Saturday, September 23, 2006

நாவலர் பாலபாடம் - செல்வம்

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
செல்வம்


செல்வமாவது இரத்தினம், பொன், வெள்ளி, நெல் முதலியன. தருமத்துக்கும் இன்பத்துக்கும் துணைக்காரணம் செல்வம். இது பற்றியன்றோ மாணிக்கவாசக சுவாமிகள் "முனிவரும் மன்னரு முன்னுவ பொன்னான் முடியும்" என்றும் "வறியாரிருமை யறியார்" என்றும் திருக்கோவையாரில் அருளிச் செய்தார்.

அழியாப்பொருளாகிய கல்வியையும் கல்வித் தேர்ச்சிக்கு உரிய புத்தகங்களையும் கொள்ளுதற்கும், பசி முதலியவைகளினால் வருந்தாது கவலையற்றிருந்து கல்வி கற்றற்கும், கற்ற கல்வியை அழகுசெய்து தமக்கும் பிறர்க்கும் பயன்படுத்தற்கும் கருவி செல்வமே. கல்வியுடையவரும் வறியவராயின், பசி நோயினாலும் தீராக் கவலைகளினாலும் வறியவராயின், பசி நோயினாலும் தீராக் கவலைகளினாலும் வருந்தி, தாம் முன் கற்ற கல்வியையும் மறந்துவிடுவர். வறியவர் மெய்நூற்பொருளைத் தெளிய அறிந்து போதித்தாராயினும், "நாம் இவர் சொல்லை விரும்பிக் கேட்போமாயின் கண்ணோட்டத்தினால் இவர் குறையை முடித்தல் வேண்டும்" என்று பயந்து, யாவருங் கேளா தொழிவர். ஆதலின் அவர் வாய்ச்சொல் பயனில் சொல்லாய் முடியும்.

செல்வமில்லாதவர், வறுமைத் துன்பமொன்றினான் மாத்திரமா, அத்துன்பம் மூலமாகச் செல்வர் வீட்டுவாயிலை நோக்கிச் செல்லல் துன்பமும், அவரைக் காணல் துன்பமும், கண்டாலும் அவர் மறுத்தபோது உண்டாகுந் துன்பமும், மறாதவிடத்தும் அவர் கொடுத்ததை வாங்குதல் துன்பமும் அதனைக் கொண்டுவந்து போசனத்துக்கு வேண்டுமவைகளைக் கூட்டுதல் துன்பமும் முதலிய பல துன்பங்களாலும் நாடோறும் வருந்துவர்.

எல்லா நன்மையும் உடையவராயினும், பொருளில்லாதவரை அவருடைய தாய் தந்தை மனைவி மைந்தர் முதலாயினவரும் அவமதிப்பர். ஒரு நன்மையும் இல்லாதவராயினும், பொருளுடையவரை அவர் பகைவரும் நன்கு மதிப்பர். வறியவரிடத்தே தாம் கொள்வதில்லாமை யன்றிக் கொடுப்பதுண்டாதலும் உடைமையால், அது நோக்கிச் சுற்றத்தார் யாவரும் கைவிடுவர்.

கல்வியும், தருமமும், இன்பமும், கீர்த்தியும், மனிதருள்ளே பெருமையும், உறவும், நினைத்தது முடித்தலும், வென்றியுமாகிய எல்லாம் செல்வமுடையவருக்கே உண்டு. செல்வமில்லாதவர் உலகத்திலே நடைப்பிணமாவார். ஆதலினால், யாவரும் செல்வத்தை இடையறா முயற்சி யோடு வருந்திச் சம்பாதித்தல் வேண்டும்.

பொருள் சம்பாதிக்கு நெறிகளாவன வித்தை கற்பித்தல், உயிர்க்கு உறுதி பயக்கும் நூல்களையும் உரைகளையுஞ் செய்து வெளிப்படுத்தல், வேளாண்மை, வாணிகம், இராசசேவை, சிற்பம் முதலியவைகளாம். ஞான நூலை வேதனத்தின் பொருட்டுக் கற்பிக்கலாகாது; கற்பித்தவர் நரகத்தில் வீழ்ந்து வருந்துவர்.

பொருள் சம்பாதிக்குமிடத்து, தரும நெறியாலே சம்பாதித்தல் வேண்டும். தருமநெறியால் வந்த பொருளே மேற்சொல்லிய பயன்களெல்லாவற்றையுங் கொடுக்கும். களவு, பொய்ச்சான்று சொல்லல், பொய்வழக்குப் பேசல், பொய்ப்பாத்திரம் பிறப்பித்தல், விசுவாசகாதம், பரிதானம் வாங்கல், சுங்கங்கொடாமை முதலிய பாவ நெறிகளாலே பொருள் சம்பாதிக்கலாகாது. பாவ நெறியால் வந்த பொருள் முன்செய்த புண்ணியத்தையுங் கெடுத்து, இம்மையிலே தீராத வசையையும், சந்ததி நாசத்தையும், இராச தண்டத்தையும், மறுமையிலே நரகத்துன்பத்தையும், பிறவித் துன்பத்தையும் விளைவிக்கும்.

காலந்தோறும் சம்பாதிக்கபபடும் பொருளை நான்கு பாகமாகப் பகுத்து, அவைகளுள், இரண்டு பாகத்தைத் தமது அநுபவத்துக்கு ஆக்கி, ஒரு பாகத்தை ஆஸ்தியின் பொருட்டுச் சேர்த்து, எஞ்சி நின்ற ஒரு பாகத்தைக் கொண்டே தருமஞ்செய்தல் வேண்டும். ஆஸ்தியின் பொருட்டுச் சேர்க்காது செலவிட்டவர் பின்பு வியாதியினாலேனும் கிழப் பருவத்தினாலேனும் பொருள் சம்பாதிக்கும் திறமை இல்லாத பொழுது, பெண்டிர் பிள்ளைகளோடு வருத்தமடைவர். அக்காலத்திலே பெண்டிர் பிள்ளைகளும் அவரை உபசரியாது கைவிடுவர்.

முதலிற் செலவு சுருங்கினால், பொருள் ஒரு காலத்தும் நீங்காது. முதலிற் செலவு சுருங்கக் கூடாதாயின், முதலுக் கொக்கவாயினும் செலவழித்தல் வேண்டும். எவனுக்கு முதலிற் செலவு மிகுமோ, அவன் வாழ்க்கை உள்ளது போலத் தோன்றி மெய்மையால் இல்லையாகிப் பின்பு அத்தோற்றமும் இல்லாமற் கெட்டுவிடும். வரவு செலவு கணக்கெல்லாம் அப்பொழுது அப்பொழுது சிறிதுந் தவறாமல் எழுதிக் கொள்ளல் வேண்டும். கணக்கெழுதாமல் யாதொன்றுஞ் செய்யலாகாது. மாசந்தோறும் வரவு செலவு இருப்புக் கணக்குப் பார்வையிட்டு முடித்தல் வேண்டும்.

சம்பாதிக்கப்பட்ட பொருளிலே, அநுபவத்தின் பொருட்டும் தருமத்தின் பொருட்டும் செலவிட்டதொழிய, எஞ்சி நின்றதைக் கொண்டு, தக்க பிரயோசனத்தைத் தருதற்குரிய விளைநிலம் தோட்ட முதலியவை வேண்டும். அல்லது முதற் பொருளுக்கும் வட்டிக்குங் குறைவு படாத ஈட்டையும் தகுதியாகிய சான்றினையுமுடைய பத்திரத்தையும் பெற்றுக்கொண்டு, வட்டிக்குக் கொடுத்தல் வேண்டும். கடனுடையவன் தம்மிடத்து வைத்த அசைக்கப்படு பொருளாகிய ஈட்டை, அவனுக்குக் கொடுக்குமளவும், கெடுதியும் குறைவும் விகாரமும் பயனின்மையும் உருமாற்றமும் அடையாமற் காத்தல் வேண்டும். அந்த ஈட்டைத் தாம் அநுபவித்தால் வட்டியில்லை. அநியாய வட்டியும் வட்டிக்கு வட்டியும் வாங்குதல் பெருங் கொடும்பாவம். பிராமணன் ஒரு காலத்தினும் வட்டி வாங்குதல் கூடாது. ஆபத்துக் காலத்தில் மாத்திரம் வாங்கலாம்.

தந்தை வழியாகவேனும், தாய் வழியாகவேனும் தாயினுடைய தந்தை முதலானவர்களின் வழியாகவேனும் வந்த பொருள் தாயம் எனப்படும். வித்தைக் கற்பித்தல், வேளாண்மை, வாணிகம், சிற்பம், சேவை முதலிய தொழில்களாலும் யாசனத்தாலும் அடையப்பட்ட பொருள் உடைமை எனப்படும். இவ்வுடைமைப் பொருளைத் தமதிச்சைப்படி தான முதலானவைகளாகச் செய்யலாம். பெண்ணின் பொருட்டுத் தந்தை முதலானவர்களாலே கொடுக்கப்பட்ட பொருள் சீதனம் எனப்படும். சீதனப் பொருளைக் கணவனேனும் தந்தையேனும் உடன் பிறந்தாரேனும் கொள்ளுதற்கும் கொடுத்தற்கும் உரியரல்லர்.

இத்தேசங்களிலே, பலவகைத் தொழில்கள் செய்து சீவனஞ் செய்யச் சத்தியுடையவர்களுள், அவை செய்யாது சோம்பேறிகளாய் இருந்து கொண்டு, அநேகர் நாணமின்றிப் பலரிடத்தும் சென்று யாசித்தும், அநேகர் தாயப் பொருளையே கொண்டும், அநேகர் தம்மனைவியர்களுடைய சீதனப் பொருளையே கொண்டும், அநேகர் தாவர சங்கமங்களாகிய தாயத்தையும் சீதனத்தையும் ஈடு வைத்தும், விக்கிரயஞ் செய்தும் சீவனஞ் செய்கின்றார்கள். தாவரம் - அசைக்கப்படாத பொருள். சங்கமம் - அசைக்கப்படுபொருள். அறிவும் ஆண்மையும் மானமும் உடையவர்கள் இப்படிச் செய்வார்களோ, செய்யார்கள். கூழேயாயினும் தமது தொழில் முயற்சியாலே கிடைத்தது அமிர்தமேயாகும். பருப்பு நெய் பாயசம் வடை தயிர் முதலியவற்றோடு கூடிய அன்னமேயாயினும், யாசனத்தினாலாவது, பிறருடைய தொழில் முயற்சியினாலாவது, கிடைத்தாயின், அது வி"மேயாகும். தொழில் முயற்சிகள் சுவதேசத்திலே பலிக்காவிடின், இதர தேசங்களிலாயினும் சென்று, தாமே வருந்திச் சம்பாதித்துச் சீவனஞ் செய்தலே அறிவும் ஆண்மையும் மானமும் உடையவருக்கு அழகு. இத்தேசங்களில் அநேகர் பணம் வைத்துக் கொண்டும் யாசித்துச் சீவனஞ் செய்கின்றார்கள். இவர்களுக்குப் பிக்ஷை கொடுப்பவர்கள், உண்மையை ஆராய்ந்தார்களாயின், தங்களைப் பார்க்கினும், இவர்களே செல்வமுடையவர்கள் என்று அறிவார்கள். இவர்கள் நாட்டுவேடர் எனப்படுவர்கள். பொருள் வைத்துக் கொண்டு யாசித்துப் புசித்தவர்கள் நரகத் துன்பத்தை அநுபவித்து, மறுபிறப்பிலே மாடாய்ப் பிறந்து, அன்னம் போட்டவருக்கு உழைப்பார்கள்.

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

(5) வென்றி - வெற்றி.

(11) தாயம் - முதுசொம், முதியோர் சொத்து (ஸ்வம் என்பது என்னும் வடசொல் 'சொம்' எனத் திரிந்தது).

(12) விக்கிரயஞ் செய்தல் - விற்றல்; சுவதேசம் - தன்னுடைய தேசம்; நாட்டு வேடர் - (பிறர் பொருளை வஞ்சித்துக் கவர்தலால்) வேடர்க்குச் சமானராய் நாட்டில் வசிப்போர்.

ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.