Thursday, February 16, 2006

நான்காம் பாலபாடம் - கடவுள் வழிபாடு


ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
கடவுள் வழிபாடு

ருணாநிதியாகிய கடவுள், புறத்திலே திருக்கோயிலுள்ளிருக்கும் இலிங்கம் முதலிய திருமேனியும், தமது மெய்யடியாருடைய திருவேடமும் ஆதாரமாகக் கொண்டு நின்றும், அகத்திலே உயிர் இடமாகக் கொண்டு நின்றும், இங்குள்ளவர் செய்யும் வழிபாட்டைக் கொண்டருளுவர். ஆதலால், அவரை வழிபடும் இடங்கள் இவைகளேயாம்.

கடவுள் அங்கிங்கெளாதபடி எங்கும் வியாபகமாய் நிற்பினும், இவ்விடங்களில் மாத்திரம் தயிரில் நெய்போல விளங்கி நிற்பர். மற்றையிடங்களெல்லாவற்றினும் பாலில் நெய் போல விளங்காது நிற்பர்.

கடவுளுக்குச் செய்யும் வழிபாடுகளாவன, அவரை மனசினாலே தியானித்தலும், வாக்கினாலே துதித்தலும், கைகளினாலே பூசித்தலும், கால்களினாலே வலம் வருதலும், தலையினாலே வணங்குதலும், செவிகளினாலே அவருடைய புகழைக் கேட்டலும், கண்களினாலே அவருடைய திருமேனியைத் தரிசித்தலுமாம்.

அன்பில்லாத வழிபாடு உயிரில்லாத உடம்பு போலும். அன்பாவது தன்னால் விரும்பப்பட்டவரிடத்தே தோன்றும் உள்ள நெகிழ்ச்சி. கடவுளிடத்தே அன்புடைமைக்கு அடையாளங்களாவன: அவருடைய உண்மையை நினைக்குந் தோறும் கேட்குந்தோறும் காணுந்தோறும் தன்வசமழிதலும், மயிர்க்கால்தோறுந் திவலை உண்டாகப் புளகங்கொள்ளலும், ஆனந்த அருவி பொழிதலும், விம்மலும், நாத் தழுதழுத்தலும், உரைதடுமாறலும், அவரால் விரும்பப்படுபவைகளைச் செய்தலும், வெறுக்கப்படுபவைகளைச் செய்யாதொழிதலும், அவருடைய மெய்யடியார்களைக் காணும் பொழுது கூசாது வணங்குதலும், பிறவுமாம்.

கடவுளால் விரும்பப் படுபவைகளாவன இரக்கம், வாய்மை, பொறை, அடக்கம், கொடை, தாய், தந்தை முதலிய பெரியோரை வழிபடுதல் முதலிய நன்மைகளாம். கடவுளால் வெறுக்கப்படுபவைகளாவன கொலை, புலால் உணல், களவு, கள்ளுணல், வியபிசாரம், பொய், செய்ந்நன்றி மறத்தல் முதலிய தீமைகளாம்.

ஆன்மாக்களாகிய நாம், பிறர்வயமுடையவர்களும், சிற்றறிவு சிறுதொழிலுடையவர்களுமாய், இருத்தலினாலே, நன்மை தீமைகளை உள்ளபடி அறியவும், தீமைகளை ஒழித்து நன்மைகளையே செய்யவும் வல்லே மல்லேம். ஆதலால், தம்வயமுடையவரும் முற்றறிவு உடையவரும் ஆகிய கடவுளை வணங்கி, அவருடைய திருவருள் வசப்பட்டு ஒழுகுவோமேயானால், நாம் தீமைகளினின்று நீங்கி நன்மைகளைச் செய்து தம்மை வழிபட்டு உய்யும்படி அவர் நமக்கு அருள் செய்வார்.

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

1. மெய்யடியார் - உண்மையான சிவனடியார். திருவேடம் - விபூதி, உருத்திராக்ஷம் முதலிய சிவ சின்னங்களணிந்த வடிவம். அகத்திலே - உடம்பினுள்ளே.

4. உண்மையை - இயல்பாக உள்ள பெருங்கருணைச் செயல்களை. திவலை - நீர்த்துளி, ஆனந்த அருவி - ஆனந்தக்கண்ணீர். (அருவி உவமை யாகுபெயர்). கூசாது - வெட்கப்படாமல்.

5. வாய்மை - உண்மை பேசல். அடக்கம் - மன மொழி மெய்கள் தீயவழியிற் செல்லாது அடங்குதல்.

6. முற்றறிவு - எல்லாவற்றையும் அறியும் அறிவு. முற்றுத் தொழில் - எல்லாவற்றையும் செய்யும் வல்லமை. திருவருள் வசப்பட்டு ஒழுகல் - அநுக்கிரகத்தின் துணையை வேண்டி (தற்போதமின்றி) நடத்தல். அருள் செய்வார் - இரங்கி நன்மை செய்வார்.

ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.

0 comments: