Wednesday, January 17, 2007

பெரியபுராணம் - ஆனாயநாயனார் புராணம்

திருத்தொண்டர் புராணம்

என்று வழங்குகின்ற

பெரியபுராணம்

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்

கத்தியரூபமாக செய்தது

இரண்டாவது
இலைமலிந்த சருக்கம்

ஆனாயநாயனார் புராணம்

மங்கலமா மழநாட்டு மங்கலமா நகருண்
மருவுபுக ழாயனார் வளரா மேய்ப்பார்
கொங்கலர்பூந் திருக்கொன்றை மருங்கு சார்ந்து
குழலிசையி லைந்தெழுத்துங் குழைய வைத்துத்
தங்குசரா சரங்களெல்லா முருகா நிற்பத்
தம்பிரா னணைந்துசெவி தாழ்த்த வாழ்ந்து
பொங்கியவான் கருணைபுரிந் தென்று மூதப்
போதுகவென் றருளவுடன் போயி னாரே.


ழநாட்டிலே, மங்கலவூரிலே, ஆயர்குலத்திலே, சிவ பத்தியிற் சிறந்த ஆனாயர் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் தம்முடைய ஏவலாளராகிய மற்றை யிடையர்களோடும் பசுநிரைகளைக் காட்டுக்குக் கொண்டுபோய் மேய்த்துக் கொண்டும், காந்தருவ வேதத்திலே சொல்லியபடி செய்யப்பட்ட வேய்ங்குழலினாலே ஸ்ரீபஞ்சாக்ஷரத்தைச் சத்தசுரம் பொருந்த வாசித்து ஆன்மாக்களுக்குத் தம்முடைய இசையமுதத்தைச் செவித் துவாரத்தினாலே புகட்டிகொண்டும் வருவார்.

கார்காலத்திலே ஒருநாள், இடையர்கள் பசுநிரைகளைச் சூழ்ந்துகொண்டு செல்ல, அவ்வானாயநாயனார் கையிலே கோலும் வேய்ங்குழலுங் கொண்டு நிரைகாக்கும்படி காட்டுக்குச் சென்றபொழுது; அவ்விடத்திலே மாலையைப்போல நீண்ட பூங்கொத்துக்களைத் தாங்கிக்கொண்டு புறத்திலே தாழ்கின்ற சடையினையுடைய பரமசிவனைப்போல நிற்கின்ற ஒரு கொன்றைமரத்துக்குச் சமீபத்திலேபோய் அதைப் பார்த்துக்கொண்டு நின்று, அன்பினாலே உருகி இளகிய மனசையுடையவராகி, வேய்ங்குழலினாலே இசை நூலிலே விதித்தபடி ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை வாசித்தார். அவர் பஞ்சாக்ஷரத்தை அமைத்து வாசிக்கின்ற அதிமதுரமாகிய இசை வெள்ளமானது எவ்வகைப்பட்ட உயிர்களின் செவியிலும் தேவ கருவின் பூந்தேனைத் தேவாமிர்தத்தோடு கலந்து வார்த்தாற்போலப் புகுந்தது. புற்களை மேய்ந்த பசுக்கூட்டங்கள் அசைவிடாமல் அவரை அடைந்து, உருக்கத்தினாலே மெய்ம்மறந்து நின்றன; பால் குடித்துக் கொண்டு நின்ற கன்றுகளெல்லாம் குடித்தலை மறந்துவிட்டு, இசை கேட்டுக் கொண்டு நின்றன; எருதுகளும் மான் முதலாகிய காட்டுமிருகங்களும் மயிர் சிலிர்த்துக்கொண்டு அவர் சமீபத்தில் வந்தன; ஆடுகின்ற மயிற்கூட்டங்கள் ஆடுதலொழிந்து அவர் பக்கத்தை அடைந்தன; மற்றைப் பலவகைப் பட்சிகளும் தங்கள் செவித்துவாரத்தினாலே புகுந்த கீதம் நிறைந்த அகத்தோடும் அவரருகிலே வந்து நின்றன; மாடு, மேய்த்துக்கொண்டு நின்ற இடையர்களெல்லாரும் தங்கள் தொழிலை மறந்து கானத்தைக் கேட்டுக்கொண்டு நின்றார்கள்; விஞ்சையர்களும் சாரணர்களும் கின்னரர்களும் தேவர்களும் மெய்ம்மறந்து விமானங்களிலேறிக் கொண்டு வந்தார்கள்; வருத்துகின்ற உயிர்களும் வருத்தப்படுகின்ற உயிர்களும் அவ்விசையைக் கேட்டு அதன்வசமான படியால், பாம்புகள் மயங்கிப் பயமின்றி மயில்களின் மேலே விழும்; சிங்கமும் யானையும் ஒருங்கே கூடிவரும்; மான்கள் புலிகளின் பக்கத்திலே செல்லும்; மரக்கொம்புகள் தாமும் சலியாதிருந்தன.

இப்படியே சரம் அசரம் என்னும் ஆன்மவர்க்கங்களெல்லாம் ஆனாயநாயனாருடைய வேய்ங்குழல் வாசனையைக் கேட்டு, இசைமயமாயின, அவ்விசையைப் பொய்யன்புக்கு அகப்படாத பரமசிவன் கேட்டு, பார்வதிதேவியாரோடும் இடபாரூடராய் ஆகாயமார்க்கத்தில் எழுந்தருளி வந்து நின்று,

அவ்வானாயநாயனார் மீது திருவருணோக்கஞ்செய்து, "மெய்யன்பனே; நம்முடைய அடியார்கள் உன்னுடைய வேய்ங்குழலிசையைக் கேட்கும்பொருட்டு, நீ இப்பொழுது இவ்விடத்தில் நின்றபடியே நம்மிடத்துக்கு வருவாய்" என்று திருவாய்மலர்ந்தருளி, அவ்வானாயநாயனார் வேய்ங்குழல் வாசித்துக் கொண்டு பக்கத்திலே செல்லத் திருக்கைலாசத்தை அடைந்தருளினார்.

இலைமலிந்த சருக்கம் முற்றுப்பெற்றது.

பின்னிணைப்பு:

அனாயநாயனார் புராண சூசனம்

ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை வேய்ங்குழலினால் வாசித்தல்

அநாதி தொடங்கித் தம்மை வருத்தும் பிறவி நோயினின்றும் நீங்கி உய்ய விரும்புவோர்க்கு, அந்நோயை நீக்க வல்ல பரம வைத்தியராகிய சிவனை, உணர்த்தும் மந்திரம் ஸ்ரீபஞ்சாக்ஷரமேயாம். ஆதலால், இப்பஞ்சாக்ஷரத்தை, சிவன்மாட்டு இடையறாது வளரும் மெய்யன்பினால் மனம் கசிந்து ஓதுவோர் முத்தி பெறுவர். "காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி - யோது வார்தமை நன்னெறிக் குய்ப்பது - வேத நான்கினு மெய்ப்பொருளாவது - நாத னாம நமச்சிவாயவே" என்றார் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்.

சிவநாமத்தை வாளா ஓதலினும், இசை நூற்பயிற்சியின் மிக வல்லராகி, ஏழிசைகளின் முறை வழுவாது முப்பத்திரண்டு இராகங்களுள் அவ்வக்காலத்துக்கு ஏற்ற இராகத்தினோடும் வேய்ங்குழலால் வாசித்தல், தமக்கும் அதனைக் கேட்கும் பிறர்க்கும் சிவன்மாட்டு அன்பை வளரச் செய்யும். இதனாலன்றோ, சிவநாமம் கீதத்தோடு கூடுமாயின், சிவன் மிகப் பிரீதியுற்று எல்லையில்லாத திருவருளைச் சுரப்பர் என்க.

அது "விளக்கினார் பெற்ற வின்பமெழுக்கினாற் பதிற்றி - யாகுந் - துளக்கினன் மலர் தொடுத்தாற் றூயவிண் ணேற லாகும் - விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞான மாகு - மளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகடா மருளு மாறே" "இறவாமே வரம் பெற்றே னென்று மிக்க விராவணனை யிருபதுதோ ணெரியவூன்றி - யுறவாகி யின்னிசைகேட் டிரங்கி மீண்டேயுற்ற பிணி தவிர்த்தருள வல்லான் றன்னை - மறவாதார் மனத்தென்று மன்னினானை மாமதிய மலர்க்கொன்றை வன்னிமத்த - நறவார்செஞ் சடையானை நள்ளாற் றானை நானடியே னினைக்கப் பெற்றுய்ந்த வாறே" என்னும் திருநாவுக்கரசு நாயனார் தேவாரங்களானும் உணர்க.

சிவநாமங்கள் எல்லாவற்றினும் சிறந்த ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை வேய்ங்குழலினால் வாசித்துப் பெரும் பயன் பெற்றமையாற் சிறப்புற்றவர் இவ்வானாயநாயனார். சிவனது திருவடிகளையே யன்றிப் பிறிதொன்றையும் சிறிதும் பற்றாத இந்நாயனார், அத்திருவடிகளில் எல்லை இல்லாத அன்பை வளர்த்தற்குக் கருவி கீதத்தின் மிக்கது பிறிது இன்று என்னுங் கருத்தால் அன்றோ, ஸ்ரீபஞ்சாக்ஷரத்தை வேய்ங்குழலால் வாசித்தலே தொழிலாகக் கொண்டனர். அது இங்கே "தம்பெரு மானடி யன்புறு கானத்தின் - மேவு துளைக்கரு விக்குழல் வாசனை மேல் கொண்டார்" என்பதனால் உணர்த்தப்பட்டது.

இவர் "உருகி - யொன்றியசிந்தையிலன்பை யுடையவர்" ஆகி, வாசித்த இவ்வேய்ங்குழல் வாசனையானது எவ்வுயிர்களையும் இசைமயமாக்கி, கசிந்து உருகச் செய்த பெருவியப்பை இங்கே ஆசிரியர் சேக்கிழார் நாயனார் விரித்துரைத்த அருமைத் திருவாக்குக்களே எம்போலிகளுடைய கன்னெஞ்சையும் கசியச் செய்யுமாயின்; அவ்வாசனையின் பெருமையை யாமா கூறவல்லம்? இந்நாயனார் தமக்கு மாத்திரமன்றி எவ்வுயிர்க்கும் பயன்படுவதாய், நினைப்பினும் கேட்பினும் இனிமை பயக்கும் இத்திருத்தொண்டைச் சிவன்மாட்டு இடையறாது முறுகி வளரும் மெய்யன்போடு செய்தமையால் அன்றோ. "பொய்யன்புக் கெட்டாத பொற்பொதுவி னடம்புரியும்" சிவன் இவருக்கு வெளிப்பட்டு, "எப்பொழுதுஞ் - செந்நின்ற மனப்பெரியோர் திருக்குழல்வா சனைகேட்க - விந்நின்ற நிலையேநம் பாலணைவாய்" என்று திருவாய்மலர்ந் தருளினார்.


இக்கட்டுரையை தட்டச்சி எனக்கு அனுப்பி வைத்த திரு கே. திருஞான சம்பந்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

ஆறுமுக நாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.

2 comments:

said...

ஆயர்குலத் தென்றல் ஆனாயநாயன் என்போன்
நேயமிக்கோன் குழல் நேசன் - தூயசிவனாரின்
திருக்கைலாயம் சென்ற ஒருகதை கேட்டோம்
உருகியது நெஞ்சம் உவகையால்!

said...

அழகிய குறும்பா மூலம் தங்கள் உவகையைப் பகிர்ந்து கொண்ட சுப. வீர. சுப்பையா ஐயா, மிக்க நன்றிகள்.