Saturday, April 29, 2006

நாவலர் பாலபாடம் - சூது

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
சூது

சூதாவது, கவறு சதுரங்கம் முதலியவற்றால் ஆடுதல். சூது, தருமமும் பொருளும் இன்பமுமாகிய மூன்றுக்கும் இடையூறாய் உள்ளது. சூதாட்டத்தில் வென்று பெரும் பொருள், இரையென்று மீன் விழுங்கிய தூண்டின் முள்ளைப் போலச் சூதாடுவோர் நீங்காமைக்கு இட்ட ஒரு தளையாகி மற்றைத்தொழில்களை யெல்லாங் கெடுத்துப் பின்பு துன்பத்தைத் தரும். ஆதலால், ஒருவன் தனக்குச் சூதாடுதலில் வெல்ல வல்லமை யிருந்தாலும் சூதாடலாகாது. சூதாடுவோர் ஒன்றை முன்பெற்று இன்னும் வெல்லுவோமென்னும் கருத்தால் ஆடி நூற்றை இழப்பர். அவர் பொருள் அப்படியே அழிந்து வருதலால், அப்பொருளினால் அடையதக்க தருமமும் இன்பமும் அவருக்கு இல்லை. செல்வத்தைக் கெடுத்து வறுமையைக்கொடுத்தற்றொழிலிலே தவறாமையால் சூதை மூதேவியென்பர் அறிவுடையோர்.

சூதாடலை, விரும்பினவர் வெல்லினும் தோற்பினும் ஒருபொழுதும் அச்சூதைவிடாது தங்காலத்தையும் கருத்தையும் அதிலே தானே போக்குவர். ஆதலால் ஒளியும் கல்வியும் செல்வமும் போசனமும் உடையுமாகிய ஐந்தும் அவரை அடையாவாம். சூதானது தோல்வியினாலே பொருளைக் கெடுத்துக் களவை விளைவித்து, வெற்றி பெறுவதற்காகப் பொய்யை மேற்கொள்ளப்பண்ணிய பகையை விளைவித்தலால், அருளைக் கெடுத்து, இம்மை மறுமை இரண்டினுந் துன்பத்தையே அடைவிக்கும். ஆதலினாலே, சூதானது தரித்திரத்துக்குத் தூது, பொய்க்குச் சகோதரம், களவு சண்டை முதலிய கீழ்த் தொழில்களுக்கு மாதா, சத்தியத்துக்குச் சத்துரு என்பர் அறிவுடையோர்.

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

(1) கவறு - சூதாடு கருவி; (சொக்கட்டான், தாயம், முதலியன ஆடும் காய்கள்). தளையாகி - கயிறு முதலியவற்றாற் கட்டப்பட்ட தடைபேஒன்று, மனத்தைக் கவர்ந்து பிணிப்பதாகி என்றபடி.

(2) ஒளி - தேக காந்தி, தேஜஸ், வசீகரமான தோற்றம். 'தூது, சகோதரம்' முதலியனவற்றுக்குத் 'தூதுபோன்றது. சகோதரம் போன்றது' என்றிங்ஙனம் கருத்தாகும்.

ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.

Sunday, April 16, 2006

நாவலர் பாலபாடம் - கோபம்

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
கோபம்

கோபத்தைச் செய்தற்குக் காரணம் ஒருவனிடத்து உண்டாயினும், அதனைச் செய்யலாகாது. கோபந்தோன்றுமாயின், மனக்கலக்கம் உண்டாகும். அது உண்டாகவே அறிவு கெடும். அது கெடவே, உயிர்கள்மேல் அருள் இல்லையாகும். அது இல்லையாகவே, அவைகளுக்குத் துன்பஞ் செய்தல் நேரிடும். ஆகையால், கோபத்தை எந்நாளும் அடக்கல் வேண்டும்.

யாவனொருவன் தம்மை இழிவாகச் சொல்லிய பொழுது தம்மிடத்து அவ்விழிவு உள்ளதாயின், " இது நமக்கு உள்ளதே" என்று தம்மைத் தாமே நொந்து திருத்தமடைதல் வேண்டும். அப்படிச் செய்யாது கோபித்தாராயின், தமது கோபம் அநீதி என்பது தமக்கே தெரியுமாதலால், தம் மனமே தம்மைக் கண்டிக்கும். தம்மிடத்து அவ்விழிவு இல்லையாயின், 'இவன் சொல்லியது பொய்; பொய்யோ நிலைபெறாது' என்று அதனைப் பொறுத்தல் வேண்டும். நாயானது தன்வாயினாற் கடித்த பொழுது மீட்டுத் தம் வாயினால் அதனைக் கடிப்பவர் இல்லை. கீழ்மக்கள் தம் வாயினால் வைதபொழுது மேன் மக்கள் மீட்டுத் தம்வாயினால் வைதபொழுது மேன் மக்கள் மீட்டுத் தம்வாயினால் அவரை வைவரோ? வையார். தமக்குப் பிறர் தீங்கு செய்தபொழுது தாம் அதனைப் பொறுப்பதேயன்றி 'இவர் நமக்குச் செய்த தீங்கினாலே எரிவாய் நரகத்தில் வீழ்வாரே' என்று இரங்குவதும் அறிவுடையவருக்குக் கடன். தன்னை வெட்டிய குடாரத்துக்கும் தனது நறுமணத்தையே கொடுக்குஞ் சந்தனமரம் போலத் தமக்குத் தீமை செய்தவருக்கும் நன்மையே செய்வது அறிவுடையோருக்கு அழகு.

வலியார்மேற் செய்யுங்கோபம் அவருக்குத் தீங்கு செய்யாமையால், அதனைத் தடுத்தவிடத்துந் தருமமில்லை. மெலியார்மேற் செய்யுங்கோபம் அவருக்குத் தீங்கு செய்தலால், அதனைத் தடுப்பதே தருமம். வலியார்மேற் செய்யுங்கோபம் இம்மையில் அவராலே துன்பமொன்றையே அடைவித்தலாலும், மெலியோர்மேற் செய்யுங்கோபம் இம்மையிலே பழியையும் மறுமையிலே பாவத்தையும் அடைவித்தலாலும், இதுவே மிகக் கொடியதாகும். ஆகவே, கோபம் ஓரிடத்தும் ஆகாதென்பதே துணிவு.

ஒருவனுக்கு அருளினால் உண்டாகும் முகமலர்ச்சியையும் மனமகிழ்ச்சியையும் கொன்று கொண்டெழுகின்ற கோபத்தின் மேற்பட்ட பகை வேறில்லை. ஆதலினாலே, தன்னைத்தான் துன்பமடையாமற் காக்க நினைத்தானாயின், தான் மனத்திலே கோபம் வாராமற் காக்கக்கடவன். காவானாயின், அக்கோபம் அவனையே இருமையினும் கடுந்துன்பங்களை அடைவிக்கும்.

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

(2) யாவனொருவன் - எவனாவது ஒருவன். 'அதனைக் கடிப்பவர் இல்லை' என்பதன்பின் 'அது போல' என்று உவமானபதம் வருவித்துரைக்க; குடாரம் - கோடரி (கோடாலி).

(4) இருமை - இருபிறவி; என்றது இப்பிறவியும் மறு பிறவியுமாகிய இரண்டினை.

Sunday, April 09, 2006

நான்காம் பாலபாடம் - அழுக்காறு

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
அழுக்காறு

ழுக்காறாவது பிறருடைய கல்வி செல்வம் முதலியவற்றைக் கண்டு பொறாமையடைதல். பொறாமை யுடையவன் தன்னுடைய துன்பத்துக்குத் தானே காரணனாகின்றான். அக்கினியினாலே பதர் எரிவதுபோலப் பொறாமையினாலே மனம் எரிகின்றது. ஆதலினாலே பொறாமையுடையவனுக்குக் கேடு விளைத்தற்கு வேறு பகைவர் வேண்டாம். அப்பொறாமை ஒன்றே போதும்.

பொறாமையுடையவனுடைய மனசிலே ஒருபோதும் இன்பமும் அமைவும் உண்டாகா. பொறாமையாகிய துர்க்குணம் மனிதனுக்கு இயல்பாகும். அது தோன்றும் பொழுதே அறிவாகிய கருவியினால் அதைக் களைந்துவிடல் வேண்டும்; களைந்துவிட்டால், அவன் மனசிலே துன்பம் நீங்க இன்பம் விளையும். பொறாமையுடையவனிடத்தே சீதேவி நீங்க, மூதேவி குடிபுகுவள். பொறாமையானது தன்னையுடையவனுக்கு இம்மையிலே செல்வத்தையும் புகழையும் கெடுத்து, எல்லாப் பாவங்களையும் விளைவித்து, அவனை மறுமையிலே நரகத்திற் செலுத்திவிடும்.

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

அழுக்காறு: 'அழுக்கறு' என்னும் பகுதியடியாகப் பிறந்த சொல்; அழுக்கறு - பொறாமைப்படு.

(1) பதர் - அரிசியாகிய உள்ளீடு அற்ற நெல்; சப்பட்டை எனவும் வழங்கும்.

(2) அமைவு - நிறைவு, திருப்தி, அமைதி, மன ஆறுதல்; துர்க்குணம் - தீயகுணம்; கருவி - ஆயுதம்; சீதேவி - இலக்குமி. செல்வம் என்பது தாற்பரியப் பொருள்.

ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.

Saturday, April 01, 2006

நான்காம் பாலபாடம் - பொய்

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
பொய்

பொய்யாவது உள்ளதை இல்லதாகவும் இல்லதை உள்ளதாகவும் சொல்லல். பொய் மிக இழிவுள்ளது. ஒரு பொய் சொன்னவன், அதைப் தாபிக்கப்புகின், ஒன்பது பொய் சொல்லல் வேண்டும். 'நான் சொன்ன பொய்யைப் பொறுத்துக் கொள்ளல் வேண்டும்' என்பானாயின், ஒன்றுடனொழியும். பொய் சொல்லத் துணிகின்றவன் களவு முதலிய தீமைகளைச் செய்தற்கு அஞ்சான். பொய் சொல்லலாகிய பாவமொன்றை ஒழிப்பின், அதுவே வழியாக மற்றைப் பாவங்களெல்லாம் தாமே ஒழிந்துவிடும். பொய்யன் மெய்யைச் சொல்லுகிற பொழுதும் பிறர் அதனை நம்பார். ஆதலால், விளையாட்டுக்காயினும் பொய் சொல்லலாகாது.

மெய் சொல்லுகிறவனுக்கு அதனால் ஒரு கேடு வந்ததாயினும், அவனுள்ளத்திலே மகிழ்ச்சி உண்டாகும். அவன் பகைவர்களும் அவனை நன்கு மதிப்பர்கள். பிறராலே நன்கு மதிக்கப்படவும் தன்காரியம் சித்திபெறவும் விரும்புகின்றவன் எப்பொழுதும் தன்மானத்தோடு பொருந்த மெய்யே பேசல் வேண்டும். ஒருவன் தன் மனம் அறிந்ததொன்றைப் பிறர் அறிந்திலர் என்று பொய் சொல்லாதிருக்கக்கடவன். பொய் சொன்னானாயின், அவன் மனமே அப்பாவத்துக்குச் சாக்ஷியாய் நின்று அவனைச் சுடும்.

உண்மை சொல்பவன் இம்மையிற் பொருளையும் மறுமையிற் புண்ணிய லோகத்தையும் அடைவன். சத்தியமே, மேலாகிய தானமும் தவமும் தருமமுமாம். எவனுடைய புத்தி சத்தியத்தில் நிற்குமோ அவன் இகத்திலே தெய்வத் தன்மையை அடைவன். சத்தியத்தின் மிக்க தருமமும் அசத்தியத்தின் மிக்க பாவமும் இல்லை.

பொய்ச்சான்று சொன்னவரும், பொய்வழக்குப் பேசின வரும், வழக்கிலே நடுவுநிலைமையின் வழுவித் தீர்ப்புச் செய்தவரும், ஏழுபிறப்பில் ஈட்டிய எல்லாப் புண்ணியங்களையும் கெடுத்தவராவர். பிரமவதையும் சிசுவதையும் தந்தைவதையும் செய்தவராவர். மிகக் கொடிய ரெளரவம் முதலிய நரகங்களை அடைவர். அவரை இயமதூதர்கள் வாயிலே அடித்து, அவருடைய நாக்கையும் அறுத்து, பல துக்கங்களையும் உறுவிப்பார்கள். பின்னும் ஊர்ப்பன்றி, கழுதை, நாய், நீர்க்காக்கை, புழு என்னும் பிறப்புக்களிற் பிறந்து, பின்பு மனிதப் பிறப்பிலே பிறவிக்குருடரும், செவிடரும், குட்டநோயினரும், வாய்ப்புண்ணினரும், ஊமைகளுமாய்ப் பிறப்பர். மிக்க பசிதாகமுடையவராகித் தம் பகைவர் வீட்டிலே தம் மனைவியரோடும் பிச்சையிரந்து உழல்வர்.

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

(2) அறிந்திலர் என்று பொய் சொல்லாதிருக்க - அறியவில்லையே என்று கருதிப் பொய் சொல்லுதலைச் செய்யாதிருக்க; 'என்று' என்ற வினையெச்சம் 'சொல்லாதிருக்க' என்னும் எதிர்மறை வினையுட் சொல்லுதல் என்னும் பகுதியோடு முடிந்தது. சுடும் - வருந்தும்.

(3) இகத்திலே - இவ்வுலகத்திலே.

(4) பொய்ச்சான்று - பொய்ச்சாட்சி; வழுவி - தவறி; பிரமவதை - பிராமணரைக் கொல்லுங் கொலை; சிசுவதை - குழந்தையைக் கொல்லுதல். (வதை - கொலை).

ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.