உலகமாவது சித்தும் அசித்துமென இருவகைப்படும் பிரபஞ்சமாம். சித்து அறிவுடைய பொருள். அசித்து அறிவில்லாத பொருள். அசித்தொன்றாலும், சடமொன்றாலும், பொருந்தும். உலகம் தோன்றி நின்று அழியுங் காரியமாய் உள்ளது. ஆதலினால், உலகத்தைப் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று தொழில்களையுஞ் செய்தற்கு ஒரு கடவுள் இருக்கின்றார் என்பது, நன்றாக நிச்சயிக்கப்படும்.
கடவுள் என்றும் உள்ளவர், அவருக்குப் பிறப்பும் இறப்பும் இல்லை. அவர் எங்கும் நிறைந்தவர், அவர் இல்லாத இடம் இல்லை. அவர் எல்லாம் அறிபவர், அவர் அறியாதது ஒன்றுமில்லை. அவருடைய அறிவு இயற்கையறிவு, ஒருவர் அறிவிக்க அறிபவரல்லர். அவர் எல்லாம் வல்லவர், அவரால் இயலாத கருமம் ஒன்றுமில்லை. அவர் அளவிடப்படாத ஆனந்த முடையவர், தம்முடைய அநுபவத்தின் பொருட்டு வேறொன்றையும் வேண்டுபவரல்லர். அவர் தம் வயமுடையவர், பிறர் வயமுடையவரல்லர். அவர் உயர்வும் ஒப்பும் இல்லாதவர்; அவரின் மேலானவரும் இல்லை; அவருக்குச் சமமானவரும் இல்லை. அவர் சகலலோகத்துக்கும் ஒரே நாயகர். அவர் செய்யுந் தொழில்களுள் ஒன்றாயினும் அவருடைய பிரயோசனத்தைக் குறித்த தன்று. எல்லாம் ஆன்மாக்களுடைய பிரயோசனத்தைக் குறித்தவைகள். அவர் ஆன்மாக்களிடத்துள்ள கைமாறில்லாத அளவுகடந்த திருவருளே திருமேனியாக உடையவர்.
கடவுள் ஆன்மாக்கள் பொருட்டு வேதம் ஆகமம் என்னும் முதனூல்களை அருளிச் செய்தார். அவைகளிலே விதிக்கப் பட்டவைகளெல்லாம் புண்ணியங்கள். விலக்கப்பட்டவைகளெல்லாம் பாவங்கள். அவர் புண்ணியத்தைச் செய்த ஆன்மாக்களுக்கு இன்பத்தையும், பாவத்தைச் செய்த ஆன்மாக்களுக்குத் துன்பத்தையும் கொடுப்பார். துன்பத்தைக் கொடுத்தலினால் அவரை வன்கண்ணரென்று கொள்ளலாகாது. தீமை செய்த பிள்ளைகளைப் பிதா மாதாக்கள் தண்டித்தலும், சில வியாதியாளர்களுக்கு வைத்தியர்கள் சத்திரமிட்டறுத்தலும், இருப்புக்கோல் காய்ச்சிச் சுடுதலும், கண்ணிற் படலத்தை உரித்தலும் அவர்களிடத்துள்ள இரக்கத்தினாலன்றி வன்கண்மை யினாவல்லவே. அது போலக் கடவுள் பாவஞ் செய்த ஆன்மாக்களைத் தண்டித்தல், அப்பாவத்தை ஒழித்து மேலே பாவஞ் செய்யாவண்ணம் தடுத்து அவர்களை நல்லவழியிலே செலுத்தி உய்வித்தற்கு ஏதுவாதலினால், அதுவும் கருணையேயாம்.
குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]
1. சித்து, அசித்து, சடம்: இவை வட சொற்கள்; ஜடம் என்பது சடம் எனத் திரிந்தது. சித்துப் பொருள்கள்: உயிர்கள். அசித்துப் பொருள்கள்: தனு கரண புவன போகங்கள். தனு-உடல். கரணம்-மனமும் ஐம்பொறிகளும் முதலாயின. புவனம்-ஆதாரமாகிய மண்ணுலகம் முதலாயின. போகம்-அநுபவப் பொருள்கள். முதலாம் பந்தியின் இறுதி வாக்கியங்களின் கருத்து: 'கடவுள் ஒருவர் இருக்கின்றார் என்பது கண் முதலிய புறவிந்திரியங்களால் அறியப்பட்டாலும், அனுமானப் பிரமாணத்தால் நிச்சயிக்கப்படும்' என்றபடி.
2. இயற்கையறிவு-செயற்கையாலன்றித் தாமாகவே அறியும் அறிவு. தம்வயம்-சுதந்திரம், தம்மிச்சைப்படி நடக்குந்தன்மை. பிறர்வயம்-பரதந்திரம், பிறர் எண்ணப்படி நடக்குந்தன்மை. சகல லோகம்-எல்லா வுலகம். நாயகர்-தலைவர். ஆன்மாக்கள்-உயிர்கள்; ஆத்மா என்னும் வட சொல் ஆன்மா எனத் திரிந்தது. கைம்மாறு-பதிலுதவி; கை-செயல்; மாறு-பதில்; பதிலான செயல் என்றபடி. திரு + அருள் = திருவருள்: கருணை என்று பொருள். திருமேனி-திரு-கடவுளுடைய உருவம் உறுப்பு முதலியவற்றிற்கும் அவருடைய தொடர்புடைய கோயில் குளம் முதலிய பிறபொருள்களுக்கும் உயர்வைக் குறித்து வழங்கும் அடைமொழி; திருவுருவம் (விக்கிரகம்), திருவடி, திருக்கோயில், திருக்குளம் என்பவற்றிற் போல, மேனி-உருவம், சரீரம். இப்பந்தியில் உடன்பாடும் எதிர் மறையுமா யமைந்த இணை வாக்கியங்களுக்கு பின்னவை முன்னவற்றை இனிது விளக்குதற் பொருட்டு (ஸ்பஷ்டார்த்தம்) வந்தவை என்றறிக.
3. முதல் + நூல் = முதனூல்; முதலிற் செய்யப்பட்ட நூல், ஒன்றன் வழித்தாகச் செய்யப்படாத நூல். அருளிச் செய்தார்- இயற்றினார், உபதேசித்தார், சொன்னார்; (ஈண்டு உயர்வுபற்றி ஒரு வினையை மற்றொரு வினையின் வாசகத்தாற் கூறிய இலக்கணச் சொல்). விதிக்கப்பட்டவை - செய்யதக்கன என்று கூறப்பட்டவை, விலக்கப்பட்டவை - செய்யத்தகாதவை என்று என்று கூறப்பட்டவை. வன்கண்ணர்-இரக்கமில்லாதவர்; (வன்கண்மை: பகுதி). சத்திரமிட்டு அறுத்தல்-கட்டி முதலிய நோய்களுக்குக் கத்தி முதலிய கருவி கொண்டு கீறி வைத்தியஞ் செய்தல். அண்டவாதம், வலி முதலிய நோய்களுக்கு இரும்புக்கோல் காய்ச்சிச் சூடு போடுவதுண்டு. கண்ணிற் படலம்- கருவிழியின் மேற் படர்ந்திருக்கும் ஒருவகைச் சவ்வு. உரித்தல்-கருவிகளால் வெட்டி நீக்குதல். உய்வித்தல்-நன்மை அடைவித்தல், மேல் நிலையை அடைவித்தல். ஏது-காரணம்; ஹேது என்னும் வட சொல்லின் திரிவு. இப்பந்தியின் இறுதிப் பகுதியில் வந்துள்ள 'உவமையணி' அறிந்து மகிழ்தற்குரியது.
ஆறுமுக நாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்
0 comments:
Post a Comment