Monday, October 07, 2019

சகலகலாவல்லி மாலை


ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள்
இயற்றிய
சகலகலாவல்லி மாலை
கட்டளைக் கலித்துறை
வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. 2

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4

பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. 5

பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பாடி
கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6


பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே சகல கலாவல்லியே. 7

சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8

சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே. 10




பதம் பிரித்து எழுதுகையில் கீழ்கண்டவாறு அமையும்:

வெண்தா மரைக்குஅன்றி நின்பதம் தாங்கஎன் வெள்ளைஉள்ளத்
தண்தா மரைக்குத் தகாதுகொ லோசகம் ஏழும்அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான்பித் தாகஉண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. 1


நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள் வாய்பங்க யாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றும்ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே சகல கலாவல்லியே. 2

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருள்கடலில்
குளிக்கும் படிக்குஎன்று கூடும்கொ லோஉளம் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே. 3


தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்துஅருள் வாய்வட நூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர்செந் நாவில்நின்று
காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே. 4

பஞ்சுஅப்பு இதம்தரு செய்யபொற் பாதபங் கேருகம்என்
நெஞ்சத் தடத்துஅல ராததுஎன் னேநெடுந் தாள்கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன்செந் நாவும் அகமும்வெள்ளைக்
கஞ்சத்து அவிசுஒத்து இருந்தாய் சகல கலாவல்லியே. 5


பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும்யான்
எண்ணும் பொழுதுஎளிது எய்தநல் காய்எழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும்வெங் காலும்அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகல கலாவல்லியே. 6

பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும்என்பால்
கூட்டும் படிநின் கடைக்கண்நல் காய்உளம் கொண்டுதொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ஓதிமப் பேடே சகல கலாவல்லியே. 7


சொல்விற் பனமும் அவதான மும்கவி சொல்லவல்ல
நல்வித்தை யும்தந்து அடிமைகொள் வாய்நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிதுஎன்று ஒருகால மும்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே. 8

சொற்கும் பொருட்கும் உயிராம்மெய்ஞ் ஞானத்தின் தோற்றம்என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலம் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோடு அரசன்னம் நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே. 9


மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும்என்
பண்கண்ட அளவில் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடிஉண் டேனும் விளம்பில்உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலாவல்லியே. 10


பொருளை ஒட்டிப் பிரித்து எழுதுகையில் கீழ்க்கண்டவாறு அமையும்:

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம்தாங்க என்வெள்ளைஉள்ளத்
தண்தாமரைக்குத் தகாதுகொலோ? சகம்ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே! 1

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள்வாய்! பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே! கனதனக்குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே! சகலகலாவல்லியே! 2

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருட்கடலில்
குளிக்கும்படிக்கு என்றுகூடும்கொலோ? உளம்கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே! சகலகலாவல்லியே! 3


தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்! வடநூல்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே! சகலகலாவல்லியே! 4

பஞ்சுஅப்பு இதம்தரு செய்யபொற் பாத பங்கேருகம்என்
நெஞ்சத்தடத்து அலராதது என்னே? நெடும்தாள் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்து அவிசுஒத்து இருந்தாய் சகலகலாவல்லியே! 5

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே! 6

பாட்டும் பொருளும் பொருளால்பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ஓதிமப் பேடே! சகலகலாவல்லியே! 7

சொல்விற்பனமும் அவதானமும் கவிசொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமைகொள்வாய்! நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிதுஎன்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும்செல்வப் பேறே! சகலகலாவல்லியே. 8

சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம்என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத் தாயே! சகலகலா வல்லியே! 9


மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலாவல்லியே! 10

பொருள் பிரித்து, பதம் பிரித்து உதவிய திரு V.S. அனந்தநாராயணன் அவர்களுக்கு நன்றி.

சகலகலாவல்லிமாலை பிறந்த காதை

குமரகுருபரர் காசிக்குச்சென்று அங்கோர் மடத்தை நிறுவ முயன்றார். அதற்கான இடம் வேண்டும்; பொருளும் வேண்டும். அப்போது சாஜகான் தில்லி/ஆக்ராவில் முகலாய பாத்சாவாக இருந்தார். அவருடைய மூத்த மகனாகிய தாரா சிக்கோ காசி உட்பட்ட பிரதேசங்களில் பாத்சாவின் பிரதிநிதியாக ஆளுநராக இருந்தார். அவரைப் பார்த்து தமக்கு வேண்டிய உதவியையும் அனுமதியையும் குமரகுருபரர் பெறவேண்டியிருந்தது. தாரா சிக்கோவுக்குத் தமிழ் தெரியாது. குமரகுருபரருக்கு இந்துத்தானி தெரியாது. தமக்குப் பன்மொழியாற்றல் வேண்டும் என்பதால் குமரகுருபரர் சரசுவதியை வேண்டி 'சகலகலாவல்லி மாலை'யைப் பாடினார். சரசுவதியின் அருளால் அவருக்குப் பன்மொழியாற்றல் ஏற்பட்டது. தம்முடைய சித்த ஆற்றலால் ஒரு புலியை வசப்படுத்தி அதன் மீது அமர்ந்துகொண்டு தாரா சிக்கோவைக் காணச்சென்று அவருடன் இந்துத்தானியிலேயே உரையாடினார். அவருடைய விருப்பத்தை அறிந்துகொண்ட தாரா சிக்கோ மடம் கட்டிக்கொள்ள இடமும் தந்து பொருளும் கொடுத்து உதவினார். அக்காலத்தில் முகலாய சாம்ராச்சியத்தில் இந்துக்கள் கோயில் முதலானவற்றைக் கட்டுவதற்குத் தடைகள் இருந்தன. அதனால்தான் குமரகுருபரர் தாரா சிக்கோவிடம் சிறப்பு அனுமதியையும் உதவியையும் பெறவேண்டியிருந்தது. காசியில் கட்டப்பட்ட அந்த மடம் 'காசிமடம்' என்ற பெயரில் மிகவும் சிறந்து விளங்கியது.
நன்றி: அகத்தியர் குழுமம்