Sunday, July 01, 2007

பெரியபுராணம் - எறிபத்த நாயனார் புராணம்

திருத்தொண்டர் புராணம்
என்று வழங்குகின்ற
பெரியபுராணம்
யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
கத்தியரூபமாக செய்தது


இரண்டாவது இலைமலிந்த சருக்கம்
எறிபத்த நாயனார் புராணம்


திருமருவு கருவூரா னிலையார் சாத்துஞ்

சிவகாமி யார்மலரைச் சிறந்த யானை

யானெறியோ நெறிபத்தர் பாக ரோடு

மறவெறிய வென்னுயிரு மகற்றீ ரென்று

புரவலனார் கொடுத்தபடை யன்பால் வாங்கிப்

புரிந்தரிவான் புகவெழுத்த புனித வாக்காற்

கரியினுடன் விழுந்தாரு மெழுந்தார் தாமுங்

கணநாத ரதுகாவல் கைக்கொண் டாரே.கொங்கதேசத்திலே, இராஜதானியாகிய கருவூரிலே, ஆனிலை என்னும் ஆலயத்தில் வீற்றிருக்கின்ற பரமசிவனை வழிபடுகின்றவரும், அவருடைய அடியார்களுக்குத் திருத்தொண்டு செய்கின்றவரும், அவ்வடியார்களுக்கு ஆபத்து வந்த காலத்தில் வெளிப்பட்டு அவாபத்துக்குக் காரணராயிருந்தவர்களை மழுவினால் வெட்டுகின்றவருமாகிய எறிபத்தநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார்.

அவர்காலத்திலே சிவகாமியாண்டார் என்கின்ற ஒரு பெரியவரும் தினந்தோறும் புஷ்பங்கொய்து திருமாலை கட்டி, அவ்வானிலையில் வீற்றிருக்கும் கடவுளுக்குச் சாத்திவந்தார்.

ஒருநாள் முன்போல வைகறையிலே எழுந்து போய், ஸ்நானஞ் செய்து வாயை, வஸ்திரத்தினாலே கட்டி, திருநந்தவனத்துக்குப் போய், புஷ்பங்களை அலருஞ்சமயத்திலே கொய்து திருப்பூங் கூடையை நிறைத்து, கையிலே தண்டை ஏந்தி, சுவாமிக்குத் திருப்பள்ளித்தாமங்கட்டிச் சாத்தும் பொருட்டு அந்தச் சிவாலயத்தை நோக்கி சீக்கிரம் நடந்தார். நடக்கும்பொழுது, அந்நகரிலிருக்கின்ற அரசராகிய புகழ்ச்சோழநாயனாருடைய பட்டவர்த்தன யானையானது, மகாநவமியின் முதனாளாகிய அந்நாளிலே, காவேரியிலே முழுகி மிக அலங்கரிக்கப்பட்டு, குத்துக்கோற்காரர் முன்னே ஓட, தன்மேலேறிய பாகர்களோடும் ஒருவீதியிலே விரைவாகச் சென்று, தனக்கு முன்னே செல்லும் சிவகாமியாண்டாரைப் பின்றொடர்ந்தோடி, அவர் கையிலே தாங்கிய தண்டிலே தூங்குகின்ற திருப்பூங்கூடையைப் பறித்துச் சிதறியது, அந்த யானையின்மேல் இருக்கின்ற பாகர்கள் அதைக் கண்டு, சீக்கிரம் அதைச் செலுத்திக் கொண்டு போக; சிவகாமியாண்டார் பதைப்பதைத்துக் கோபித்து, அந்த யானையைத் தண்டினால் அடிக்கும்படி அதற்கு பின்னே போனார். யானை அவர் சமீபிக்கவொட்டாத மகாகதி கொண்டு சென்றது.

சிவகாமியாண்டார் வயோதிகரானபடியால், அந்த யானைக்குப்பின் விரைந்து செல்லச் சத்தியில்லாதவராகி தவறிவிழுந்து, நிலத்திலே கைகளை மோதி எழுந்து நின்று, அதிதுக்கங் கொண்டு "தேவரீருக்குச் சாத்தும்படி கொண்டுவந்த பூவை யானையா சிந்துகின்றது. சிவதா சிவதா" என்று சொல்லி ஓலமிட்டார். அதை எதிரே வந்த எறிபத்தநாயனார் கேட்டு, மிகக்கோபித்து மழுவை எடுத்துக் கொண்டு ஓடி வந்து, சிவகாமியண்டாரைக் கண்டு வணங்கி "உமக்கு இந்தத் துன்பத்தைச் செய்த யானை எங்கே போய் விட்டது" என்று கேட்க, அவர் "சுவாமிக்குச் சாத்தும்படி நான் கொண்டுவந்த பூவைப் பறித்துச் சிந்திவிட்டு இந்த தெருவழியே தான் போகின்றது" என்றார்.

உடனே எறிபத்தநாயனார் அதிக கோபங்கொண்டு அதிசீக்கிரம் ஓடிப் போய் யானையைச் சமீபித்து, மழுவை வீசி அதன்மேலே பாய்ந்தார். பாயவும் யானை கோபித்து எறிபத்தநாயனார் மேலே திரும்ப எறிபத்தநாயனார் சற்றும் அஞ்சாமல் அதைத் தடுத்து, அதினுடைய துதிக்கையைத் துணிந்தார். அப்பொழுது, யானைக் கதறிக் கீழே விழுந்து புரண்டது. பின்பு எறிபத்த நாயனார் அதற்கு முன்னோடும் குத்துக்கோற்காரர் மூவரும் அதன் மேல் ஏறியிருந்த பாகர்கள் இருவரும் ஆகிய ஐவரைக் கொன்று நின்றார்.

அந்த ஐவரை ஒழிந்த மற்றவர்கள் ஓடிப்போய், புகழ்ச்சோழ நாயனாருடைய வாயிற்காவலாளரை நோக்கி, "பட்டவர்த்தனயானையையும் பாகர்கள் சிலரையும் சிலர் கொன்று போட்டார்கள்; இதை மகாராஜாவுக்கு விண்ணப்பஞ்செய்யுங்கள்" என்று சொன்னார்கள்.

உடனே வாயிற் காவலாளர்கள் அரசரிடத்திலே போய், அவரை வணங்கி, அந்தச் சமாசாரத்தைத் தெரிவித்தார்கள். அரசர் அதைக் கேட்ட மாத்திரத்தே அளவிறந்த கோபங்கொண்டு புறப்பட்டு, குதிரையில் ஏறி, சதுரங்க சேனைகளோடும் விரைந்து சென்று, யானையும் பாகரும் இறந்த போர்க்களத்தை அடைந்து, அங்கே நின்ற சிவவேடந்தரித்த எறிபத்தநாயனாரை மாத்திரம் கண்டு, யானையைக்கொன்றவர் அவர் என்பதை அறியாதவராகி, "யானையைக் கொன்றவர் யாவர்" என்று கேட்டார்.

பாகர்கள் சமீபத்திலே போய் வணங்கி நின்று, "மழுவைத் தரித்துக்கொண்டு இவ்விடத்தில் நிற்கின்றவரே யானையைக் கொன்றவர்" என்றார்கள். அப்பொழுது புகழ்ச்சோழநாயனார் "இவர் சிவபத்தராகையால் அந்த யானை குற்றஞ்செய்தாலன்றி அதைக் கொல்லார். அது யாதோ குற்றஞ்செய்தது போலும்" என்று நினைந்து, தம்முடைய சேனைகளை அவ்விடத்துக்கு வரவொட்டாமல் நிறுத்தி, குதிரையினின்றும் இறங்கி, "இந்த அடியவர் யானைக்கு எதிரே போன பொழுது அதினாலே இவருக்கு யாதொரு அபாயம் சம்பவியாமல் இருக்கும்படி பூர்வசன்மத்திலே தவஞ்செய்திருந்தேன். இந்தப் பெரியவர் இவ்வளவு கோபங்கொள்ளும்படி என்ன பிழை உண்டாயிற்றோ" என்று சொல்லிப் பயந்து, எறிபத்தநாயனார் திருமுன்னே சென்று, அவரை வணங்கி நின்று, "சுவாமீ! தேவரீரே இந்த யானையைக் கொன்றீரென்பதைத் தமியேன் முன்னறிந்திலேன். அது நிற்க. இந்தயானை செய்த குற்றத்தின் பொருட்டு இதனைப் பாகரோடும் கொன்றதுமாத்திரம் போதுமா? சொல்லி யருளும்" என்றார்.

எறிபத்தநாயனார் புகழ்ச்சோழநாயனாரை நோக்கி, "சிவகாமியாண்டார் சுவாமிக்குச் சாத்தும்படி கொண்டு வந்த பூவை இந்த யானை பறித்துச் சிந்தினதினால், நான் இதைக் கொன்றேன். யானை தீங்குசெய்தபொழுது குத்துக்கோற்காரரும் பாகர்களும் அதத விலக்காதபடியால், அவர்களையும் கொன்றேன். இதுவே இங்கு நிகழ்ந்த சமாசாரம்" என்றார். புகழ்ச்சோழனார் அதைக் கேட்டு பயந்து, எறிபத்த நாயனாரை வணங்கி, "சிவனடியார்க்குச் செய்த அபராதத்திற்கு இந்த யானையையும் பாகரையும் குத்துக்கோற்காரரையும் கொன்றது மாத்திரம் போதாது. அடியேனையும் கொல்ல வேண்டும். பெரும்பாவியாகிய சிறியேனைத் தேவரீருடைய திருக்கரத்திலிருக்கின்ற மங்கலம் பொருந்திய மழுவாயுதத்தினாலே கொல்வது நீதியன்று" என்று சொல்லி, உடை வாளை உறையினின்றும் உருவி, 'இதினாலே கொன்றருளும்" என்று நீட்டினார்.

எறிபத்தநாயனார் அதைக்கண்டு, அவருடைய அளவிறந்த அன்பைக்குறித்து ஆச்சரியம் அடைந்து, அவர் நீட்டியவாளை வாங்காமல் சிறிதுபொழுது தாழ்த்துநின்று, பின்பு அவர் கையிலே வாள் இருந்தால் தம்மைத் தாமே மாய்த்துக் கொள்வார் என்று நினைந்து அஞ்சி, அதை வாங்கினார். வாங்கிய எறிபத்தநாயனாரைப் புகழ்ச்சோழநாயனார் வணங்கி நின்று. "இந்தச் சிவபத்தர் தமியேனை வாளினாலே கொன்று என்குற்றத்தைத் தீர்க்கும்படி பெற்றேன்" என்றார். எறிபத்த நாயனார் அதைக் கேட்டு, மிக அஞ்சி, "பட்டவர்த்தன யானையும் பாகரும் இறந்துபோகவும் அதைக்குறித்துச் சிறிதும் துக்கியாமல் உடைவாளைத் தந்து தம்மையும் கொல்லும்படி கேட்கின்ற புகழ்ச்சோழராசாவுக்குத் தீங்கு நினைத்தேனே" என்று எண்ணி "முன்னே என்னுயிரைக் கொன்று முடிப்பதே தீர்ப்பு" என்று நினைத்து, அந்தவாளைத் தம்முடைய கழுத்திலே பூட்டி அறுக்கத் தொடங்கினார். அதுகண்ட புகழ்ச்சோழநாயனார் பயந்து நடுநடுங்கி, சீக்கிரம் எதிரே போய், அவருடைய கையையும் வாளையும் பிடித்துக்கொள்ள அவர் தம்முடைய எண்ணம் நிறைவேறாமையால் வருந்தி நின்றார்.

அப்பொழுது, அளவிறந்த அன்பினாலே அவ்விருவருக்கும் உண்டாகிய இத்துக்கத்தை நீக்கும்பொருட்டு, பரமசிவனுடைய திருவருளினாலே, "அடியார்களுடைய தொண்டை உலகத்திலே வெளிப்படுத்தும் பொருட்டு இன்றைக்கு யானை புஷ்பத்தைச் சிதறும்படி பரமசிவன் அருள்செய்தார்" என்று ஓரசரீரிவாக்கு ஆகாயத்திலே எழுந்தது.

உடனே யானையும் பாகர்களோடு எழுந்தது. அப்பொழுது எறிபத்த நாயனார் கழுத்திற்பூட்டிய வாளை விட்டுப் புகழ்ச்சோழ நாயனாருடைய பாதத்திலே விழுந்து நமஸ்கரித்தார். புகழ்ச்சோழநாயனாரும் அந்தவாளை எறிந்துவிட்டு, எறிபத்த நாயனாருடைய பாதத்திலே விழுந்து நமஸ்கரித்தார். பின் இருவரும் எழுந்து அசரீரிவாக்கைத் துதித்தார்கள். பரமசிவனுடைய திருவருளினாலே திருப்பூக்கூடையிலே முன்போலப் பூக்கள் நிறைந்திருக்க; சிவகாமியாண்டார் அதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார், பாகர்கள் பட்டவர்த்தனயானையை நடத்திக்கொண்டு புகழ்ச்சோழநாயனார் முன் வந்தார்கள்.

எறிபத்தநாயனார் புகழ்ச்சோழநாயனாரை அஞ்சலிசெய்து, "அடியேன் மகிழும்படி இந்த யானையின்மேல் ஏறிச்செல்லும்" என்று விண்ணப்பஞ் செய்ய; புகழ்ச்சோழ நாயனார் அவரை வணங்கி, யானையின்மேலேறிக் கொண்டு சேனைகளோடும் தமது திருமாளிகையை அடைந்தார். சிவகாமியாண்டார் திருப்பூங்கூடையை எடுத்துக்கொண்டு சுவாமிக்குத் திருமாலை கட்டிச் சாத்தும்படி போனார். எறிபத்த நாயனார் இப்படியே அடியார்களுக்கு இடையூறுகள் வந்த காலங்களிலே முற்பட்டு, அவைகளை நீக்கி, பத்திவலிமையிற் சிறந்தவராயிருந்து, பின்பு, திருக்கைலாசகிரியில் இருக்கின்ற சிவகணங்களுக்குத் தலைவராயினார்.


திருச்சிற்றம்பலம்
பின்னிணைப்பு:
எறிபத்த நாயனார் புராண சூசனம்

சிவனடியாருக்கு இடர் செய்தாரைக் கொல்லல்

சைவாசாரியருக்கும் சிவனடியாருக்கும் இடர் செய்தவரைக் கொல்லுதல் சிவபுண்ணியமாம். இடர் செய்தவர் பிராமணராயேனும் தபோதனராயேனும் இருப்பின், அவரைக் கொல்லாமல், பிறவழியால் வெல்லல் வேண்டும். இதற்குப் பிரமாணம், சங்கற்பநிராகரணம்; "தேசிகர்க்குத் தீங்குசெயுந் தீம்பரைவெல் லல்லதுநீ - சாசமுறு சேர்வாய் நலம்," எ-ம். "அந்தணரை மாதவரைக் கொல்லாதே வெல்லல்லார் - சிந்தவுஞ்செய் நீசெறியாய் தீங்கு." எ-ம் வரும்.
களவு, கொலை முதலியன சமயத்தாராலும் உலகத்தாராலும் குற்றம் என்று விலக்கப்பட்டன அன்றோ; அவற்றுல் ஒன்றாகிய கொலையை இங்கே புண்ணியம் என்றது என்னை எனின், அறியாது கூறினாய்; களவு என்னுஞ் சொற்கேட்டுக் கொலைதீது என்றலும், கொலை என்னுஞ் சொற்கேட்டுக் கொலைதீது என்றலும், கூடாவாம். அவை நல்லனவாதலும் உண்டு. ஒருத்தி தன் சுற்றத் தாரோடு கோபங்கொண்டு, நஞ்சுண்டு சாவேன் என்று துணிந்து, நஞ்சு கூட்டி வைத்து, விலக்குவார் இல்லாத போது உண்ண நினைந்து நின்றவழி; இரக்கமுடையவன் ஒருவன் அதனைக் கண்டு இவள் இதை உண்டு சாவா வண்ணம் கொண்டு போய் உகுப்பேன் என்று, அவள் காணாமே கொண்டு போய் உகுத்தான். அவள் சனநீக்கத்தின் கண்ணே நஞ்சுண்டு சாம்படி சென்று, அதனைக் காணாமையால், மரணம் நீங்கினாள். அவன் அக்களவினாலே அவளை உய்வித்தமையால், அது குற்றமாகாமல் அவனுக்கு நன்மை பயக்கும் அன்றோ;
அது போலவே, இக்கொலையும் நன்மை பயக்கும். சிவனடியார்களுக்கு இடர் செய்வோர் மறுமைக்கண் நரகத்தில் வீழ்ந்து வருந்துவர்; இவ்வாறு இடர் செய்வாரைக் கண்டு பிறரும் சிவனடியாருக்கு இடர் செய்து கெடுவர்; சிவனுக்குத் திருத்தொண்டு செய்ய விரும்புவோர்களுள் தீவிர பத்தியுடையோரை யொழிந்த பிறர், தாம் செய்யும் திருத்தொண்டுகளுக்கு இப்படி இடையூறுகள் நிகழுமாயின், திருத்தொண்டுகள் செய்யாது தம்வாணாளை வீணாளாகக் கழிப்பர். சிவனடியாருக்கு இடர் செய்தாரைக் கொல்லுதல் இத்தீங்குகள் எல்லாவற்றையும் ஒழிக்கும். ஆதலால், இக்கொலை பாவமாகாமல் அது செய்தாருக்குச் சிவபதம் பயக்கும் என்று துணிக.
இச்சிவபுண்ணியத்திலே மிகச் சிறப்புற்றவர் இவ்வெறிபத்த நாயனார். இவர் சிவனடியார்களுக்கு இடையூறு வந்த காலத்திலே வெளிப்பட்டு, அவ்விடையூறு செய்தவர்களை மழுவினால் வெட்டுதலே தொழிலாகக் கொண்டமையாலும், சிவகாமியாண்டார் சிவனுக்குச் சாத்தும்படி கொண்டு வந்த பூவைப் பறித்துச் சிந்திய யானை அரசனது பட்ட யானையென்பது பாராமல், அதனையும் அது தீங்கு செய்த பொழுது விலக்காத பாகர்களையும் கொன்றமையாலும், என்க. இன்னும், சிவனடியாரிடத்து மிக்க பத்தி உடையோர் என்பது, புகழ்ச்சோழநாயனாரது பத்தி மிகுதியக் கண்டவுடனே, மிக அஞ்சி, தமது யானையும் பாகரும் இறந்து போகவும் அதைக் குறித்துச் சிறிதும் துக்கம் உறாமல் உடைவாளைத் தந்து தம்மையும் கொல்லும்படி வேண்டுகின்ற இவ்வன்பருக்குத் தீங்கு நினைத்தேனே என்று அவ்வாளைத் தமது கழுத்திலே பூட்டி அறுக்கத் தொடங்கினமையாலும் தெளியப்படும்.
இரண்டாவது இலைமலிந்த சருக்கம் முற்றுப்பெற்றது

இக்கட்டுரையை தட்டச்சி எனக்கு அனுப்பி வைத்த திரு கே. திருஞான சம்பந்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
ஆறுமுக நாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.

1 comments:

said...

கனக்ஸ்,
வணக்கம்.

இப் பின்னூட்டம் உங்களின் பதிவுக்குக் கடுகளவும் தொடர்பில்லை. மன்னித்தருள்க.

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருந்தகையைப் பற்றி விரைவில் [இரண்டு கிழமைக்குள்] ஒரு பதிவு எழுத இருக்கிறேன். அவர் பற்றிய ஆய்வு முடித்து விட்டேன். இனி எழுத வேண்டியது தான் மிச்சம்.

நாவலர் பற்றி உங்களிடம் ஒரு கேள்வி. ஆட்சேபனை இல்லையெனின் தயவு செய்து உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பதில் தர முடியுமா?

நீங்கள் உங்கள் பதிவில் இணைத்திருக்கும் புகைப்படம் உண்மையில் நாவலரினது இல்லையென்றும், அது அவரை ஒத்த உருவமைப்பு உடையவர் ஒருவரின் படம் என்றும் ஒரு கருத்து நிலவுவதாகவும் ஈழத்தின் பழம் பெரும் எழுத்தாளர் ஒருவர் தனது கட்டுரையில் எழுதியிருந்தார்.
இதுபற்றி நீங்கள் ஏதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இச் செய்தி பற்றி உங்களுக்கு ஏதாவது தகவல் தெரிந்தால் தயவு செய்து தெரியப்படுத்துவீர்களா?

கனக்ஸ், உங்களின் உதவிக்கு முன் கூட்டியே என் நன்றிகள் [Thanks in advance].