Friday, July 28, 2006

நாவலர் பால பாடம் - தானம்

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
தானம்


தானமாவது தருமநெறியால் வந்த பொருளைச் சற்பாத்திரமாயுள்ளவருக்குச் சிரத்தையோடு கொடுத்தல். பாவத்தால் வந்த பிறன் பொருளைக் கொடுத்தால், தருமம் பொருளுடையார் மேலும், பாவம் பொருள் கொடுத்தார் மேலும், நிற்கும். சிரத்தையெனினும், பிரீதியெனினும், ஆதரவெனிலும், பத்தியெனினும், விசுவாசமெனினும், அன்பெனினும், பற்றெனினும் பொருந்தும்.

பதிசாத்திரத்தை ஓதி அதன் பொருளை அறிந்து பாவங்களை விலக்கித் தருமங்களை அநுட்டித்துக் கடவுளை மெய்யன்போடு வழிபடுவோரும். தம்மைப்போலப் பிறரும் பரகதி பெற்று உய்யவேண்டுமென்று விரும்பி அவருக்கு நன்னெறியைப் போதிப்பவருமாயுள்ளவர் சற்பாத்திரமாவர். இந்த நன்னெறியிலே ஒழுகும் பொருட்டுச் சிரத்தையோடு முயற்சி செய்பவரும் சற்பாத்திரமாவர், குருடர், முடவர், சிறு குழந்தைகள், தரித்திரர், வியாதியாளர், வயோதிகர் என்னும் இவர்களும் தானபாத்திரமாவர். அன்னதானம் முதலியவற்றை இவர்களுக்குப் பண்ணலே தருமம்.

பதிசாத்திரத்தில் விருப்பமில்லாதோனும், நித்திய கருமத்தை விடுத்தோனும், ஈசுரநிந்தை செய்வோனும், குருநிந்தை செய்வோனும், தேவத்திரவியங் கவர்வோனும், கொலைசெய்வோனும், புலாலுண்போனும், கள்ளுண்போனும், கள்வனும், பிறருடைய மனைவியைப் புணர்வோனும், வேசையைப் புணர்வோனும், தாசியைப் புணர்வோனும், கன்னியரைக் கெடுப்போனும், இருதுமதியைத் தீண்டுவோனும், பொய்ச்சான்று சொல்வோனும், பொய் வழக்குப் பேசுவோனும், பிதாமாதாவைப் பேணாதோனும், சூதாடுவோனும், மித்திரத் துரோகியும், கோள்மூட்டுவோனும், செய்ந்நன்றி மறப்போனும், புறங் கூறுவோனும், சாத்திரத்தில் இல்லாத பொருளைப் புதிதாகப் பாடிய பாட்டினால் ஒப்பிப்போனும், வட்டிக்குக் கொடுப்போனும், தேவபூசையை விற்றுத் திரவியந் தேடுவோனும், பொன்னாசை மிகுந்து தரும வேடங்களைக் காட்டிச் சனங்களை வஞ்சிப்போனும். பொருள் வைத்துக்கொண்டு தரித்திரன்போல நடித்து யாசிப்போனும். தொழில் செய்து சீவனம் பண்ணச் சத்தியிருந்தும் அது செய்யாத சோம்பேறியும், தீச்சிந்தை நிறைந்து பொய்யுபசாரஞ் செய்து பொய் மரியாதை காட்டித் திரிவோனுமாகிய இவர்களெல்லாம் அசற்பாத்திரமாவார்கள். இவர்களுக்குத் தானம் பண்ணல் பாவம். இவர்களுக்கு இன்சொற் சொல்லலும் பாவம். கற்றோணியாலே கடலைக் கடக்க முயன்றவன் அத்தோணியோடும் அழிவதுபோலக் கல்வியறிவொழுக்கம் இல்லாத பாவிக்குத் தானங் கொடுத்தவன் அப்பாவியோடும் அழிந்து போவான்.

சற்பாத்திரமாயுள்ள பெரியோர் தம்வீட்டுக்கு வந்த பொழுது, விரைவினோடு எழுந்திருத்தல், ஓடிச்செல்லல், கண்டவுடனே 'தேவரீர் எழுந்தருளப் பெற்றேனே' என்று கொண்டாடி எதிர்கொள்ளல், ஆசனத்திருத்துதல், பாதத்தை அருச்சித்தல், 'இன்றன்றோ அடியேனுடை கிருகம் சுத்தியாயிற்று' என்று அவரை உயர்த்திப் புகழ்தல், அவர் போகும்போது பதினாறடியிற் குறையாமற் சென்று வழிவிடுதல் என்னும் இவை யேழும் தானஞ் செய்வோர் செயல்களாம். இவையில்லாமற் செய்யும் தானம் பயன்படாது.

பாத்திரங்களெல்லாவற்றினும் பரம சற்பாத்திரம் மெய்ஞ்ஞானி. அவர் ஒருவரிடத்தே சென்று 'எனக்கு இந்தப் பொருளைத் தா' என்று கேளார். அவர் எழுந்தருளியிருக்கும் இடத்திற்சென்று 'அடியேனுடைய பொருளை ஏற்றருளல் வேண்டும்' என்று பிரார்த்தித்துக் கொடுத்தல் வேண்டும். ஞானியானவர் தமக்குத் தாதாத் தரும்பொருளை அதன் மேல் ஆசையினால் வாங்கார்; தாதாப் பரகதியடைதல் வேண்டும் என்று நினைந்து வாங்குவார். அஞ்ஞானியானவன் தாதாக் கதியடைதல் வேண்டும் என்று விரும்பாது, தன்னுடைய போசனார்த்தத்தையே விரும்பி தானத்தை ஏற்பன்; ஆதலால், அஞ்ஞானி கையிலே கொடுத்தவர் தம்பொருளை அவமே போட்டு இழந்தவராவர்.

தன்னிடத்து வந்த யாசகருக்குக் கொடுத்தற்குப் பொருள் அரிதாயின், அவர் மனத்தை முகமலர்ச்சியினாலும் இன்சொல்லினாலும் குளிர்விக்கலாமே. அவையும் அரியனவோ, அல்லவே தன்னிடத்து வந்து இரந்த தரித்திரனை 'இவன் அற்பன்' என்று தள்ளிவிட்டுச் 'செல்வத்தையுடைய பெரியவன் எங்கே இருக்கின்றான்?' என்று கருதுவோன் தாதாவாகான். இவன் கொடுக்குங் கொடையெல்லாம் அவனிடத்தே தனக்கு ஒரூதியங் கருதிய செட்டாம்.

கொடை, வணக்கம், உறவு, கிருபை, பொறை என்னும் ஐந்துமுடையவனே தாதா. இவையில்லாதவன் அதாதா. அருளும் ஆதரவுமுடையவனாகிய தாதாவின் கையிலே ஏற்றவன் அந்தத் தாதாவினோடும் புண்ணிய லோகத்தை அடைவன்; அருளும் ஆதரவுமில்லாதவனாகிய அதாதாவின் ஏற்றவன் அந்த அதாதாவினோடும் நரகத்தை அடைவன்.

யாவரும் உச்சிக் காலத்திலே பசித்து வந்த ஏழைகளுக்கு இல்லை என்னாமல் முகமலர்ச்சியோடும் இன் சொல்லோடும் தம்மால் இயன்றமட்டும் அன்ன பானீயங் கொடுத்துப் புசித்தல் வேண்டும். தாம் புசிக்கும்போது ஒரு பிடியன்னமாயினுங் கொடுத்தல் ஒருவருக்கும் அரியதன்று. இது யாவருக்கும் எளிதாகும். திருமூல நாயனாருடைய அருமைத் திருவாக்கைக் கேளுங்கள்.

"யாவருக்கு மாமிறை வற்கொரு பச்சிலை

யாவர்க்கு மாம்பசு விற்கொரு வாயுறை

யாவர்க்கு மாமுண்ணும் போதொரு கைப்பிடி

யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே." (திருமந்திரம்)

பகற்காலத்தில் வந்த அதிதிக்குப் போசனங் கொடாத பாவத்தினும், இராக் காலத்தில் வந்த அதிதிக்குப் போசனங்கொடாத பாவம் எட்டு மடங்கதிகம். தயிர், பால், நெய் முதலிய உயர்ந்த பதார்த்தங்களுள் எதை அதிதிக்குப் பரிமாற வில்லையோ அதைத் தாமும் புசிக்கலாகாது. இரவிலே போசன காலத்தில் வந்தாலும், பின்பு வந்தாலும், சமயந் தப்பி போயிற்று என்று, வந்த அதிதியை அன்னங்கொடாமல் அனுப்பலாகாது. அதிதிக்கு அன்னங் கொடுக்கச் சத்தியில்லை யாயினும், படுக்கை இளைப்பாறுமிடம் தாகதீர்த்தம் பிரிய வசனம் என்னும் இவைகளாலாயினும் உபசரித்தல் வேண்டும். அதிதி புறத்திருப்பத் தாம் புசித்தவரும், பந்தி வஞ்சனை செய்தவரும் கண்டாமலை நோயினால் வருந்துவர். சூரியாஸ்தமன காலத்திலே தம் வீட்டில் வந்து சேர்ந்தவருக்கு இடம் படுக்கை முதலியவை கொடாதவர் நரகத் துன்பத்தை அனுபவித்து, மறுபிறப்பிலே தாம் கைப்பிடித்த மனைவியரை இழந்து துக்கமுற்றுத் திரிவர்.

அதிதியானவன் வேற்றூரினின்றும் வழிப்போக்கனாய் அன்ன முதலிய உதவி பெறும்பொருட்டு வருபவன். அவன் ஒரு நாளிருந்தாற்றான் அதிதி யெனப்படுவன். ஊரிலிருப்பவனையும் வேறொரு நிமித்தத்தினால் வருகிறவனையும் அன்னத்தின் பொருட்டு ஊர்தோறும் திரிகின்றவனையும் அதிதியென்று கொள்ளலாகாது.

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

(1) சற்பாத்திரம் - நல்லறிவொழுக்கங்களுடையவர்.

(2) பதிசாத்திரம் - கடவுளால் அருளிச் செய்யப்பட்ட நூல்; அவை வேத சிவாகமங்கள். இனிக் கடவுளை அறிந்து உய்தற் கேதுவாகிய நூல்களாகிய சித்தாந்த சாத்திரங்கள் போவனவுங் கொள்ளலாம். தானபாத்திரம் - தானப் பொருளைப் பெறுதற்குத் தகுதியுடையவர்.

(6) செட்டாம் - வியாபாரமாகும்.

ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.


0 comments: