Sunday, August 27, 2006

நாவலர் பாலபாடம் - கல்வி

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
கல்வி

னிதர்களாலே தேடற்பாலனவாகிய பொருள்கள் கல்விபொருள் செல்வப்பொருள் என இரண்டாம். கல்வியாவது கற்றற்குரிய நூல்களைக் கற்றல். கல்வியெனினும் வித்தையெனினும் பொருந்தும். கற்றற்குரிய நூல்களாவன, அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்களை அறிவிக்கும் நூல்களும், அந்நூல்களை அறிதற்குக் கருவிகளாகிய நிகண்டு, இலக்கணம், கணக்கு முதலிய நூல்களுமாம். அறமெனினும் தருமமெனினும் பொருந்தும். வீடெனினும், முத்தியெனினும், மோட்சமெனினும் பொருந்தும்.

செல்வப்பொருள் பங்காளிகள், கள்வர், வலியவர், அரசர் என்னும் இவர்களாலே கொள்ளப்படும், கல்விப் பொருளோ ஒருவராலும் கொள்ளப்படமாட்டாது. செல்வப்பொருள் வெள்ளத்தாலாயினும் அக்கினியாலாயினும் அழியும்; கல்விப் பொருளோ ஒன்றாலும் அழியமாட்டாது. செல்வப்பொருள் பிறருக்குக் கொடுக்குந்தோறும் குறைந்து கொண்டே வரும்; கல்விப்பொருளோ பிறருக்குக் கொடுக்குந்தோறும், பெருகிக் கொண்டே வரும்.

செல்வப்பொருள், சம்பாதித்தல், காப்பாற்றல், இழத்தல் என்னும் இவைகளாலே துன்பஞ்செய்து, பலரையும் பகையாக்கும். கல்விப் பொருளுடையவர், இம்மையிலே சொற்சுவை பொருட்சுவைகளை அநுபவித்தலாலும், புகழும் பொருளும் பூசையும் பெறுதலாலும், பின்னே தருமத்தையும் முத்தியையும் அடைதலாலும் இடையறாத இன்பத்தை அநுபவிப்பர். இப்பெரியவரைச் சேர்ந்து அறியாதவைகளையெல்லாம் அறிந்தோம் என்று உலகத்தார் பலரும் அவரிடத்து அன்புடையவராவர். ஆகலினாலே, செல்வப் பொருளினும் கல்விப் பொருளே சிறப்புடையது.

உயர்குலமும் அழகும் செல்வாக்கும் உடையவராயினும், கல்வியில்லாதவர் முருக்கம்பூவுக்குச் சமமாவர். இராசாக்களுக்கு அவர் தேசத்தின் மாத்திரம் சிறப்புண்டாம். கற்றறிந்தவருக்கு அவர் சென்ற சென்ற தேசங்களினெல்லாம் சிறப்புண்டாம். ஆதலின் இராசாக்களினும் கற்றறிந்தவரே சிறப்புடையர். ஆதலினால், யாவரும் கல்வியைச் சிறிதும் அவமதியாது வருந்திக் கற்றல் வேண்டும்.

அழுக்குப்படியாத சீலையிலே சாயம் நன்றாகப் பிடிக்கும்; அழுக்குப் படிந்த சீலையிலே சாயம் நன்றாகப் பிடிக்க மாட்டாது. சிறு பிராயத்திலே கற்ற கல்வி புத்தியிலே நன்றாகப் பதியும். புத்தி சமுசாரத்திலே விழுந்து வருத்தத்தை அடைந்து கொண்டிருக்கின்ற முதிர்ந்த பிராயத்திலே கற்றாலும், கல்வி நன்றாகப் புத்தியிலே பதியமாட்டாது. ஆதலினாலன்றோ ஒளவையார் "இளமையிற் கல்" என்று அருளிச் செய்தார்.

கல்வியை நல்லாசிரியரிடத்தே சந்தேகமும் விபரீதமும் அறக் கற்றல் வேண்டும். சந்தேகமாவது இதுவோ அதுவோ என ஒன்றிலே துணிவு பிறவாது நிற்றல். விபரீதமாவது, ஒன்றை மற்றொன்றாகத் துணிதல். வியாதி வறுமைகள் இல்லாமையும், பொருள், இளமை முதலியவைகள் உண்மையும், கல்வி கற்றற்குச் சிறந்த கருவிகள். மிகச் சிறந்த கருவி ஆசிரியருடைய உள்ளத்திலே அருள் உண்டாகும்படி நடத்தல். ஆதலினாலே, கல்வி கற்கும் மாணாக்கர் ஆசிரியரை விதிப்படி சிரத்தையோடு வழிபட்டே கற்றல் வேண்டும். வழிபாடாவது, இன்சொற் சொல்லல், வணங்குதல், உற்றவிடத்துதவுதல் முதலாயின.

கல்வியிலே தேர்ச்சியடைய வேண்டுமாயின் இடைவிடாது கற்றல் வேண்டும். ஒரு நாள் ஊக்கமாகவும், மற்றொரு நாள் சோம்பலாகவும் இராமல், எப்பொழுதும் தங்கள் தங்கள் சத்திக்கு ஏற்பக் கல்வி பயிலல் வேண்டும். சோர்வு அடையாமல் நாடோறும் சிரமமாகச் சிறிதாயினும் நன்றாகக் கற்கின்றவர் எப்படியும் அறிவுள்ளவராவர். தாம் அதிக சமர்த்தர் என்று நினைத்து ஒவ்வொரு வேளையில் மாத்திரம் கற்கின்றவர் அதிகமாகத் தேர்ச்சி அடையமாட்டார். மணற்கேணியைத் தோண்டுந்தோறும் ஊற்று நீர் சுரந்து பெருகிக் கொண்டே வருதல்போல, கல்வியைக் கற்குந்தோறும் அறிவு வளர்ந்து கொண்டே வரும். ஆதலினால், கல்வியைச் சிறிது கற்றமாத்திரத்தால் அமையாது மேன்மேலும் கற்றல் வேண்டும்.

தாங்கேட்ட பாடங்களை நாடோறும் போற்றலும், தாங்கேட்ட பொருள்களைப் பலதரமுஞ் சிந்தித்தலும், ஆசிரியரை அடுத்து அவைகளைக் குறைவு தீரக் கேட்டலும். ஒருசாலை மாணாக்கர் பலருடனும் பலதரமும் பழகுதலும், தாம் ஐயுற்ற பொருளை அவரிடத்து வினாவுதலும், அவர் வினாவியவைகளுக்கு உத்தரங் கொடுத்தலாலும், தாம் கேட்டறிந்ததைப் பிறருக்கு அறிவித்தலும் ஆகிய இவைகளெல்லாம் கல்வி பயிலும் மாணாக்கருக்குக் கடன்களாம்.

நூல்களிலே சிலநாட் பழகினால், விவேகிகளாயினும், சிலவற்றில் வல்லராதலும் அரிது. பலநாட் பழகினால், மந்தர்களாயினும், பலவற்றிலும் வல்லவராவர். நூற் பொருளை விரைவினாலே பார்த்தால், விவேகிகளாயினும், ஒன்றுந் தெரியாது. விரையாது அமைவுடனே பார்த்தால், மந்தர்களாயினும், கருகாது தெரியும்.

பெரும்பாலும் எல்லாருக்கும் கற்பதிற் கருத்திறங்கும், கற்றதிற் கருத்து இறங்காது. அது நன்மையன்று. கருத்தைக் கற்பதிலே மட்டுப்படுத்தி, கற்றதிலே சிந்தாமல் இறக்கல் வேண்டும். வருந்திக் கற்ற நூலை மறக்க விட்டு வேறு நூலைக் கற்றல் கையிலே கிடைத்த பொருளை எறிந்துவிட்டு, வேறு பொருளை அரிப்பரித்துத் தேடல் போலும். பசி முதலிய வருத்தத்தாலாவது, அன்ன முதலியவற்றின்கண் அவாவினாவாவது, யாதாயினும் வேறொரு நிமித்தத்தாலாவது, கருத்து மயங்கினால், அப்பொழுது கல்வியிற் பழகுதலொழிந்து அம்மயக்கந் தீர்ந்த பின்பு பழகல் வேண்டும்.

கல்வியுடையவர் தாங் கற்றறிந்தபடி நல்வழியிலே ஒழுகுதலும், நன் மாணாக்கர்களுக்குக் கல்வி கற்பித்தலும், எல்லாருக்கும் உறுதியைப் போதித்தலுமாகிய இம்மூன்றையும் எந்நாளும் தமக்குக் கடனாகக் கொள்ளல் வேண்டும். இவ்வியல்புடையவரே கல்வியாலாகிய பயனை அடைந்தவராவர். இம்மூன்றிமில்லாவிடத்துக் கல்வியினாற் பயனில்லை.

சரீரசுகத்துக்கு ஏதுவாகிய அன்னவஸ்திர முதலிய வற்றையும் ஆன்ம சுகத்துக்கு ஏதுவாகிய ஞானத்தையும் கொடுப்பது வித்தையேயாதலின், எல்லாத் தானங்களினும் வித்தியாதானமே சிறந்தது. ஒருவருக்கு அன்ன வஸ்திரங் கொடுத்தால், அவை அவருக்கு மாத்திரமே பயன்படும். பயன்படுவதும் சிறிதுபொழுது மாத்திரமே. ஒரு விளக்கேற்றுதல், அவ்வொருவிளக்கிலே பலவிளக்கும், அப்பல விளக்கினுள்ளும் ஒவ்வொரு விளக்கிலே பற்பல விளக்குமாக, எண்ணில்லாத விளக்கு ஏற்றப்படுதற்கு ஏதுவாதல்போல, ஒருவருக்குக் கல்வி கற்பித்தல், அவ்வொருவரிடத்திலே பலரும், அப்பலருள்ளும் ஒவ்வொருவரிடத்திலே பலரும், அப்பலருள்ளும் ஒவ்வொருவரிடத்திலே பற்பலருமாக, எண்ணில்லாதவர் கல்வி கற்றுக்கொள்ளுதற்கு, ஏதுவாகும். அவர் கற்ற கல்வியோ அப்பிறப்பினன்றி மற்றைப் பிறப்புக்களிலும் சென்று சென்று உதவும். ஆதலின் வித்தியாதானத்துக்குச் சமமாகிய தருமம் யாதொன்றுமில்லை. தாங்கற்ற கல்வியை நன்மாணாக்கர்களுக்குக் கருணையோடு கற்பியாதவர் காட்டிலே நச்சு மாமரமாவர்.

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

(1) உறுதிப்பொருள்கள் - அடையத்தக்க பொருள்கள்; புருஷார்த்தங்கள் எனவும் பொருள்படும். உறுதி - இறப்படுவது, உறுதல் - அடைதல், பெறுதல்.

ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.