Friday, March 24, 2006

நான்காம் பாலபாடம் - வியபிசாரம்

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
வியபிசாரம்


வியபிசாரமாவது காம மயக்கத்தினாலே தன் மனையாளல்லாத மற்றைப் பெண்களை விரும்புதல். மற்றைப் பெண்கள் என்பது கன்னியரையும் பிறன் மனைவியரையும் பொதுப் பெண்களையும் குறிக்கும். பிறன் மனையாளை விரும்புவோரிடத்தே தருமமும் புகழும் சிநேகமும் பெருமையுமாகிய நான்கும் அடையாவாம். அவரிடத்தே குடி புகுவன பாவமும் பழியும் பகையும் அச்சமுமாகிய நான்குமாம். ஒருவன் தன் மனையாளைப் பிறன் விரும்புதலை அறியும் பொழுது தன் மனம் படுந்துயரத்தைச் சிந்திப்பானாயின், தான் பிறன் மனையாளை விரும்புவானா! விரும்பானே.

பிறன் மனையாளை விரும்பாத ஆண்மையே பேராண்மை. பிறராலே 'இவன் பரதாரசகோதரன்' எனப்படுதலே பெரும்புகழ். இப்பேராண்மையை, பெரும்புகழை உடைய மகாவீரனை அவன் பகைவரும் அவன் இருக்கும் திக்கு நோக்கி வணங்குவர். இவ்வாண்மையும் புகழும் இல்லாதவரை, அவருக்குக் கீழ்ப்பட்டோராகிய மனைவியர் பிள்ளைகள் வேலைக்காரர் முதலாயினோரும், நன்கு மதியார். அச்சத்தாலும் பொருளாசையாலும், அவரெதிரே நன்குமதிப்பார் போல நடிப்பினும், தமது உள்ளத்தினும் அவரெதிரல்லாத புறத்தினும் அவமதிப்பே செய்வர். வியபிசாரஞ் செய்வோர் தாமாத்திரமன்றித் தங்கீழுள்ளாரும் வியபிசாரஞ் செய்து கெடுதற்குக் காரணராவர். ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் அவரின் மூத்தோரிடத்துஞ் செல்லும். ஒழுக்கமில்லாதார் வாய்ச்சொல் அவரின் இளையோரிடத்துஞ் செல்லாது. ஆதலினால், ஒழுக்கமில்லாதவர் பிறரைத் திருத்துதற்கும் வல்லராகார்.

தூர்த்தர்களோடு பழகுதலும், பெண்களுடைய கீதத்தைக் கேட்டலும், பெண்களுடைய நடனத்தைப் பார்த்தலும், சிற்றின்பப் பாடல்களைப் படித்தலும் கேட்டலும், பார்க்கத்தகாத படங்களையும் பிரதிமைகளையும் பார்த்தலும், பொதுப் பெண்களுடைய தெருவுக்குப் போதலும், பெண்கள் கூட்டத்திலே தனித்துப் போதலும், பெண்களோடு சூது சதுரங்கம் முதலியவை ஆடுதலும் வியபிசாரத்துக்கு ஏதுக்களாம். உயிர்க்கு உறுதி பயக்கும் நூல்களைப் படித்தல் படிப்பித்தல் கேட்டல்களிலும், கடவுளுக்குத் திருத்தொண்டுகள் செய்தலிலும், தரும வழியாகப் பொருள் சம்பாதித்தலிலுமே காலத்தைப் போக்கல்வேண்டும். வயசினாலும் நல்லறிவினாலும் நல்லொழுக்கத்தினாலும் முதிர்ந்த பெரியோரோடு கூடல் வேண்டும். சிறிது நேரமாயினும் சோம்பலாய் இருக்கலாகாது. சோம்பேறிக்கு அச்சோம்பல் வழியாகவே, தீச்சிந்தை நுழையும். அத்தீச்சிந்தை வியபிசாரத்துக்கு ஏதுவாகும்.

வியபிசாரமே கொலைகளுக்கெல்லாம் காரணம். வியபிசாரமே களவுகளுக்கெல்லாம் காரணம். வியபிசாரமே அறிவை மயக்கும் பொருள்களாகிய கள்ளு, அவின், கஞ்சா முதலியவைகளை உண்டற்குக் காரணம். வியபிசாரமே பொய் சொல்லற்குக் காரணம். வியபிசாரமே சண்டைக்குக் காரணம். வியபிசாரமே குடும்ப கலகத்திற்குக் காரணம். வியபிசாரமே வியாதிகளெல்லாவற்றிற்குங் காரணம். வியபிசாரமே திரவிய நாசத்திற்குக் காரணம். வியபிசாரமே சந்ததி நாசத்திற்குக் காரணம்.

பிறன் மனையாளைக் கூடினவர் நரகத்திலே அக்கினி மயமாகிய இருப்புப் பாவையைத் தழுவி வருந்துவர். இயமதூதர்கள் அவரை இருப்புக் குடத்தினுள்ளே புகுத்தி அதன் வாயை அடைத்து, அக்கினிமேல் வைத்து எரிப்பார்கள். அவர் சரீரத்தை உரலிலிட்டு இடிப்பார்கள்; அக்கினி மயமாகிய சிலையிலே சிதறும்படி அறைவார்கள். இருட்கிணற்றிலே விழுத்துவர்கள்; அங்கே இரத்தவெள்ளம் பெருகும்படி கிருமிகள் அவருடம்பைக் குடையும். பின்னும் அவர் அக்கினி நரகத்திலே வீழ்த்தப்பட்டு 'என் செய்தோம் என் செய்தோம்' என்று நினைந்து நினைந்து அழுங்குவர்.

பிறன் மனையாளை இச்சித்துத் தீண்டினவரை, நரகத்திலே இயமதூதர்கள் அக்கினியிற் காய்ச்சிய ஊசிகளினாலே குத்துவர்கள்; அவருடம்பிலே தாமிரத்தை உருக்கி வார்ப்பார்கள்; அவரை மற்ற நகரங்களினும் விழுத்தி வருந்துவர். பிறன் மனையாளை இச்சித்துப் பார்த்தவருக்குக் கண்களிலே அக்கினியிற் காய்ச்சிய ஊசிகளினாலே குத்தி, முற்கூறிய மற்றைத் துயரங்களையுஞ் செய்வார்கள்.

வியபிசாரஞ் செய்தவர் பிரமேகம், கிரந்தி, பகந்தரம், கல்லடைப்பு, நீரிழிவு முதலிய வியாதிகளினால் வருந்துவர். பிறன் மனையாளை இச்சித்துப் பார்த்தவர் நேத்திர ரோகங்களினால் வருந்துவர்.

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

(1) கன்னியர் - விவாகம் செய்யாத பெண்கள்; பொதுப் பெண்கள் - வேசையர்; தாசிப்பெண்கள்.

(2) ஆண்மை - வீரம்; பரதார சகோதரன் - பிறருடைய மனைவியரைத் தன் சகோதரமாக நினைத்து நடப்பவன்; (வடசொல்; பர - அந்நிய; தாரம் - மனைவி).

(3) தூர்த்தர்- காமுகர்; பிரதிமை - மண், கல், உலோகம் முதலியவற்றாற் செய்யப்பட்ட ஆண், பெண் வடிவங்கள்; தீச்சிந்தை - தீய எண்ணம்.

(4) சந்ததி நாசம் - புத்திரோற்பத்தியின்மை, கருத்தரியாமை. இப்பந்தி முழுதும் சொற்பொருட் பின்வருநிலை என்னும் அணி அமைந்து உரைச் செய்யுளாகத் திகழ்கின்றமை காண்க. வியபிசாரம் ஈண்டுக் கூறிய தீமைகளுள் ஒவ்வொன்றையேனும் சிலவற்றையேனும் பலவற்றையேனும் தன்னையுடையோர்க்கு விளைத்தலின் இவ்வாறு பிரித்துக் கூறினார்.

(5) பிரமேகம் - மர்ம ஸ்தானத்துளே இரணமுண்டாகி ஒருவகை விண்ணீரொழுகும் நோய்; கிரந்தி - தேகத்தில் துர்நீர் கட்டுப்பட்டு நின்று புடைத்தெழுந்து புண்ணுண்டாகும் நோய்; பகரந்தம் - உயிர்நிலைகளாகிய மர்ம ஸ்தானங்களில் பெருங்கட்டிகள் உண்டாகி உடைந்து புண்ணாகும் நோய்; கல்லடைப்பு - மூத்திரத்திலுள்ள உப்பு இறுகிக் கல்லின் தன்மையடைந்து சலங்கழியாமல் தடைப்படுவதால் வரும் வேதனை நோய்; நேத்திர ரோக - கண்ணில் உண்டாகும் (பலவகை) நோய்.

ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.

0 comments: