நாவலர் வழியில் கல்விப் பணியாற்றிய இந்து போர்ட் சு.இராசரத்தினம்
குமாரசுவாமி சோமசுந்தரம்
வட இலங்கையில் குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பிற மதகுருமார் அரச ஆதரவுடன் ஆங்கிலக் கல்வி என்னும் மோகத்தை சைவப் பெற்றோர், பிள்ளைகள் ஆகியோரில் ஏற்படுத்தி தம்பால் ஈர்த்தனர். சைவசமயமும் தமிழ் மரபுக் கல்வியும் சைவ ஆசார ஒழுக்கங்களும் எங்கே மக்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு விடுமோ என்னும் அச்சம் தோன்றலாயிற்று. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மோசமடைந்து வந்த நிலைமையைக் கண்ணுற்ற ஆறுமுகநாவலர், சைவசமய தமிழ்க் கல்விப் பண்பாட்டு மறுமலர்ச்சிக்கு வித்திட்டு அப்பணிகளுக்குத் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார்.
சைவ ஒழுக்கம், பண்பாடு பேணுமாறும், தமிழ்ப் பண்பாட்டு வாழ்க்கை முறைகளை அனுசரிக்குமாறும் மதமாற்ற நடவடிக்கைகளுக்கு இடங்கொடாதிருக்குமாறும் தமிழ் மக்களைக் கோரி முதன் முதலாக இயக்கம் நடத்திய பெருமை நாவலர் பெருமானையே சாரும்.
ஆலயங்கள் தோறும் சைவப்பிரசங்கங்கள், புராணபடனம், சைவப்பிரசாரங்கள் என்பனவற்றை மேற்கொண்டார். ஊர்கள் தோறும் பாடசாலைகள் நிறுவித் தமிழ்க் கல்வியை வழங்கும் முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுபடலானார். நாவலர் தமிழ் நாட்டிலும் சிதம்பரத்தைத் தலைமை நிலையமாகக் கொண்டு மறுமலர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளலானார்.
பழைய தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள் சிலவற்றை அச்சுவாகன மேற்றிப் பாதுகாத்தார். செய்யுள் நடையிலிருந்த பெரியபுராணம், திருவிளையாடற் புராணம் போன்ற நூல்களை வசனநடையில் எழுதிப் பதிப்பித்தார். பொதுமக்கள் கல்வி, வளர்ந்தோர் கல்விக்கு அவை உதவின.
பிரசங்கம், புராணபடனம், காவிய பாட சாலை, வசனநடையில் அமைந்த பிரசுரங்கள், பத்திரிகைகள் வாயிலாகப் பொதுமக்கள் கல்வி, வளர்ந்தோர் கல்வி வழங்க நாவலர் முயற்சிகள் மேற்கொண்டார்.
நாவலரின் கல்விப் பணிகள், சமூகப் பணிகள், சமயப் பணிகள் அனைத்தும் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களினதும் பிற மதத்தவர்களினதும் கடும் எதிர்ப்புகள், சதிமுயற்சிகளின் மத்தியிலேயே நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நாவலர் பெருமான் வண்ணார்பண்ணையில் 1848 இல் நிறுவிய சைவப்பிரகாச வித்தியாசாலை, இலங்கையில் கிறிஸ்தவ மதக்குழுவினரல்லாதோரால் அந்நியர் ஆட்சிக்காலத்தில் எழுந்த முதல் முறை சார்ந்த கல்வியை வழங்கும் வித்தியாலயமாகும். இலங்கையில் அத்தகைய பல கல்லூரிகள் தோன்றுவதற்கு முன்னோடியாக விளங்கியது.
நாவலரைத் தொடர்ந்து அவர் காட்டிய பாதையில் சைவப்பிள்ளைகள் சைவச் சூழலில் சைவப்பண்பாடு பேணி ஆரம்ப இடைநிலைக் கல்வியைக் கற்றுக்கொள்ள வாய்ப்பாக சைவபரிபாலனசபை , இந்துக்கல்லூரி சபை, சைவவித்தியா விருத்திச்சங்கம் என்பன கல்லூரிகளையும் பாடசாலைகளையும் நிறுவி நடத்திவரலாயின. சைவக்கல்வி வளர்ச்சிக்கு நாவலர் வழிநின்று சேர்.பொன்.இராமநாதன் ஆற்றிய பணிகள் மகத்தானவை.
நாவலர் பரம்பரையினரால் 1888 இல் ஆரம்பிக்கப்பட்டது யாழ்ப்பாணம் சைவபரிபாலனசபை. அதன் முயற்சியால் 1889 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி நிறுவப்பட்டது. தொடர்ந்து கொக்குவில், உரும்பிராய், காரைநகர், சாவகச்சேரி, மானிப்பாய் ஆதியாம் இடங்களில் இந்துக்கல்லூரிகள் எழுந்தன. அவற்றை முகாமைத்துவம் செய்ய இந்துக்கல்லூரி சபை தோற்றுவிக்கப்பட்டது. குடாநாட்டின் பல பாகங்களிலும் தனியார் முயற்சியினால் நாவலர் நெறிப்படி இந்துக்கல்லூரிகள் தோன்றின. அவை இடைநிலைக்கல்வியை சைவசமயச் சூழலில் ஆங்கில மொழிமூலம் மாணவர் கற்க வாய்ப்பளித்தன. கிறிஸ்தவ மதக் குழுவினரின் கல்லூரிகளுக்கு இந்துக் கல்லூரிகள் கல்வித் தரத்திலும் மாணவர் தொகையிலும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் சவாலாக விளங்கின. நாவலர் பெருமானின் இலட்சியம் நிறைவு எய்தியது எனலாம்.
ஊர்கள் தோறும் சைவப் பாடசாலைகளை நிறுவுதல், சைவச் சூழலைப் பேணுதல், சைவத் தமிழ்க் கல்வியை சைவப் பிள்ளைகளுக்கு வழங்குதல், மதமாற்றத்தைத் தடுத்தல் போன்ற சைவ மறுமலர்ச்சிப் பணிகளை நாவலர் பெருமான் விட்டுச்சென்ற இடத்திலிருந்து முன்னெடுத்துச் செல்லும் நோக்குடன், 1923 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சைவ வித்தியா விருத்திச்சங்கம் நிறுவப்பட்டது. இதற்கு முன்னின்று உழைத்தவர்களில் சேர். பொன்னம்பலம் இராமநாதன், சு.இராசரத்தினம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
1884 ஆம் ஆண்டில் பிறந்த சைவக்காவலர் சு.இராசரத்தினம் சைவ வித்தியா விருத்திச்சங்கத்தின் முகாமையாளராகவும் செயலாளராகவும் அதன் ஆரம்பகாலத்திலிருந்து நீண்டகாலம் அரும்பணியாற்றியவர். சட்ட வல்லுநராக விளங்கிய அவர், தேடிவந்த உயர் பதவிகளையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு முழுநேர ஊழியராக, சைவ வித்தியா விருத்திச்சங்கத்துடன் (இந்துப்போர்ட்) ஒன்றித்துவிட்டவர். "நாவலர்' என்றால் நல்லைநகர் ஆறுமுக நாவலரையே குறிப்பதுபோல், "இந்து போர்ட்' என்றால் சு.இராசரத்தினத்தையே குறிப்பதாக அமைந்தது. அந்த அளவிற்கு அவர் தமது உடல், பொருள், ஆவி,பதவி அனைத்தையும் அர்ப்பணித்துச் சைவப் பணியாற்றியவர். அவருக்குப் பக்கபலமாக நிர்வாக உதவியாளர் கந்தப்ப சேகரமும் கணக்காளர் அப்புத்துரையும் ஆற்றிய சேவை வியந்து போற்றுதற்குரியது.
தமிழ் மொழிமூல ஆரம்பக் கல்வி மற்றும் இடைநிலைக் கல்வியைச் சைவப்பிள்ளைகள் சைவசமயச் சூழலில் சைவத் தமிழ்ப் பண்பாடு பேணிக் கற்க வாய்ப்பளிக்கும் வகையில் சைவ வித்தியா விருத்திச்சங்கம் நிறுவிய பாடசாலைகளும் நிர்வாகித்த பாடசாலைகளும் விளங்கின. சிறந்த சைவ ஆசிரியர்களை உருவாக்கும் பொருட்டு சு. இராசரத்தினத்தின் பெருமுயற்சியால் திருநெல்வேலியில் சைவாசிரிய கலாசாலை நிறுவப்பட்டது. அதிபர் மயிலிட்டி சுவாமிநாதன் , உப அதிபர் பொ. கைலாசபதி, தமிழ்ப் பேராசிரியர் பண்டிதமணி, சி.கணபதிப்பிள்ளை ஆகியோர் ஆசிரியகலாசாலையை அணி செய்தனர். அவர்களால் புடம் போடப்பட்டுப் பாடசாலைகளுக்கு அனுப்பப்பட்ட நல்லாசிரியர்கள் சைவத் தமிழ்ப் பண்பாட்டுத் தூதுவர்களாக நாடெங்கிலும் விளங்கினர். அவர்களின் நடை, உடை, பாவனை, போதனை, போக்கு, வாக்கு, எண்ணம், சொல், செயல், வாழ்க்கைமுறை யாவற்றிலும் சைவத் தமிழ்ப்பண்பாட்டு மணம் கமழ்ந்தது. சைவ மறுமலர்ச்சிக்கு அவ்வாசிரியர்களின் பங்கு மகத்தானது.
"தானத்தில் சிறந்தது வித்தியாதானம்' , "தருமத்தில் சிறந்த தருமம் பாடசாலைகளை ஸ்தாபித்தல்' என்பார் நாவலர் பெருமான். இக்கூற்றுகளை அனுசரித்துச் செயலாற்றியவர் சு. இராசரத்தினம் . இலங்கைச் சட்டசபை உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் அவர் சைவப்பாடசாலைகளின் விருத்தி, கல்விச் சட்டங்களை ஆக்குதல், உதவி நன்கொடை , ஆசிரியர் விருத்தி மற்றும் நியமனம் போன்ற பல விடயங்களில் தகுந்த ஆலோசனைகளை வழங்கி நெறிப்படுத்தினார்.
சாதிப்பாகுபாடின்றி சைவப்பிள்ளைகளைப் பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென்றும் அவர்களுக்கு சாதி அடிப்படையில் சம ஆசனம், சமபோசனம் மறுக்கப்படக்கூடாதென்றும் சு. இராசரத்தினம் தமது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் சகல பாடசாலை அதிபர்களுக்கும் சுற்று நிருபம் அனுப்பி அதனை அமுல்படுத்துவதிலும் உறுதியாக இருந்தார்.
சமூகத்தின் அடிமட்டத்தில் பின்தங்கிய நிலையில், வாழ்ந்த மக்களும் ஆதரவற்றுக் காணப்பட்ட தாய், தந்தையரை இழந்த சைவப்பிள்ளைகளும் அக்காலத்தில் மதமாற்றத்திற்கு உள்ளாக்கும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. கல்வி வழங்குதல், விடுதி வசதிகள் செய்து கொடுத்தல், உத்தியோகம் அரசாங்கத்தில் பெற்றுக்கொடுத்தல், சமூக அங்கீகாரம் பெறுதல் என்னும் போர்வையில் அம் முயற்சிகள் இடம்பெற்றன. பெரியார் சு. இராசரத்தினம் அவற்றைத் தடுக்கும் முயற்யில் ஈடுபட்டார். 1930 இல் ஆண்களுக்கும் பெண்களுக்குமான இரு அநாதை விடுதிகளும் கல்வி கற்பதற்கு பாடசாலை வசதிகளும் உருப்பெற்றன. அவை இன்றும் திறம்பட நடத்தப்பட்டு வருகின்றன. சாதி, குலம், சமூக நிலை என்பவற்றிற்கு அப்பால் மனிதாபிமானம், மனிதர்மம் என்ற அடிப்படையில் சிந்தித்துச் செயலாற்றிய பெருந்தகை பெரியார் இராசரத்தினம் ஆவார்.
பிற்பட்ட சமூகத்தினரென அக்காலத்தில் கருதப்பட்டவர்களின் பிள்ளைகள் கல்வி கற்பதற்கு ஏற்ற வசதிகளையும் பலத்த எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாது தமது முகாமையின் கீழ் இருந்த சைவப் பாடசாலைகளில் செய்து கொடுத்தமை இராசரத்தினத்தின் சாதனையாகும். ஒரு காந்தீயவாதியாகவும் சமூகச் சீர்திருத்தவாதியாகவும் தர்ம வீரராகவும் காட்சி தருகிறார். "சரி' என்று தன்மனதில் பட்டதை எவ்விதத்திலும் செய்துமுடிக்கும் சாதனையாளர். அரசாங்கம் இயற்றும் கல்விச் சட்டங்களிலும் சுற்று நிருபங்களிலும் விதிவிலக்குகளைக் கண்டுபிடித்து தமக்குச் சாதகமாக்கிப் பாடசாலைகளின் நன்மைக்காகப் பயன்படுத்தும் வல்லமை பெற்றவர். அதனால், சட்டங்களுக்குத் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டிய நிர்ப்பந்தம் ஆங்கிலேய அரசுக்கு ஏற்பட்டமை பற்றிக் கூறப்படுகிறது. பெரும் விவேகியாகவும் சிறந்த சாதுரியம் படைத்த முகாமையாளராகவும் ஆளுமை நிறைந்தவராகவும் பெரியார் இராசரத்தினம் விளங்கினார்.
1957 ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் ஒருநாள் பெரியார் இராசரத்தினம் என்னை வந்து தம்மைத் தமது அலுவலகத்தில் சந்திக்குமாறு எம்மூர்ப் பெரியார் வை. விநாயகமூர்த்தி மூலம் செய்தி அனுப்பியிருந்தார். புவியியல் பட்டதாரியாகப் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறி வேலை தேடும் படலத்தில் நான் ஈடுபட்டிருந்த வேளையில் கிடைத்த அச்செய்தி எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. மறுநாள் காலை சைவப்பெருமகனார் இராசரத்தினத்தை அவரது யாழ்ப்பாண அலுவலகத்தில் சந்தித்து என்னை அறிமுகம் செய்தேன். புன்னகையுடன் என்னை வரவேற்று "செங்குந்தா இந்துக்கல்லூரிக்குப் புவியியல் ஆசிரியராக இன்று முதல் உம்மை நியமித்துள்ளேன். வாரும் கொண்டுபோய் விடுறன்' என்று சொல்லவும், அவருடைய கார் வந்து நிற்கவும் நேரம் சரியாக இருந்தது. என்னைப் பற்றிய தகவல்களை ஏற்கனவே அறிந்து வைத்திருந்தார் என்பது தெரிந்தது. சிறிது நேரத்தில் செங்குந்தா இந்துக் கல்லூரி வாயிலில் கார் போய் நின்றது. அங்கு அதிபர் நா. கணபதிப்பிள்ளை எங்களை வரவேற்றார். என்னை அதிபருக்கு அறிமுகம்செய்த பெரியார் இராசரத்தினம், "இவர் புவியியல் பட்டதாரி, நீர் தேடிக் கொண்டிருந்த ஆள் கிடைத்துவிட்டார். சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும்' என்று கூறிவிட்டு, என்னிடம் "கடமையைச் சரியாகச் செய்து நீர் நல்ல ஆசிரியராகப் பேர் எடுக்க வேண்டும்' என்றவர் "நீர் முத்துத்தம்பி விடுதியில் தங்கலாம்' என்றும் கூறினார். தமது புன்னைகையால் என்னை ஆசீர்வதித்தார். அவரது வாழ்த்துக்கள் என்னைக் கல்விப் பணிப்பாளர் வரை உயர்த்தியது. அன்னாரின் 125 ஆவது ஜனன தினமாகிய இன்று எனது வணக்கமும் அஞ்சலியும் என்றென்றும் அவருக்கு உரித்தாகுக.
நன்றி: தினக்குரல் சூலை 4, 2009
Saturday, July 04, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment