Saturday, January 06, 2007

பெரியபுராணம் - அரிவாட்டாயநாயனார் புராணம்


திருத்தொண்டர் புராணம்

என்று வழங்குகின்ற

பெரியபுராணம்

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
கத்தியரூபமாக செய்தது

இரண்டாவது இலைமலிந்த சருக்கம்

அரிவாட்டாயநாயனார் புராணம்

தாவில்கண மங்கலத்துள் வேளான் டொன்மைத்

தாயனார் நாயனார் தமக்கே செந்நெற்

றூவரிசி யெனவிளைவ தவையே யாகத்

துறந்துணவு வடுவரிசி துளங்கு கீரை

யாவினினைந் துடன் கொணர்வார் கமரிற் சிந்த

வழிந்தரிவாள் கொண்டூட்டி யரியா முன்னே

மாவடுவி னொலியுமரன் கரமுந் தோன்றி

வாள்விலக்கி யமரர்தொழ வைத்த வன்றே.

சோழமண்டலத்திலே, கணமங்கலம் என்கின்ற ஊரிலே; வேளாளர்குலத்திலே, சிவபத்தியிற் சிறந்தவரும், இல்லறத்தை ஒழுங்காக நடத்துகின்றவரும், மிகுந்த செல்வமுள்ளவருமாகிய தாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரமசிவனுக்குச் செந்நெல்லரிசியும் செங்கீரையும் மாவடுவும் தினந்தோறுங் கொண்டுபோய், திருவமுது செய்வித்து வருவார்.

இப்படி நிகழுங்காலத்திலே, கடவுளுடைய திருவருளினால் அவருக்கு வறுமை உண்டாயிற்று. உண்டாகியும், அவர் கூலிக்கு நெல் அறுப்பவராகி, தாங்கூலியாகப் பெற்ற செந்நெலெல்லாம் சுவாமிக்குத் திருவமுது செய்வித்து, கார் நெல்லைக்கொண்டு; தாஞ்சீவனம் செய்து வந்தார்.

செய்யுநாளிலே, பரமசிவன் அவ்வூரிலிருக்கின்ற வயல்களிலுள்ள நெல்லெல்லாம் செந்நெல்லாகும்படி அருள்செய்ய; தாயனார் மனமகிழ்ந்து, நாள்தோறும் வயல்களுக்குப் போய் நெல்லறுத்து, கூலி வாங்கி, "இப்படிக் கிடைத்தது அடியேன் செய்த புண்ணியத்தால்" என்று சுவாமிக்கு மிகத் திருவமுது செய்விப்பாராயினார்.

இப்படி நடக்கின்றபடியால், நாடோறும் உணவில்லாமை பற்றி, மனைவியார் வீட்டின் பின்புறத்திலுள்ள தோட்டத்திற்குப் போய், இலைக்கறி கொய்து சமைத்து வைக்க; தாயனார் அதையுண்டு முன்போலத் தாஞ்செய்யும் திருப்பணியைச் செய்தார். செய்யுநாளிலே, தோட்டத்திலுள்ள இலைக்கறியெல்லாம் அற்றுப்போக, மனைவியார் தண்ணீர் வார்க்க, அதனைப் பானம்பண்ணி, திருப்பணியைச் செய்து வந்தார்.

இப்படிச் செய்துவருநாளிலே ஒரு நாள், முன்போலச் சுவாமிக்குத் திருவமுது செய்விக்கும் பொருட்டுச் செந்நெலரிசியும் செங்கீரையும் மாவடுவும் கூடையில் வைத்துச் சுமந்துகொண்டு போக; மனைவியார் பஞ்சகவ்வியங்கொண்டு அவருக்குப் பின்னால் நடந்தார். முன் செல்கின்ற தாயனார் பசியினாலே கால் தள்ளாடித் தவறி விழ, மனைவியார் பஞ்சகவ்வியக் கலயத்தை மூடியிருந்த கையினால் அவரை அணைத்தார். அணைத்தும், எல்லாம் கமரிலே போவதினால் பயன் யாது" என்று துக்கித்து, "இங்கே சிந்திய செந்நெல்லரிசியையும் செங்கீரையையும் மாவடுவையும் கடவுள் திருவமுது செய்தருளும் பேற்றைப் பெற்றேனில்லையே" என்று, அரிவாளினாலே தம்முடைய ஊட்டியை அரியத் தொடங்கினார்.

அப்பொழுது அவ்வடியார் தம்முடைய கழுத்தை அரிகின்ற கையைத் தடுக்கும் பொருட்டுச் சிதசித்துப் பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கின்ற பரமசிவன் உயர நீட்டிய திருக்கரமும், மாவடுவைக் கடித்தலால் உண்டாகுகின்ற விடேல் விடேல் என்னும் ஓசையும், கமரினின்றும் ஒக்க எழுந்தன. தாயனார், பரமசிவனுடைய திருக்கரம் வெளியில் வந்து அரிவாள் பிடித்த தம்முடைய கையைப் பிடித்தபொழுது, பயங்கொண்டு, முந்திய துன்பம் நீங்கி, மனம் மிகமகிழ்ந்து, அவர் தமக்குச் செய்த திருவருளை வியந்து அஞ்சலி செய்து ஸ்தோத்திரம் பண்ணிக்கொண்டு நின்றார். சிவபெருமான் இடபாரூடராய்த் தோன்றி, "நீ நம்மேல் வைத்த அன்பினாலே செய்த செய்கை நன்றாயிருக்கின்றது. நீ உன் மனைவியோடு வந்து நமது சிவலோகத்தில் வாழ்ந்திரு" என்று சொல்லி, அவர்கள் உடன் செல்ல, போயருளினார் அந்தத் தாயனாரென்பவர் "இங்கே சிந்தியவைகளைப் பரமசிவன் திருவமுதுசெய்யப் பெற்றேனில்லையே" என்று துக்கித்து, அரிவாளினாலே தமது கழுத்தை அரிதலுற்றபடியால், அவருடைய பெயர் அரிவாட்டயநாயனார் என்றாயிற்று. "

திருச்சிற்றம்பலம்
இரண்டாவது இலைமலிந்த சருக்கம் முற்றுப்பெற்றது.

பின்னிணைப்பு:

அரிவாட்டாய நாயனார் புராண சூசனம்

சிவனுக்கு அன்னம் கறி முதலியன அமுது செய்வித்தல்

சிவனுக்கு அன்னம் கறி முதலியன அமுது செய்வித்தல் மிக்க மேலாகிய சிவபுண்ணியமாம். அது, "அருத்திய வவிழி னேக மமலனை முதலோர்க் கன்பா - லிருத்திடுஞ் சிவலோ கத்தில் வருடமா யிரமு மேயப் - பொருந்தியவன்பர் தம்மைப் பொருந்திடிற் பருப்பு நெய்யு - முரைத்த வவ் வருடந் தன்னிற் றசகுண மோங்கு மாங்கே", "பொறித்தநற் கறியும் புல்கிற் றசதச குணிதம் போனந் - தரித்தசாட்டியமே யென்னிற் சததச குணமுஞ் சாரும் - பரித்தநற் கந்த பந்தஞ் சதசத குணமும்பற்று - மிரத்தநற் சாலி யன்ன மயுதமே யெண்ணி லென்றும்." "சாலியின் விசிட்ட ராச சாலியாற் சமைத்த வன்ன - மேலைய பலத்தின் மிக்க தசகுணம் விளைக்கு மீண்டுங் - கோலிய பலங்களேறுங் கொழுவிய நெய்யுங் கூடி - லேலவே கறியுங் கூடிலேற்றமுன் னிசைத்த வாறாம்" என்று சிவதருமோத்தரத்திற் கூறுமாற்றால் அறிக.

இச்சிவபுண்ணியத்தால் மிகச் சிறப்புற்றவர் இவ்வரிவாட்டாய நாயனார். இவர் தமது பெருஞ்செல்வ மெல்லாம் இழந்து, மிகக் கொடிய வறுமை எய்தியும்; கூலிக்கு நெல் அறுப்பவர் ஆகி, தாம் கூலியாகப் பெற்ற செந்நெலெல்லாம் சிவனுக்கு அமுது செய்வித்து, கார் நெல்லைக் கொண்டு தாம் சீவனம் செய்து வரும் நாளிலே; அச்சிவனது திருவருளினாலே கார்நெற் கிடையாது செந்நெல்லே கிடைப்ப, இது அடியேன் செய்த புண்ணியம் என்று, அவை எல்லாம் சிவனுக்கே அமுது செய்விப்பாராகி, தாம் இலைக்கறி உண்டு கொண்டு இருந்த பெருந்தகைமை, நினையுந்தோறும் எவ்வளவு ஆச்சரியத்தைத் தருகின்றது! இவ்விலைக் கறியும் அற்றுப்போக; ஜலபானமாத்திரம் செய்து கொண்டு இச்சிவபுண்ணியத்தை விடாது செய்தமை அதினும் மிக ஆச்சரியம் அன்றோ! இவர்தாம் சிவனுக்கு அமுது செய்விக்கும் பொருட்டுச் சுமந்து செல்லும் செந்நெல்வரிசி முதலியன தாம் பசியினாலே கால் தள்ளாடித் தவறி விழுந்தபொழுது கமரிலே சிந்தக் கண்டு, இவற்றை எம்பெருமான் அமுது செய்தருளும் பேற்றைப் பெற்றிலேனே என்று அரிவாளினாலே தமது ஊட்டியை அரிதலுற்ற ஆச்சரியம் யாவராலே சொல்லற்பாலது! இவர்தாம் இன்ப துன்பம் அடைதல், தமக்கு இச்சிவபுண்ணியம் செய்யக் கிடைத்தல் கிடையாமைகளாலன்றி, செல்வ வறுமைகளால் அன்று என்பது ஈண்டும் கூறியவாற்றாற் காண்க.

இந்நாயனார் குடும்பத்தோடு கூடி இருந்தும், தமக்கு உறவு சிவனே என்னும் மெய்யுணர்வு உடையராகி அவரது திருவடிக்கணன்றித் தமது சரீரத்தினும் உயிர்ச் சார்பு பொருட்சார்புகளினும் சிறிதும் பற்றின்றி வாசனை மாண்டு நின்ற பெருந்தன்மையினர் என்பது ஈண்டுக் கூறிய இவரது செயற்கருஞ் செய்கையினாலே பொள்ளெனப் புலப்படுகின்றது. இப்பெருந்தன்மை, "செய்யி லுகுத்த திருப்படி மாற்றதனை - யைய விதுவமுது செய்யெனவே - பையவிருந் - தூட்டி யறுப்பதற்கே யூட்டி யறுத்தவரை - நாட்டியுரை செய்வதே நாம்'.' எ-ம். "கல்லிற் கமரிற் கதிர்வாளிற் சாணையினில் - வல்லுப் பலகையினில் வாதனையைச் - சொல்லி - லகமார்க்கத் தாலவர்கண் மாற்றினர்காணையா - சகமார்க்கத் தாலன்றே தான்". எ-ம். திருக்களிற்றுப்படியாரிற் கூறுமாற்றானும் உணர்க. இவரது இடையறாத இம்மெய்யன்பினால் அன்றோ, பிரம விட்டுணுக்களும் காண்டற்கரிய பரமசிவன் கமரினின்றும் இவரது அரிவாள் பிடித்த கையைத் தடுத்தற்பொருட்டு உயர வீசிய தமது திருக்கரத்தையும் இவரது வியாகுலத்தை ஒழித்தற் பொருட்டுத் தாம் அமுது செய்தலால் ஆகும் ஓசையையும் தோற்றுவித்து, பின்னர் இடபாரூடராய் வெளிப்பட்டு, இவருக்கும், எத்துணை வறுமை எய்திய வழியும் சிறிதும் மாறுபடாது இவர் கருத்தின்வழி நின்ற மனைவியாருக்கும், முத்தி கொடுத்தருளினார். ஆதலால், சிவனது வியத்தி ஸ்தானங்களாகிய குரு லிங்க சங்கமங்களுக்கு வறுமையினும் தம்மால் இயன்றது சிறிதேனும் அன்போடு கொடுத்தல் புண்ணியமும், கொடாமை பாவமுமாம் என்பது துணிக. ஒன்றும் கிடையாதாயினும்; பச்சிலையாயினும் கிடையாததா! அதுவும் கிடையாதாயின், அவர் சந்நிதியிற் கிடக்கும் செத்தையை ஒருமையுடனே திருவலகினால் போக்குதலும், அரிதோ! அரிது அன்றே! இது "பரமன் றிருமுன் னழன்முன்னும் பரம குரவன்றிரு முன்னு - மொருமை யுறவே வறுமையினு முதவா தவருஞ் சிறிதேது - மரிது பொருடான் பச்சிலையு மரிதோ வஃது மரிதாயிற் - றிருண மதனைத் திருமுன்னே மாற்ற லரிதோ செயலாலே" எனச் சிவதருமோத்தரத்தில் கூறுமாற்றால் உணர்க.


திருச்சிற்றம்பலம்

இக்கட்டுரையை தட்டச்சி எனக்கு அனுப்பி வைத்த திரு கே. திருஞான சம்பந்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

ஆறுமுக நாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.


3 comments:

said...

அரிவாட்ட நாயனாரை அனபர்கள் எல்லாம்
அறியும்படி செயத அன்புக்கனகனார் வாழ்க!

said...

அரிவாட்ட நாயனாரை அனபர்கள் எல்லாம்
அறியும்படி செயத அன்புக்கனகனார் வாழ்க!

said...

சுப வீர சுப்பையா அவர்களே, வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.