Sunday, February 11, 2007

பெரியபுராணம் - அதிபத்தநாயனார் புராணம்


திருத்தொண்டர் புராணம்
என்று வழங்குகின்ற
பெரியபுராணம்

யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்
கத்தியரூபமாக செய்தது


ஏழாவதுபொய்யடிமையில்லாத புலவர் சருக்கம்

அதிபத்தநாயனார் புராணம்



அலையாருங் கடனாகை நகருள் வாழு
மதிபத்தர் பரதவர்க ளதிபர் வேலை
வலைவாரி வருமீனிற் றலைமீ னீசன்
வார்கழற்கே யென்றுவிடு மரபார் பன்னாட்
டலையான தொருமீனே சார நாளுந்
தந்தொழிலால் விடுத்துமிடி சாரச் செம்பொ
னிலையாரு மணிநயத்த மீனொன் றெய்த
நீத்தருளா லிறைவனடி நேர்ந்து ளாரே.

சோழமண்டலத்திலே, நாகப்பட்டணத்திலே, சமுத்திர தீரத்திலே உள்ள நுளைப்பாடியிலே, பரதவர் குலத்திலே, அதிபத்தநாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் பரதவர்களுக்குத் தலைவராகி, அவர்கள் வலைப்படுத்துக் குவிக்கும் மீன்குவைகளைப் பெற்றுவாழ்வார். சிவபத்தியின் மிகச் சிறந்தவராதலால், அகப்படும் மீன்களிலே ஒருதலைமீனை "இது பரமசிவனுக்கு" என்று மிகுந்த அன்பினோடு எப்பொழுதும் விட்டு வந்தார். ஒருநாளிலே ஒருமீனே வரினும் அதனைப் பரமசிவனுக்கு என்றே விடுவார்.

இப்படி ஒழுகுநாட்களிலே அடுத்தடுத்து அநேக நாட்களிலே ஒவ்வொருமீனே அகப்பட; அதனைக் கடலிலே விட்டுவந்தார். மீன்விலையினாலே மிகுஞ்செல்வம் மறுத்தமையால், தம்முடைய சுற்றத்தார்கள் உணவின்றி வருந்தவும்; தாம் வருந்தாது பட்டமீனைப் பரமசிவனுக்கு என்றே விட்டு மகிழ்ந்தார். இப்படி நெடுநாள் வர, உணவின்மையால் திருமேனி தளரவும் தம்முடைய தொழிலிலே நிலை நின்றமையைப் பரமசிவன் அறிந்து, அவரது அன்பென்னும் அமுதை உண்பாராயினார்.

இப்படி நிகழுநாளிலே, வேறு ஒருநாள் பரதவர்கள் அவ்வொரு மீனையும் அவ்வாறே விட்டு, விலைமதிப்பில்லாத மகாதிவ்யப்பிரகாசங்கொண்ட நவரத்தினங்களால் உறுப்பமைந்த அற்புதமயமாகிய ஒரு பொன்மீனை வலைப்படுத்து, கரையில் ஏறியபோது, அம்மீன் சூரியன் உதித்தாற்போல உலகமெல்லாம் வியக்கும்படி மிகப் பிரகாசிக்கக் கண்டு, அதனை எடுத்து, "ஒருமீன் படுத்தோம்" என்றார்கள். அதிபத்த நாயனார் அம்மீனைக்கண்டு,

"இது இரத்தினங்களால் உறுப்பமைந்த பொன்மீனாதலால், என்னை ஆட்கொண்டருளிய பரமசிவனுக்கு ஆகும்" என்று கடலிலே விட்டார். அப்பொழுது பரமசிவன் இடபாரூடராய் ஆகாயத்திலே தோன்றியருள;

அதிபத்தநாயனார் ஆனந்தவருவி சொரிய மனங்கசிந்துருகி நமஸ்கரித்து, சிரசின்மேலே அஞ்சலி செய்தார். சிவபெருமான் தமது உலகத்திலே அடியார்களோடு இருக்கும்படி அவருக்கு அருள்செய்தார்.

திருச்சிற்றம்பலம்.
பொய்யடிமையில்லாத புலவர் சருக்கம் முற்றுப்பெற்றது


இக்கட்டுரையை தட்டச்சி எனக்கு அனுப்பி வைத்த திரு கே. திருஞான சம்பந்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

ஆறுமுக நாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்

11 comments:

சாணக்கியன் said...

பதிவிற்கு நன்றி... சொற்களின் பொருளையும் பிரித்துக் கூறினால் இன்னும் ரசிக்கும்படியாக இருக்கும்.

SP.VR. SUBBIAH said...

பொன்மீனாலும் அவர் கண்ணில் அது முதல் மீனாகத்தான் பட்டது.ஆண்டவனுக்குத் தன் வழக்கத்தை மாற்றாமல் படைத்தார்.அச்செயலால் நெகிழ்ந்த பரமனும் அவருக்குக் காட்சி கொடுத்து ஆட்கொண்டார்.

உண்மையான பக்தியில் உள்ள நெறி
அதுதான் கனகனாரே!

சிறப்பான பதிவிற்கு நன்றி!

VSK said...

இறையருள் நாடி நிற்பவர்க்கு மற்றெதுவும் துச்சம் என்பதைக் காட்டியதால் தான் இவருக்கு பக்தர்களிலேயே தலையானவர் என்னும் பொருள் பொதிந்த 'அதி பத்தர்' எனும் பெயர் பெற்றார் போலும்!

செல்லி said...

நான் இதுவரை கேள்விப்படாத கதை.

Gold Lotto மாதிரி ஒரு மீன் வந்தும் அதையும் சிவனுக்கே இட்டார் என்றால் இது சாமான்யர்களால் முடியுமா?
இது அவர் சிவன் மீது வைத்த அளவற்ற பக்தியைக் காட்டுகிறது.
நல்லதொரு பதிவு தந்தீங்கள், நன்றி.

Anonymous said...

It is a news to me that a fisherman is one among the Nayanmars. Great Hindu Dharma! Thanks for the superb articles.
Rajesh

Kanags said...

சாணக்கியன்,
//சொற்களின் பொருளையும் பிரித்துக் கூறினால் இன்னும் ரசிக்கும்படியாக இருக்கும்.//
முயற்சிக்கிறேன். கருத்துக்கு நன்றிகள்.

Kanags said...

சுப வீர சுப்பையா,

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

Kanags said...

எஸ்கே ஐயா,
//இறையருள் நாடி நிற்பவர்க்கு மற்றெதுவும் துச்சம் என்பதைக் காட்டியதால் தான் இவருக்கு பக்தர்களிலேயே தலையானவர் என்னும் பொருள் பொதிந்த 'அதி பத்தர்' எனும் பெயர் பெற்றார் போலும்!//

சரியான பெயர் விளக்கம் தந்தீர்கள். நன்றி.

Kanags said...

செல்லி,
//நான் இதுவரை கேள்விப்படாத கதை.//

கி.பி. 700 சுந்தரமூர்த்தி நாயனார் காலம். அவருக்கு முற்பட்டவர் இந்த அதிபத்தர். "விரை திரை சூழ் கடல் நாகை அதிபத்தற்கடியேன்" என்று சுந்தரர் போற்றுகிறார். வருகைக்கு நன்றிகள்.

Kanags said...

ராஜேஷ்,
//It is a news to me that a fisherman is one among the Nayanmars. Great Hindu Dharma! Thanks for the superb articles.//

கருத்துக்கு நன்றிகள்.

Anonymous said...

மேலும் பல நாயன்மார்களின் சரித்திரத்தைப் படிக்க ஆவலாக உள்ளோம். தாருங்கள் கனக ஸ்ரீதரன் ஐயா