Wednesday, February 15, 2006

நான்காம் பாலபாடம் - ஆன்மா

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
ஆன்மா


ன்மாக்கள் நித்தியமாய், வியாபகமாய், சேதனமாய், பாசத் தடையுடையவைகளாய், சரீரந்தோறும் வெவ்வேறாய் வினைகளைச் செய்து வினைப் பயன்களை அனுபவிப்பவைகளாய், சிற்றறிவும் சிறுதொழிலும் உடையவைகளாய், தங்களுக்கு ஒரு தலைவனை உடையவைகளாய் இருக்கும்.

ஆன்மாக்கள் நல்வினை தீவினையென்னும் இருவினைக்கு ஈடாக, நால்வகைத் தோற்றத்தையும், எழுவகைப் பிறப்பையும், எண்பத்துநான்கு நூறாயிர யோனி பேதத்தையும் உடையவைகளாய் பிறந்திருந் துழலும்.

நால்வகைத் தோற்றங்களாவன: அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் என்பவைகளாம். அவைகளுள் அண்டசம் முட்டையில் தோன்றுவன. சுவேதசம் வேர்வையில் தோன்றுவன. உற்பிச்சம் வித்து வேர் கிழங்கு முதலியவைகளை மேற்பிளந்து தோன்றுவன. சராயுசம் கருப்பையில் தோன்றுவன. எழுவகைப் பிறப்புக்களாவன: தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்பவைகளாம். தாவரங்களென்றது மரம் செடி முதலியவைகளை.

கருப்பையிலே தேவர்களும், மனிதர்களும், நாற்கால் விலங்குகளும் பிறக்கும். முட்டையிலே பறவைகளும், ஊர்வனவும், நீர்வாழ்வனவும் பிறக்கும். வேர்வையிலே கிருமி, கீடம், பேன் முதலிய சில ஊர்வனவும், விட்டில் முதலிய சில பறவைகளும் பிறக்கும். வித்தினும் வேர் கொம்பு கொடி கிழங்குகளினும் தாவரங்கள் பிறக்கும். தாவரமென்றாலும், நிலையியற் பொருளென்றாலும், அசர மென்றாலும் பொருந்தும். தாவரமல்லாத மற்றை ஆறு வகைகளும் சங்கமங்களாம். சங்கமமென்றாலும், இயங்கியற் பொருளென்றாலும், சரமென்றாலும் பொருந்தும்.

தேவர்கள் பதினொரு நூறாயிர யோனிபேதம், மனிதர்கள் ஒன்பது நூறாயிர யோனிபேதம். நாற்கால்விலங்கு பத்து நூறாயிரயோனிபேதம். பறவை பத்து நூறாயிர யோனிபேதம். நீர்வாழ்வன பத்து நூறாயிர யோனிபேதம். ஊர்வன பதினைந்து நூறாயிர யோனிபேதம். தாவரம் பத்தொன்பது நூறாயிர யோனிபேதம். ஆகத்தொகை எண்பத்து நான்கு நூறாயிர யோனிபேதம்.

ஆன்மாக்கள், தாம் எடுத்த சரீரத்துக்கு ஏற்ப, மெய், நாக்கு, மூக்கு, கண், செவி என்னும் ஐம்பொறிகளினாலும், சித்தத்தினாலும் அறியும் அறிவின் வகையினாலே, ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நாலறிவுயிர், ஐயறிவுயிர், ஆறறிவுயிர் என அறுவகைப்படும். புல்லும் மரமும் முதலியவை பரிசத்தை அறியும் ஓரறிவுயிர்கள். இப்பியும் சங்கும் முதலியவை அதனோடு இரத(ச)த்தையும்(சுவை) அறியும் ஈரறிவுயிர்கள். கறையானும் எறும்பும் முதலியவை அவ்விரண்டினோடு கந்தத்தையும் அறியும் மூவறிவுயிர்கள். தும்பியும் வண்டும் முதலியவை அம்மூன்றினோடு உருவத்தையும் அறியும் நாலறிவுயிர்கள். விலங்கும் பறவையும் அந்நான்கனோடு சத்தத்தையும் அறியும் ஐயறிவுயிர்கள். தேவர்களும் மனிதர்களும் அவ்வைந்தனோடு சித்தத்தாலறியும் அறிவுமுடைய ஆறறிவுயிர்கள்.

ஆன்மாக்கள், தாம் பூமியிலே செய்த நல்வினை தீவினை யென்னும் இருவகை வினைகளுள்ளும், நல்வினையின் பயனாகிய இன்பத்தைச் சுவர்க்கத்திலும், தீவினையின் பயனாகிய துன்பத்தை நரகத்திலும், அநுபவிக்கும். அப்படி அநுபவித்துத் தொலைத்துத் தொலையாமல் எஞ்சிநின்ற இரு வினைகளினாலே திரும்பவும் பூமியில் வந்து பிறந்து, அவைகளின் பயன்களாகிய இன்பதுன்ப மிரண்டையும் அநுபவிக்கும். இப்படியே, தமக்கு ஒரு நிலைமை இல்லாத கொள்ளிவட்டமும் காற்றாடியும் போல, கடவுளுடைய ஆஞ்ஞையினாலே, கருமத்துக்கு ஈடாக, மேலே உள்ள சுவர்க்கத்திலும், கீழே உள்ள நரகத்திலும், நடுவே உள்ள பூமியிலும் சுழன்று திரியும்.

இப்படிப் பிறந்திறந்துழலும் ஆன்மாக்கள் தாவர யோனி முதலிய கீழுள்ள யோனிகளெலாவற்றினும் பிறந்து பிறந்திளைத்து, புண்ணிய மேலீட்டினாலே மனிதப் பிறப்பிலே வருதல் மிகுந்த அருமையாம். அவ்வருமை, ஆராயுங்காலத்து, கடலைக் கையினாலே நீந்திக் கரையேறுதல் போலும். இத்தன்மையையுடைய மனிதப் பிறப்பை எடுப்பினும், வேதாகமங்கள் வழங்காத மிலேச்ச தேசத்தை விட்டு அவை வழங்கும் புண்ணிய தேசத்திலே பிறப்பது மிகுந்த புண்ணியம்.

இவ்வருமையாகிய மனிதப் பிறப்பை உண்டாக்கியது உயிர்க்குயிராகிய கடவுளை மனம் வாக்குக் காயங்களினாலே வழிபட்டு அழிவில்லாத முத்தியின்பத்தைப் பெற்று உய்வும் பொருட்டேயாம். சரீரம் கருப்பையில் அழியினும் அழியும். பத்துமாதத்திற் பிறந்தவுடனே அழியினும் அழியும். பிறந்த பின் சிலகாலம் வளர்ந்து அழியினும் அழியும். மூன்று வயசுக்குமேற் பதினாறு வயசு வரையிலுள்ள பாலாவத்தையில் அழியினும் அழியும். அதற்கு மேல் நாற்பது வயசு வரையிலுள்ள தருணாவத்தையின் அழியினும் அழியும். அதற்கு மேற்பட்ட விருத்தாவத்தையின் அழியினும் அழியும். எப்படியும் இந்தச் சரீரம் நிலையின்றி அழிவது உண்மையாம். அழியுங் காலமோ தெரியாதே. இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ, யாது வருமோ, அதுவும் தெரியாதே. ஆதலால் இந்த சரீரம் உள்ளபொழுதே இதனது நிலையாமையை அறிந்து பெருங்கருணைக் கடலாகிய கடவுளை வழிபட்டு உய்ய வேண்டும்.

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

1. சேதனம்-அறிவுடைய பொருள். பாசத்தடை-ஆணவம் முதலிய மலங்களாகிய தடை; அவை கடவுளை அற்தற்கும், மோட்ச இன்பத்தை அடைதற்கும் தடையாமென்றறிக. ஒரு தலைவன் என்றது முழு முதற் கடவுளை.

2. ஈடாக-இருவினையின் அளவுக்குத் தக்க பயனாக. தோற்றம்-உடல் கொண்டு தோன்றும் (பிறக்கும்) விதம்; உருக்கொண்டு ஜனிக்கும் விதம். யோனி பேதம்-(உடலினுருவ அமைப்புத் தோற்றத்தின் பாகுபாடுகளாகிய) பிறவியின் பேதங்கள், நூறாயிரம்-இலக்ஷம். உழலும்-சுழன்று திரியும், மாறி மாறி வரும்.

3. அண்டசம் முதலியவை அண்டஜம், ஸ்வேதஜம், உத்பித்ஜம், ஸராயுஜம் என்ற வடசொற்களின் திரிவு; அண்டஜம்: அண்டம்-முட்டையிலிருந்து; ஜம்-பிறப்பது. ஸ்வேதஜம்: ஸ்வேதம்-வேர்வையிலிருந்து; ஜம்-பிறப்பது. உத்பித்ஜம்: உத்+பித்+ஜம்= (வித்து முதலியவற்றை) மேலிடத்தில் + பிளந்துகொண்டு + பிறப்பது. ஸராயுஜம்: சராயு - கருப்பையிலிருந்து பிறப்பது. தாவரம்-ஒரே இடத்தில் நிலையாய் நிற்பவை, சஞ்சரியாதவை; ஸ்தாவரம் என்னும் வடசொல்லின் திரிவு.

4. கிருமி - அணுப் பரிமாண ரூபமுடைய ஜந்து. கீடம்-புழு. நிலையியற் பொருள் - (இடம் விட்டுப் பெயராது) நிற்றலை இயல்பாகவுடைய பொருள். அசரம் (அ+சரம்) சஞ்சரியாதது; (அ-இன்மை அல்லது மறுதலைப் பொருளில் வரும் வடமொழி இடைச்சொல்; சரம்-சஞ்சரிப்பது) இயங்கியற் பொருள் - இயங்குகின்ற இயல்பினையுடைய பொருள்.

6. இரதம் - சுவை; கந்தம் - மணம், நாற்றம். சித்தத்தாலறியும் அறிவு - அனுமானித்துச் சிந்தனா சக்தியால் உணரும் உணர்வு.

7. சுவர்க்கம் - தேவருலகம். நரகம் - நரகர் வாழும் உலகம். எஞ்சிநின்ற - மிச்சமாயுள்ள. ஒரு நிலைமை - ஓரிடத்தில் நிற்குந்தன்மை, ஒரே நிலையான தன்மை. கொள்ளி வட்டம் - வட்டமாகச் சுழற்றப்படும் நெருப்புக் கொள்ளி. ஆஞ்ஞை - கட்டளை, உத்தரவு. கருமம் - நல்வினை தீவினைகள்.

8. அருமை - எளிதல்லாதது. மிலேச்ச தேசம் - மிலேச்சர் வாழும் பிரதேசம் (இடம்); மிலேச்சர் - வேத சிவாகமங்களிலே கூறப்பட்டுள்ள முறைகளுக்கு மாறாக நடப்பவர்; அவர்கள் ஒருங்கு சேர்ந்து வாழும் பிரதேசம் மிலேச்ச தேசம்.

9. உயிர்க்கு உயிராகிய - சீவான்மாக்களுக்கெல்லாம் உயிர் போன்ரவராகிய; சீவான்மாக்களின் அறிவு இச்சை தொழில்களை இயக்குகின்றனவர் என்ரபடி. வாக்கு - மொழி; காயம் - சரீரம், வழிபட்டு - மனத்தால் தியானித்து, வாக்கால் துதித்து, காயத்தினாற் பூசை நமஸ்காரம்முதலியவற்றைச் செய்து என்றபடி. முத்தியின்பம் - மோக்ஷ இன்பம். பாலாவத்தை - (பால+அவத்தை) பால்யப் பருவம்; இது கௌமாரப் பருவம் எனவும்படும். தருணாவத்தை - (தருண+அவத்தை) யௌவனப் பருவம். விருதாவத்தை - (விருத்த + அவத்தை) முதுமைப் பருவம். உண்மையாமே உண்மையாகுமே. யாது வருமோ - என்ன நிலைமை சம்பவிக்குமோ, இன்பம் வருமோ துன்பம் வருமோ என்றபடி. நிலையாமை - நிலைத்திராத தன்மை, அழியுந்தன்மை. பெருங்கருணைக் கடல் - கடல் போல் மிகுந்த அருள் நிறைந்தவர்.

ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.

0 comments: