Saturday, November 21, 2009

சத்யசாயி பாபாவின் அவதாரம் அனைத்து மதங்களின் ஒற்றுமைக்கு உதாரணம்



ஸ்ரீ சத்யசாயி பாபாவின் அவதாரம், அன்பான மனிதர்களை உருவாக்கி தெய்வபக்தியை உணரச் செய்து அனைவரிடத்திலும் சகோதரத்துவத்தை ஏற்படுத்துவதேயாகும். அவரது வழிநடத்தலானது தன்னலமற்ற சேவையாகும்.கைகளைத் தட்டி பஜனைகள் செய்வதைவிட கைகளை நீட்டி சேவை புரிவதையே சாயி இயக்கம் போதிக்கின்றது. தன்னலமற்ற சேவை இதயத்தை ஒளிரச் செய்கிறது. சேவை மனப்பான்மை ஒற்றுமையை வளர்க்கின்றது.


அனைத்து மதங்களையும் ஒன்றிணைத்து "அன்பே தெய்வம்" என்ற கோட்பாட்டில் அமைந்தது தான் சாயி மார்க்கம். பல மொழி, இன,மத வேறுபாடுகள் இன்றி அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் அன்பு வார்த்தை "சாயி ராம்". பகவான் ஸ்ரீசத்யசாயி பாபா எந்தவொரு புதிய மதத்தை நிறுவவோ, போதிக்கவோ முயற்சி செய்யவில்லை. உலகிலுள்ள அனைத்து மதங்களையும் அனுசரித்து "தெய்வம் ஒன்றே" என்ற அடிப்படையில் சாயி இயக்கத்தைத் தோற்றியுள்ளார். உலகில் இன்று சமூக ஒற்றுமை கிடையாது. எங்கும் மதவெறி. இனங்களுக்கிடையில் உட்பூசல்கள்.


இதுபற்றி பகவான் ஸ்ரீசத்யசாயி பாபா தனதுஉரையொன்றில், "இக்காலத்தில் சமூகத்தில் ஒற்றுமை இல்லை. வேற்றுமை கண்டுபிடிக்கும் மேதாவிகள் தான் இருக்கிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை காண்பவர்கள் கிடையாது. இதனால் தான் மதச் சண்டைகள்,சாதி பேதங்கள் உருவாகின்றன. காட்டுமிராண்டிக் குணங்கள் மனித இதயங்களில் குடிகொண்டுள்ளன. எப்போது மனிதன் வேற்றுமையில் ஒற்றுமையைக் காணத் தொடங்கிறானோ அப்போதுதான் சாந்தியும் சௌக்கியமும் கிடைக்கும். எல்லோருடைய உடலிலுள்ள இரத்தமும் ஒன்றுதான்.


எல்லோரும் ஒரே காற்றைத்தான் சுவாசிக்கின்றோம். நடமாடும் பூமியும் ஒன்றுதான். பசி வரும்போது பணக்காரன் வடை,பாயாசத்துடன் சாப்பிடுகின்றான். பரம ஏழை கேழ்வரகுக் கஞ்சி குடிக்கின்றான். தாகம் ஏற்படும் போது பணக்காரனும் ஏழையும் அதைத் தீர்த்துக் கொள்ள வெவ்வேறு பானங்களை உட்கொண்டாலும் இருவரும் அடையும் ஆனந்தம் ஒன்றுதான். துன்பம் வரும்போது துயரம் அடைவதும் ஒன்றுதான்.
வெளியில் காணப்படும் பஞ்ச பூதங்கள் அனைத்தும் உன் உடலில் உள்ளேயே எல்லாப் பகுதிகளிலும் அமைந்துள்ளன. உன்னிடம் இல்லாதது மற்றவனிடம் இல்லை. அப்படி இருக்கும்போது மற்றவரிடம் நீ ஏன் கை ஏந்த வேண்டும்? உன்னிடம் இல்லாத எதைக் கேட்கிறாய்? அனைத்தும் சமம் தான். இந்த ஒற்றுமைதான் தெய்வீகம். இதுதான் மோட்சத்தின் அடிப்படை" என்கிறார்.


மனிதப் பிறவியின் இறுதி இலட்சியம் பரமாத்மாவுடன் ஐக்கியப்பேறு பெறுவது தான். மனிதப் பிறவி புதிதாகத் தோன்றும் ஒன்றல்ல. ஏற்கனவே உள்ளதான ஒன்று பரந்து விரிந்து பரிணமிப்பதுதான் பிறவி எனப்படுகிறது. பிறவி எடுத்துப் புதுவாழ்வு ஒன்று ஆரம்பிக்கிறது. இந்த வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நீடிக்கிறது. பின்னர் மரணம் அல்லது மறைவு ஏற்படுகிறது. மரணத்தின் பின் மீண்டும் பிறவி என்பதுதான் நியதி. ஆனால், இந்த நியதியை முறியடித்து மீண்டும் பிறப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு இந்தப் பிறவியிலேயே ஆசையை அறுக்க வேண்டும். ஆசைதான் சகல துன்பங்களுக்கும் மூலகாரணமானது.

ஆசைகளை வளர்ப்பதனால் உண்மையான ஆனந்தத்தை அடைய முடியாது. பந்த பாசங்களினால் கட்டுப்பட்டு ஆசைகளை பேராசைகளாக மாற்றிக் கொள்கிறோம். எடுத்த பிறவியில் பயனைப் பெறாது அடுத்த பிறவிக்கும் எடுத்துச் செல்கிறோம். இதைத்தான் கலியுகத்தில் தோன்றிய சீரடிசாயி அவதாரமும், சத்ய சாயி அவதாரமும் எடுத்துக் கூறியுள்ளது. அதாவது, "கடந்த பிறவியிலிருந்த உறவுகளின் தொடர்புகள் அப்பிறவியிலேயே அற்றுப் போய்விட்டன. ஆனால், எமது விருப்பங்கள் ஆன்மாவோடு சேர்ந்து ஒவ்வொரு பிறப்புக்கும் கொண்டு செல்லப்படுகிறது. எனவே, உனது உறவினர்களை நினைத்துப் பெருமை கொள்ளாதே, ஆசைகளை வளர்த்துக் கொள்ளாதே, அப்போது தான் அழிவில்லாத ஆனந்தத்தை அடைவாய்". இது பகவான் ஸ்ரீசத்யசாயி பாபாவின் முன்னைய அவதாரமான சீரடிசாயி பாபாவின் அருளுரை.


"பரந்த மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுங்கள். அன்பை விரிவாக்கம்செய்பவன் மட்டுமே மனிதன் என அழைக்கப்பட முடியும். உங்களது குடும்பத்துடன் மட்டும் உங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ளாதீர்கள். ஏன் மிகவும் கீழ்மையான ஆசைகளை நோக்கி ஓடுகிறீர்கள்? பறவைகள் , மிருகங்கள் போல வாழ்க்கை நடத்த முயற்சித்து உங்களது நிலையை ஏன் தாழ்த்திக் கொள்கிறீர்கள்? இந்த ஆசைகள் தான் உங்களை இவ் உலகத்தோடு கட்டிப்போடுகின்றன. படித்தவர்கள் இவ்வாறு கீழ்த்தனமாக நடந்துகொள்வது மிகவும் வெட்கரமானது". இது இன்றைய அவதாரமாகிய பகவான் ஸ்ரீ சத்தியசாயி பாபாவின் தெய்வீக உரை.

மனித இனம் முழுவதையும் சதோதரத்துவம் என்ற பிணைப்பில் ஒரு குடும்பமாக்குவதற்கும் ஆன்மீக உண்மையினைத் துலங்க வைப்பதற்கும் சாயி பக்தர்களை பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அரவணைக்கின்றார். பல மொழி, இன, மத வேறுபாடுகளின்றி அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் அன்பு வார்த்தை தான் "சாயி ராம்" அனைத்து மதங்களையும் ஒன்றிணைத்து "அன்பே தெய்வம்" என்ற கோட்பாட்டில் அமைந்தது தான் சாயி மதம். பகவான் தன் பக்தனை நாடிப்போய் அருள்பாலிப்பது என்கிற மரபை பிரசாந்தி நிலையம் தவிர, வேறெங்கும் காண முடியாது. பணத்தின் மூலம் எதனையும் பெறலாம் என்ற வாதம் இங்கு செல்லுபடியாகாதது.அன்பு ஒன்றுதான் பிரசாந்தி நிலையத்தின் வேதவாக்கு.

பகவான் ஸ்ரீசத்யசாயி பாபா ஒரு அவதார புருஷர். இந்த நூற்றாண்டில் வாழ்ந்து வரும் மகான். புட்டபர்த்தி என்ற ஒரு சிறிய கிராமத்தை பலரும் வியக்கும் வண்ணம் புனரமைத்த நவீன சித்தர். பல்லாயிரமான பக்தர்களையும் உலக நாடுகளில் பல நூறு சாயி நிலையங்களையும் வழிநடத்திவரும் மனித தெய்வம். ஒப்பற்ற ஒரு உயர்ந்த புனித சக்தி.

எதிர்வரும் நவம்பர் 23 ஆம் திகதி பாபாவின் 84 ஆவது பிறந்த நாளாகும்.


நன்றி: தினக்குரல்