிலே போவதினால் பயன் யாது" என்று துக்கித்து, "இங்கே சிந்திய செந்நெல்லரிசியையும் செங்கீரையையும் மாவடுவையும் கடவுள் திருவமுது செய்தருளும் பேற்றைப் பெற்றேனில்லையே" என்று, அரிவாளினாலே தம்முடைய ஊட்டியை அரியத் தொடங்கினார்.

அப்பொழுது அவ்வடியார் தம்முடைய கழுத்தை அரிகின்ற கையைத் தடுக்கும் பொருட்டுச் சிதசித்துப் பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கின்ற பரமசிவன் உயர நீட்டிய திருக்கரமும், மாவடுவைக் கடித்தலால் உண்டாகுகின்ற விடேல் விடேல் என்னும் ஓசையும், கமரினின்றும் ஒக்க எழுந்தன. தாயனார், பரமசிவனுடைய திருக்கரம் வெளியில் வந்து அரிவாள் பிடித்த தம்முடைய கையைப் பிடித்தபொழுது, பயங்கொண்டு, முந்திய துன்பம் நீங்கி, மனம் மிகமகிழ்ந்து, அவர் தமக்குச் செய்த திருவருளை வியந்து அஞ்சலி செய்து ஸ்தோத்திரம் பண்ணிக்கொண்டு நின்றார். சிவபெருமான் இடபாரூடராய்த் தோன்றி, "நீ நம்மேல் வைத்த அன்பினாலே செய்த செய்கை நன்றாயிருக்கின்றது. நீ உன் மனைவியோடு வந்து நமது சிவலோகத்தில் வாழ்ந்திரு" என்று சொல்லி, அவர்கள் உடன் செல்ல, போயருளினார் அந்தத் தாயனாரென்பவர் "இங்கே சிந்தியவைகளைப் பரமசிவன் திருவமுதுசெய்யப் பெற்றேனில்லையே" என்று துக்கித்து, அரிவாளினாலே தமது கழுத்தை அரிதலுற்றபடியால், அவருடைய பெயர் அரிவாட்டயநாயனார் என்றாயிற்று. "

திருச்சிற்றம்பலம்
இரண்டாவது இலைமலிந்த சருக்கம் முற்றுப்பெற்றது.

பின்னிணைப்பு:

அரிவாட்டாய நாயனார் புராண சூசனம்

சிவனுக்கு அன்னம் கறி முதலியன அமுது செய்வித்தல்

சிவனுக்கு அன்னம் கறி முதலியன அமுது செய்வித்தல் மிக்க மேலாகிய சிவபுண்ணியமாம். அது, "அருத்திய வவிழி னேக மமலனை முதலோர்க் கன்பா - லிருத்திடுஞ் சிவலோ கத்தில் வருடமா யிரமு மேயப் - பொருந்தியவன்பர் தம்மைப் பொருந்திடிற் பருப்பு நெய்யு - முரைத்த வவ் வருடந் தன்னிற் றசகுண மோங்கு மாங்கே", "பொறித்தநற் கறியும் புல்கிற் றசதச குணிதம் போனந் - தரித்தசாட்டியமே யென்னிற் சததச குணமுஞ் சாரும் - பரித்தநற் கந்த பந்தஞ் சதசத குணமும்பற்று - மிரத்தநற் சாலி யன்ன மயுதமே யெண்ணி லென்றும்." "சாலியின் விசிட்ட ராச சாலியாற் சமைத்த வன்ன - மேலைய பலத்தின் மிக்க தசகுணம் விளைக்கு மீண்டுங் - கோலிய பலங்களேறுங் கொழுவிய நெய்யுங் கூடி - லேலவே கறியுங் கூடிலேற்றமுன் னிசைத்த வாறாம்" என்று சிவதருமோத்தரத்திற் கூறுமாற்றால் அறிக.

இச்சிவபுண்ணியத்தால் மிகச் சிறப்புற்றவர் இவ்வரிவாட்டாய நாயனார். இவர் தமது பெருஞ்செல்வ மெல்லாம் இழந்து, மிகக் கொடிய வறுமை எய்தியும்; கூலிக்கு நெல் அறுப்பவர் ஆகி, தாம் கூலியாகப் பெற்ற செந்நெலெல்லாம் சிவனுக்கு அமுது செய்வித்து, கார் நெல்லைக் கொண்டு தாம் சீவனம் செய்து வரும் நாளிலே; அச்சிவனது திருவருளினாலே கார்நெற் கிடையாது செந்நெல்லே கிடைப்ப, இது அடியேன் செய்த புண்ணியம் என்று, அவை எல்லாம் சிவனுக்கே அமுது செய்விப்பாராகி, தாம் இலைக்கறி உண்டு கொண்டு இருந்த பெருந்தகைமை, நினையுந்தோறும் எவ்வளவு ஆச்சரியத்தைத் தருகின்றது! இவ்விலைக் கறியும் அற்றுப்போக; ஜலபானமாத்திரம் செய்து கொண்டு இச்சிவபுண்ணியத்தை விடாது செய்தமை அதினும் மிக ஆச்சரியம் அன்றோ! இவர்தாம் சிவனுக்கு அமுது செய்விக்கும் பொருட்டுச் சுமந்து செல்லும் செந்நெல்வரிசி முதலியன தாம் பசியினாலே கால் தள்ளாடித் தவறி விழுந்தபொழுது கமரிலே சிந்தக் கண்டு, இவற்றை எம்பெருமான் அமுது செய்தருளும் பேற்றைப் பெற்றிலேனே என்று அரிவாளினாலே தமது ஊட்டியை அரிதலுற்ற ஆச்சரியம் யாவராலே சொல்லற்பாலது! இவர்தாம் இன்ப துன்பம் அடைதல், தமக்கு இச்சிவபுண்ணியம் செய்யக் கிடைத்தல் கிடையாமைகளாலன்றி, செல்வ வறுமைகளால் அன்று என்பது ஈண்டும் கூறியவாற்றாற் காண்க.

இந்நாயனார் குடும்பத்தோடு கூடி இருந்தும், தமக்கு உறவு சிவனே என்னும் மெய்யுணர்வு உடையராகி அவரது திருவடிக்கணன்றித் தமது சரீரத்தினும் உயிர்ச் சார்பு பொருட்சார்புகளினும் சிறிதும் பற்றின்றி வாசனை மாண்டு நின்ற பெருந்தன்மையினர் என்பது ஈண்டுக் கூறிய இவரது செயற்கருஞ் செய்கையினாலே பொள்ளெனப் புலப்படுகின்றது. இப்பெருந்தன்மை, "செய்யி லுகுத்த திருப்படி மாற்றதனை - யைய விதுவமுது செய்யெனவே - பையவிருந் - தூட்டி யறுப்பதற்கே யூட்டி யறுத்தவரை - நாட்டியுரை செய்வதே நாம்'.' எ-ம். "கல்லிற் கமரிற் கதிர்வாளிற் சாணையினில் - வல்லுப் பலகையினில் வாதனையைச் - சொல்லி - லகமார்க்கத் தாலவர்கண் மாற்றினர்காணையா - சகமார்க்கத் தாலன்றே தான்". எ-ம். திருக்களிற்றுப்படியாரிற் கூறுமாற்றானும் உணர்க. இவரது இடையறாத இம்மெய்யன்பினால் அன்றோ, பிரம விட்டுணுக்களும் காண்டற்கரிய பரமசிவன் கமரினின்றும் இவரது அரிவாள் பிடித்த கையைத் தடுத்தற்பொருட்டு உயர வீசிய தமது திருக்கரத்தையும் இவரது வியாகுலத்தை ஒழித்தற் பொருட்டுத் தாம் அமுது செய்தலால் ஆகும் ஓசையையும் தோற்றுவித்து, பின்னர் இடபாரூடராய் வெளிப்பட்டு, இவருக்கும், எத்துணை வறுமை எய்திய வழியும் சிறிதும் மாறுபடாது இவர் கருத்தின்வழி நின்ற மனைவியாருக்கும், முத்தி கொடுத்தருளினார். ஆதலால், சிவனது வியத்தி ஸ்தானங்களாகிய குரு லிங்க சங்கமங்களுக்கு வறுமையினும் தம்மால் இயன்றது சிறிதேனும் அன்போடு கொடுத்தல் புண்ணியமும், கொடாமை பாவமுமாம் என்பது துணிக. ஒன்றும் கிடையாதாயினும்; பச்சிலையாயினும் கிடையாததா! அதுவும் கிடையாதாயின், அவர் சந்நிதியிற் கிடக்கும் செத்தையை ஒருமையுடனே திருவலகினால் போக்குதலும், அரிதோ! அரிது அன்றே! இது "பரமன் றிருமுன் னழன்முன்னும் பரம குரவன்றிரு முன்னு - மொருமை யுறவே வறுமையினு முதவா தவருஞ் சிறிதேது - மரிது பொருடான் பச்சிலையு மரிதோ வஃது மரிதாயிற் - றிருண மதனைத் திருமுன்னே மாற்ற லரிதோ செயலாலே" எனச் சிவதருமோத்தரத்தில் கூறுமாற்றால் உணர்க.


திருச்சிற்றம்பலம்

இக்கட்டுரையை தட்டச்சி எனக்கு அனுப்பி வைத்த திரு கே. திருஞான சம்பந்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

ஆறுமுக நாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.