Saturday, February 25, 2006

நான்காம் பால பாடம் - அருள்

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
அருள்

ருளாவது இவை தொடர்புடையவை என்றும் இவை தொடர்பில்லாதவை என்றும் நோக்காது இயல்பாகவே எல்லாவுயிர்கள் மேலுஞ் செல்வதாகிய கருணை, அருளெனினும், கருணையெனினும், இரக்கமெனினும் பொருந்தும். உலகவின்பத்துக்குக் காரணம் பொருளே யாதல் போலத் தருமத்துக்குக் காரணம் அருளேயாம். அருளென்னும் குணம் யாவரிடத்திருக்குமோ, அவரிடத்தே பழி பாவங்களெல்லாம் சிறிதும் அணுகாது நீங்கிவிடும். வாய்மையாகிய தகழியிலே பொறுமையாகிய திரியை இட்டு தவமாகிய நெய்யை நிறையப் பெய்து, அருளாகிய விளக்கை ஏற்றினால், அஞ்ஞானமாகிய பேரிருள் ஓட்டெடுப்ப, பதியாகிய மெய்ப்பொருள் வெளிப்படும். மரணபரியந்தம் தன்னுயிரை வருந்திப் பாதுகாத்தல் போலப் பிறவுயிர்களையும் வருந்திப் பாதுகாப்பவன் யாவன், அவனே உயிர்களுக்கெல்லாம் இதஞ்செய்பவனாகி, தான் எந்நாளும் இன்பமே வடிவமாக இருப்பன்.

உயிர்களெல்லாம் கடவுளுக்குத் திருமேனிகள்; அவ்வுயிர்களுக்கு நிலைக்களமாகிய உடம்புகளெல்லாம் கடவுளுக்கு ஆலயங்கள். ஆதலால் கடவுளிடத்து மெய்யன்புடையவர்கள் அக்கடவுளோடு உயிர்களுக்கு உளதாகிய தொடர்பு பற்றி அவ்வுயிர்களிடத்தும் அன்புடையவர்களேயாவர்கள். உயிர்களிடத்து அன்பில்லாத பொழுது கடவுளிடத்து அன்புடையவர்கள் போல் ஒழுகுதல் நாடகமாத்திரையேயன்றி உண்மையன்றென்பது தெள்ளிதின் துணியப்படும். பிறவுயிர்களிடத்து இரக்கமில்லாதவர் தம்முயிருக்கு உறுதி செய்து கொள்ளமாட்டார். ஆதலால், அவர் பிறவுயிர்களிடத்து மாத்திரமா தம்முயிரிடத்தும் இரக்கமில்லாதவரே யாவர். அவர் தமக்குத்தாமே வஞ்சகர்.

ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.

Thursday, February 16, 2006

நான்காம் பாலபாடம் - கடவுள் வழிபாடு


ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
கடவுள் வழிபாடு

ருணாநிதியாகிய கடவுள், புறத்திலே திருக்கோயிலுள்ளிருக்கும் இலிங்கம் முதலிய திருமேனியும், தமது மெய்யடியாருடைய திருவேடமும் ஆதாரமாகக் கொண்டு நின்றும், அகத்திலே உயிர் இடமாகக் கொண்டு நின்றும், இங்குள்ளவர் செய்யும் வழிபாட்டைக் கொண்டருளுவர். ஆதலால், அவரை வழிபடும் இடங்கள் இவைகளேயாம்.

கடவுள் அங்கிங்கெளாதபடி எங்கும் வியாபகமாய் நிற்பினும், இவ்விடங்களில் மாத்திரம் தயிரில் நெய்போல விளங்கி நிற்பர். மற்றையிடங்களெல்லாவற்றினும் பாலில் நெய் போல விளங்காது நிற்பர்.

கடவுளுக்குச் செய்யும் வழிபாடுகளாவன, அவரை மனசினாலே தியானித்தலும், வாக்கினாலே துதித்தலும், கைகளினாலே பூசித்தலும், கால்களினாலே வலம் வருதலும், தலையினாலே வணங்குதலும், செவிகளினாலே அவருடைய புகழைக் கேட்டலும், கண்களினாலே அவருடைய திருமேனியைத் தரிசித்தலுமாம்.

அன்பில்லாத வழிபாடு உயிரில்லாத உடம்பு போலும். அன்பாவது தன்னால் விரும்பப்பட்டவரிடத்தே தோன்றும் உள்ள நெகிழ்ச்சி. கடவுளிடத்தே அன்புடைமைக்கு அடையாளங்களாவன: அவருடைய உண்மையை நினைக்குந் தோறும் கேட்குந்தோறும் காணுந்தோறும் தன்வசமழிதலும், மயிர்க்கால்தோறுந் திவலை உண்டாகப் புளகங்கொள்ளலும், ஆனந்த அருவி பொழிதலும், விம்மலும், நாத் தழுதழுத்தலும், உரைதடுமாறலும், அவரால் விரும்பப்படுபவைகளைச் செய்தலும், வெறுக்கப்படுபவைகளைச் செய்யாதொழிதலும், அவருடைய மெய்யடியார்களைக் காணும் பொழுது கூசாது வணங்குதலும், பிறவுமாம்.

கடவுளால் விரும்பப் படுபவைகளாவன இரக்கம், வாய்மை, பொறை, அடக்கம், கொடை, தாய், தந்தை முதலிய பெரியோரை வழிபடுதல் முதலிய நன்மைகளாம். கடவுளால் வெறுக்கப்படுபவைகளாவன கொலை, புலால் உணல், களவு, கள்ளுணல், வியபிசாரம், பொய், செய்ந்நன்றி மறத்தல் முதலிய தீமைகளாம்.

ஆன்மாக்களாகிய நாம், பிறர்வயமுடையவர்களும், சிற்றறிவு சிறுதொழிலுடையவர்களுமாய், இருத்தலினாலே, நன்மை தீமைகளை உள்ளபடி அறியவும், தீமைகளை ஒழித்து நன்மைகளையே செய்யவும் வல்லே மல்லேம். ஆதலால், தம்வயமுடையவரும் முற்றறிவு உடையவரும் ஆகிய கடவுளை வணங்கி, அவருடைய திருவருள் வசப்பட்டு ஒழுகுவோமேயானால், நாம் தீமைகளினின்று நீங்கி நன்மைகளைச் செய்து தம்மை வழிபட்டு உய்யும்படி அவர் நமக்கு அருள் செய்வார்.

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

1. மெய்யடியார் - உண்மையான சிவனடியார். திருவேடம் - விபூதி, உருத்திராக்ஷம் முதலிய சிவ சின்னங்களணிந்த வடிவம். அகத்திலே - உடம்பினுள்ளே.

4. உண்மையை - இயல்பாக உள்ள பெருங்கருணைச் செயல்களை. திவலை - நீர்த்துளி, ஆனந்த அருவி - ஆனந்தக்கண்ணீர். (அருவி உவமை யாகுபெயர்). கூசாது - வெட்கப்படாமல்.

5. வாய்மை - உண்மை பேசல். அடக்கம் - மன மொழி மெய்கள் தீயவழியிற் செல்லாது அடங்குதல்.

6. முற்றறிவு - எல்லாவற்றையும் அறியும் அறிவு. முற்றுத் தொழில் - எல்லாவற்றையும் செய்யும் வல்லமை. திருவருள் வசப்பட்டு ஒழுகல் - அநுக்கிரகத்தின் துணையை வேண்டி (தற்போதமின்றி) நடத்தல். அருள் செய்வார் - இரங்கி நன்மை செய்வார்.

ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.

Wednesday, February 15, 2006

நான்காம் பாலபாடம் - ஆன்மா

ஆறுமுக நாவலரின் பாலபாடம்
நான்காம் புத்தகம்
ஆன்மா


ன்மாக்கள் நித்தியமாய், வியாபகமாய், சேதனமாய், பாசத் தடையுடையவைகளாய், சரீரந்தோறும் வெவ்வேறாய் வினைகளைச் செய்து வினைப் பயன்களை அனுபவிப்பவைகளாய், சிற்றறிவும் சிறுதொழிலும் உடையவைகளாய், தங்களுக்கு ஒரு தலைவனை உடையவைகளாய் இருக்கும்.

ஆன்மாக்கள் நல்வினை தீவினையென்னும் இருவினைக்கு ஈடாக, நால்வகைத் தோற்றத்தையும், எழுவகைப் பிறப்பையும், எண்பத்துநான்கு நூறாயிர யோனி பேதத்தையும் உடையவைகளாய் பிறந்திருந் துழலும்.

நால்வகைத் தோற்றங்களாவன: அண்டசம், சுவேதசம், உற்பிச்சம், சராயுசம் என்பவைகளாம். அவைகளுள் அண்டசம் முட்டையில் தோன்றுவன. சுவேதசம் வேர்வையில் தோன்றுவன. உற்பிச்சம் வித்து வேர் கிழங்கு முதலியவைகளை மேற்பிளந்து தோன்றுவன. சராயுசம் கருப்பையில் தோன்றுவன. எழுவகைப் பிறப்புக்களாவன: தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்பவைகளாம். தாவரங்களென்றது மரம் செடி முதலியவைகளை.

கருப்பையிலே தேவர்களும், மனிதர்களும், நாற்கால் விலங்குகளும் பிறக்கும். முட்டையிலே பறவைகளும், ஊர்வனவும், நீர்வாழ்வனவும் பிறக்கும். வேர்வையிலே கிருமி, கீடம், பேன் முதலிய சில ஊர்வனவும், விட்டில் முதலிய சில பறவைகளும் பிறக்கும். வித்தினும் வேர் கொம்பு கொடி கிழங்குகளினும் தாவரங்கள் பிறக்கும். தாவரமென்றாலும், நிலையியற் பொருளென்றாலும், அசர மென்றாலும் பொருந்தும். தாவரமல்லாத மற்றை ஆறு வகைகளும் சங்கமங்களாம். சங்கமமென்றாலும், இயங்கியற் பொருளென்றாலும், சரமென்றாலும் பொருந்தும்.

தேவர்கள் பதினொரு நூறாயிர யோனிபேதம், மனிதர்கள் ஒன்பது நூறாயிர யோனிபேதம். நாற்கால்விலங்கு பத்து நூறாயிரயோனிபேதம். பறவை பத்து நூறாயிர யோனிபேதம். நீர்வாழ்வன பத்து நூறாயிர யோனிபேதம். ஊர்வன பதினைந்து நூறாயிர யோனிபேதம். தாவரம் பத்தொன்பது நூறாயிர யோனிபேதம். ஆகத்தொகை எண்பத்து நான்கு நூறாயிர யோனிபேதம்.

ஆன்மாக்கள், தாம் எடுத்த சரீரத்துக்கு ஏற்ப, மெய், நாக்கு, மூக்கு, கண், செவி என்னும் ஐம்பொறிகளினாலும், சித்தத்தினாலும் அறியும் அறிவின் வகையினாலே, ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நாலறிவுயிர், ஐயறிவுயிர், ஆறறிவுயிர் என அறுவகைப்படும். புல்லும் மரமும் முதலியவை பரிசத்தை அறியும் ஓரறிவுயிர்கள். இப்பியும் சங்கும் முதலியவை அதனோடு இரத(ச)த்தையும்(சுவை) அறியும் ஈரறிவுயிர்கள். கறையானும் எறும்பும் முதலியவை அவ்விரண்டினோடு கந்தத்தையும் அறியும் மூவறிவுயிர்கள். தும்பியும் வண்டும் முதலியவை அம்மூன்றினோடு உருவத்தையும் அறியும் நாலறிவுயிர்கள். விலங்கும் பறவையும் அந்நான்கனோடு சத்தத்தையும் அறியும் ஐயறிவுயிர்கள். தேவர்களும் மனிதர்களும் அவ்வைந்தனோடு சித்தத்தாலறியும் அறிவுமுடைய ஆறறிவுயிர்கள்.

ஆன்மாக்கள், தாம் பூமியிலே செய்த நல்வினை தீவினை யென்னும் இருவகை வினைகளுள்ளும், நல்வினையின் பயனாகிய இன்பத்தைச் சுவர்க்கத்திலும், தீவினையின் பயனாகிய துன்பத்தை நரகத்திலும், அநுபவிக்கும். அப்படி அநுபவித்துத் தொலைத்துத் தொலையாமல் எஞ்சிநின்ற இரு வினைகளினாலே திரும்பவும் பூமியில் வந்து பிறந்து, அவைகளின் பயன்களாகிய இன்பதுன்ப மிரண்டையும் அநுபவிக்கும். இப்படியே, தமக்கு ஒரு நிலைமை இல்லாத கொள்ளிவட்டமும் காற்றாடியும் போல, கடவுளுடைய ஆஞ்ஞையினாலே, கருமத்துக்கு ஈடாக, மேலே உள்ள சுவர்க்கத்திலும், கீழே உள்ள நரகத்திலும், நடுவே உள்ள பூமியிலும் சுழன்று திரியும்.

இப்படிப் பிறந்திறந்துழலும் ஆன்மாக்கள் தாவர யோனி முதலிய கீழுள்ள யோனிகளெலாவற்றினும் பிறந்து பிறந்திளைத்து, புண்ணிய மேலீட்டினாலே மனிதப் பிறப்பிலே வருதல் மிகுந்த அருமையாம். அவ்வருமை, ஆராயுங்காலத்து, கடலைக் கையினாலே நீந்திக் கரையேறுதல் போலும். இத்தன்மையையுடைய மனிதப் பிறப்பை எடுப்பினும், வேதாகமங்கள் வழங்காத மிலேச்ச தேசத்தை விட்டு அவை வழங்கும் புண்ணிய தேசத்திலே பிறப்பது மிகுந்த புண்ணியம்.

இவ்வருமையாகிய மனிதப் பிறப்பை உண்டாக்கியது உயிர்க்குயிராகிய கடவுளை மனம் வாக்குக் காயங்களினாலே வழிபட்டு அழிவில்லாத முத்தியின்பத்தைப் பெற்று உய்வும் பொருட்டேயாம். சரீரம் கருப்பையில் அழியினும் அழியும். பத்துமாதத்திற் பிறந்தவுடனே அழியினும் அழியும். பிறந்த பின் சிலகாலம் வளர்ந்து அழியினும் அழியும். மூன்று வயசுக்குமேற் பதினாறு வயசு வரையிலுள்ள பாலாவத்தையில் அழியினும் அழியும். அதற்கு மேல் நாற்பது வயசு வரையிலுள்ள தருணாவத்தையின் அழியினும் அழியும். அதற்கு மேற்பட்ட விருத்தாவத்தையின் அழியினும் அழியும். எப்படியும் இந்தச் சரீரம் நிலையின்றி அழிவது உண்மையாம். அழியுங் காலமோ தெரியாதே. இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ, யாது வருமோ, அதுவும் தெரியாதே. ஆதலால் இந்த சரீரம் உள்ளபொழுதே இதனது நிலையாமையை அறிந்து பெருங்கருணைக் கடலாகிய கடவுளை வழிபட்டு உய்ய வேண்டும்.

குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

1. சேதனம்-அறிவுடைய பொருள். பாசத்தடை-ஆணவம் முதலிய மலங்களாகிய தடை; அவை கடவுளை அற்தற்கும், மோட்ச இன்பத்தை அடைதற்கும் தடையாமென்றறிக. ஒரு தலைவன் என்றது முழு முதற் கடவுளை.

2. ஈடாக-இருவினையின் அளவுக்குத் தக்க பயனாக. தோற்றம்-உடல் கொண்டு தோன்றும் (பிறக்கும்) விதம்; உருக்கொண்டு ஜனிக்கும் விதம். யோனி பேதம்-(உடலினுருவ அமைப்புத் தோற்றத்தின் பாகுபாடுகளாகிய) பிறவியின் பேதங்கள், நூறாயிரம்-இலக்ஷம். உழலும்-சுழன்று திரியும், மாறி மாறி வரும்.

3. அண்டசம் முதலியவை அண்டஜம், ஸ்வேதஜம், உத்பித்ஜம், ஸராயுஜம் என்ற வடசொற்களின் திரிவு; அண்டஜம்: அண்டம்-முட்டையிலிருந்து; ஜம்-பிறப்பது. ஸ்வேதஜம்: ஸ்வேதம்-வேர்வையிலிருந்து; ஜம்-பிறப்பது. உத்பித்ஜம்: உத்+பித்+ஜம்= (வித்து முதலியவற்றை) மேலிடத்தில் + பிளந்துகொண்டு + பிறப்பது. ஸராயுஜம்: சராயு - கருப்பையிலிருந்து பிறப்பது. தாவரம்-ஒரே இடத்தில் நிலையாய் நிற்பவை, சஞ்சரியாதவை; ஸ்தாவரம் என்னும் வடசொல்லின் திரிவு.

4. கிருமி - அணுப் பரிமாண ரூபமுடைய ஜந்து. கீடம்-புழு. நிலையியற் பொருள் - (இடம் விட்டுப் பெயராது) நிற்றலை இயல்பாகவுடைய பொருள். அசரம் (அ+சரம்) சஞ்சரியாதது; (அ-இன்மை அல்லது மறுதலைப் பொருளில் வரும் வடமொழி இடைச்சொல்; சரம்-சஞ்சரிப்பது) இயங்கியற் பொருள் - இயங்குகின்ற இயல்பினையுடைய பொருள்.

6. இரதம் - சுவை; கந்தம் - மணம், நாற்றம். சித்தத்தாலறியும் அறிவு - அனுமானித்துச் சிந்தனா சக்தியால் உணரும் உணர்வு.

7. சுவர்க்கம் - தேவருலகம். நரகம் - நரகர் வாழும் உலகம். எஞ்சிநின்ற - மிச்சமாயுள்ள. ஒரு நிலைமை - ஓரிடத்தில் நிற்குந்தன்மை, ஒரே நிலையான தன்மை. கொள்ளி வட்டம் - வட்டமாகச் சுழற்றப்படும் நெருப்புக் கொள்ளி. ஆஞ்ஞை - கட்டளை, உத்தரவு. கருமம் - நல்வினை தீவினைகள்.

8. அருமை - எளிதல்லாதது. மிலேச்ச தேசம் - மிலேச்சர் வாழும் பிரதேசம் (இடம்); மிலேச்சர் - வேத சிவாகமங்களிலே கூறப்பட்டுள்ள முறைகளுக்கு மாறாக நடப்பவர்; அவர்கள் ஒருங்கு சேர்ந்து வாழும் பிரதேசம் மிலேச்ச தேசம்.

9. உயிர்க்கு உயிராகிய - சீவான்மாக்களுக்கெல்லாம் உயிர் போன்ரவராகிய; சீவான்மாக்களின் அறிவு இச்சை தொழில்களை இயக்குகின்றனவர் என்ரபடி. வாக்கு - மொழி; காயம் - சரீரம், வழிபட்டு - மனத்தால் தியானித்து, வாக்கால் துதித்து, காயத்தினாற் பூசை நமஸ்காரம்முதலியவற்றைச் செய்து என்றபடி. முத்தியின்பம் - மோக்ஷ இன்பம். பாலாவத்தை - (பால+அவத்தை) பால்யப் பருவம்; இது கௌமாரப் பருவம் எனவும்படும். தருணாவத்தை - (தருண+அவத்தை) யௌவனப் பருவம். விருதாவத்தை - (விருத்த + அவத்தை) முதுமைப் பருவம். உண்மையாமே உண்மையாகுமே. யாது வருமோ - என்ன நிலைமை சம்பவிக்குமோ, இன்பம் வருமோ துன்பம் வருமோ என்றபடி. நிலையாமை - நிலைத்திராத தன்மை, அழியுந்தன்மை. பெருங்கருணைக் கடல் - கடல் போல் மிகுந்த அருள் நிறைந்தவர்.

ஆறுமுகநாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்.

Tuesday, February 14, 2006

நான்காம் பாலபாடம் - கடவுள்

ஆறுமுக நாவலர் பாலபாடம்
நான்காம் புத்தகம்
கடவுள்


லகமாவது சித்தும் அசித்துமென இருவகைப்படும் பிரபஞ்சமாம். சித்து அறிவுடைய பொருள். அசித்து அறிவில்லாத பொருள். அசித்தொன்றாலும், சடமொன்றாலும், பொருந்தும். உலகம் தோன்றி நின்று அழியுங் காரியமாய் உள்ளது. ஆதலினால், உலகத்தைப் படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று தொழில்களையுஞ் செய்தற்கு ஒரு கடவுள் இருக்கின்றார் என்பது, நன்றாக நிச்சயிக்கப்படும்.

கடவுள் என்றும் உள்ளவர், அவருக்குப் பிறப்பும் இறப்பும் இல்லை. அவர் எங்கும் நிறைந்தவர், அவர் இல்லாத இடம் இல்லை. அவர் எல்லாம் அறிபவர், அவர் அறியாதது ஒன்றுமில்லை. அவருடைய அறிவு இயற்கையறிவு, ஒருவர் அறிவிக்க அறிபவரல்லர். அவர் எல்லாம் வல்லவர், அவரால் இயலாத கருமம் ஒன்றுமில்லை. அவர் அளவிடப்படாத ஆனந்த முடையவர், தம்முடைய அநுபவத்தின் பொருட்டு வேறொன்றையும் வேண்டுபவரல்லர். அவர் தம் வயமுடையவர், பிறர் வயமுடையவரல்லர். அவர் உயர்வும் ஒப்பும் இல்லாதவர்; அவரின் மேலானவரும் இல்லை; அவருக்குச் சமமானவரும் இல்லை. அவர் சகலலோகத்துக்கும் ஒரே நாயகர். அவர் செய்யுந் தொழில்களுள் ஒன்றாயினும் அவருடைய பிரயோசனத்தைக் குறித்த தன்று. எல்லாம் ஆன்மாக்களுடைய பிரயோசனத்தைக் குறித்தவைகள். அவர் ஆன்மாக்களிடத்துள்ள கைமாறில்லாத அளவுகடந்த திருவருளே திருமேனியாக உடையவர்.

கடவுள் ஆன்மாக்கள் பொருட்டு வேதம் ஆகமம் என்னும் முதனூல்களை அருளிச் செய்தார். அவைகளிலே விதிக்கப் பட்டவைகளெல்லாம் புண்ணியங்கள். விலக்கப்பட்டவைகளெல்லாம் பாவங்கள். அவர் புண்ணியத்தைச் செய்த ஆன்மாக்களுக்கு இன்பத்தையும், பாவத்தைச் செய்த ஆன்மாக்களுக்குத் துன்பத்தையும் கொடுப்பார். துன்பத்தைக் கொடுத்தலினால் அவரை வன்கண்ணரென்று கொள்ளலாகாது. தீமை செய்த பிள்ளைகளைப் பிதா மாதாக்கள் தண்டித்தலும், சில வியாதியாளர்களுக்கு வைத்தியர்கள் சத்திரமிட்டறுத்தலும், இருப்புக்கோல் காய்ச்சிச் சுடுதலும், கண்ணிற் படலத்தை உரித்தலும் அவர்களிடத்துள்ள இரக்கத்தினாலன்றி வன்கண்மை யினாவல்லவே. அது போலக் கடவுள் பாவஞ் செய்த ஆன்மாக்களைத் தண்டித்தல், அப்பாவத்தை ஒழித்து மேலே பாவஞ் செய்யாவண்ணம் தடுத்து அவர்களை நல்லவழியிலே செலுத்தி உய்வித்தற்கு ஏதுவாதலினால், அதுவும் கருணையேயாம்.


குறிப்புரை: [இங்கு வரும் எண்கள் பாடப்பந்தி(paragraph) எண்கள்]

1. சித்து, அசித்து, சடம்: இவை வட சொற்கள்; ஜடம் என்பது சடம் எனத் திரிந்தது. சித்துப் பொருள்கள்: உயிர்கள். அசித்துப் பொருள்கள்: தனு கரண புவன போகங்கள். தனு-உடல். கரணம்-மனமும் ஐம்பொறிகளும் முதலாயின. புவனம்-ஆதாரமாகிய மண்ணுலகம் முதலாயின. போகம்-அநுபவப் பொருள்கள். முதலாம் பந்தியின் இறுதி வாக்கியங்களின் கருத்து: 'கடவுள் ஒருவர் இருக்கின்றார் என்பது கண் முதலிய புறவிந்திரியங்களால் அறியப்பட்டாலும், அனுமானப் பிரமாணத்தால் நிச்சயிக்கப்படும்' என்றபடி.

2. இயற்கையறிவு-செயற்கையாலன்றித் தாமாகவே அறியும் அறிவு. தம்வயம்-சுதந்திரம், தம்மிச்சைப்படி நடக்குந்தன்மை. பிறர்வயம்-பரதந்திரம், பிறர் எண்ணப்படி நடக்குந்தன்மை. சகல லோகம்-எல்லா வுலகம். நாயகர்-தலைவர். ஆன்மாக்கள்-உயிர்கள்; ஆத்மா என்னும் வட சொல் ஆன்மா எனத் திரிந்தது. கைம்மாறு-பதிலுதவி; கை-செயல்; மாறு-பதில்; பதிலான செயல் என்றபடி. திரு + அருள் = திருவருள்: கருணை என்று பொருள். திருமேனி-திரு-கடவுளுடைய உருவம் உறுப்பு முதலியவற்றிற்கும் அவருடைய தொடர்புடைய கோயில் குளம் முதலிய பிறபொருள்களுக்கும் உயர்வைக் குறித்து வழங்கும் அடைமொழி; திருவுருவம் (விக்கிரகம்), திருவடி, திருக்கோயில், திருக்குளம் என்பவற்றிற் போல, மேனி-உருவம், சரீரம். இப்பந்தியில் உடன்பாடும் எதிர் மறையுமா யமைந்த இணை வாக்கியங்களுக்கு பின்னவை முன்னவற்றை இனிது விளக்குதற் பொருட்டு (ஸ்பஷ்டார்த்தம்) வந்தவை என்றறிக.

3. முதல் + நூல் = முதனூல்; முதலிற் செய்யப்பட்ட நூல், ஒன்றன் வழித்தாகச் செய்யப்படாத நூல். அருளிச் செய்தார்- இயற்றினார், உபதேசித்தார், சொன்னார்; (ஈண்டு உயர்வுபற்றி ஒரு வினையை மற்றொரு வினையின் வாசகத்தாற் கூறிய இலக்கணச் சொல்). விதிக்கப்பட்டவை - செய்யதக்கன என்று கூறப்பட்டவை, விலக்கப்பட்டவை - செய்யத்தகாதவை என்று என்று கூறப்பட்டவை. வன்கண்ணர்-இரக்கமில்லாதவர்; (வன்கண்மை: பகுதி). சத்திரமிட்டு அறுத்தல்-கட்டி முதலிய நோய்களுக்குக் கத்தி முதலிய கருவி கொண்டு கீறி வைத்தியஞ் செய்தல். அண்டவாதம், வலி முதலிய நோய்களுக்கு இரும்புக்கோல் காய்ச்சிச் சூடு போடுவதுண்டு. கண்ணிற் படலம்- கருவிழியின் மேற் படர்ந்திருக்கும் ஒருவகைச் சவ்வு. உரித்தல்-கருவிகளால் வெட்டி நீக்குதல். உய்வித்தல்-நன்மை அடைவித்தல், மேல் நிலையை அடைவித்தல். ஏது-காரணம்; ஹேது என்னும் வட சொல்லின் திரிவு. இப்பந்தியின் இறுதிப் பகுதியில் வந்துள்ள 'உவமையணி' அறிந்து மகிழ்தற்குரியது.

ஆறுமுக நாவலர் பற்றி அறிய இங்கே சொடுக்குங்கள்