சூது
சூதாவது, கவறு சதுரங்கம் முதலியவற்றால் ஆடுதல். சூது, தருமமும் பொருளும் இன்பமுமாகிய மூன்றுக்கும் இடையூறாய் உள்ளது. சூதாட்டத்தில் வென்று பெரும் பொருள், இரையென்று மீன் விழுங்கிய தூண்டின் முள்ளைப் போலச் சூதாடுவோர் நீங்காமைக்கு இட்ட ஒரு தளையாகி மற்றைத்தொழில்களை யெல்லாங் கெடுத்துப் பின்பு துன்பத்தைத் தரும். ஆதலால், ஒருவன் தனக்குச் சூதாடுதலில் வெல்ல வல்லமை யிருந்தாலும் சூதாடலாகாது. சூதாடுவோர் ஒன்றை முன்பெற்று இன்னும் வெல்லுவோமென்னும் கருத்தால் ஆடி நூற்றை இழப்பர். அவர் பொருள் அப்படியே அழிந்து வருதலால், அப்பொருளினால் அடையதக்க தருமமும் இன்பமும் அவருக்கு இல்லை. செல்வத்தைக் கெடுத்து வறுமையைக்கொடுத்தற்றொழிலிலே தவறாமையால் சூதை மூதேவியென்பர் அறிவுடையோர்.
சூதாடலை, விரும்பினவர் வெல்லினும் தோற்பினும் ஒருபொழுதும் அச்சூதைவிடாது தங்காலத்தையும் கருத்தையும் அதிலே தானே போக்குவர். ஆதலால் ஒளியும் கல்வியும் செல்வமும் போசனமும் உடையுமாகிய ஐந்தும் அவரை அடையாவாம். சூதானது தோல்வியினாலே பொருளைக் கெடுத்துக் களவை விளைவித்து, வெற்றி பெறுவதற்காகப் பொய்யை மேற்கொள்ளப்பண்ணிய பகையை விளைவித்தலால், அருளைக் கெடுத்து, இம்மை மறுமை இரண்டினுந் துன்பத்தையே அடைவிக்கும். ஆதலினாலே, சூதானது தரித்திரத்துக்குத் தூது, பொய்க்குச் சகோதரம், களவு சண்டை முதலிய கீழ்த் தொழில்களுக்கு மாதா, சத்தியத்துக்குச் சத்துரு என்பர் அறிவுடையோர்.
குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]
(1) கவறு - சூதாடு கருவி; (சொக்கட்டான், தாயம், முதலியன ஆடும் காய்கள்). தளையாகி - கயிறு முதலியவற்றாற் கட்டப்பட்ட தடைபேஒன்று, மனத்தைக் கவர்ந்து பிணிப்பதாகி என்றபடி.
(2) ஒளி - தேக காந்தி, தேஜஸ், வசீகரமான தோற்றம். 'தூது, சகோதரம்' முதலியனவற்றுக்குத் 'தூதுபோன்றது. சகோதரம் போன்றது' என்றிங்ஙனம் கருத்தாகும்.
ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.